பக்கம் எண் :

66.மீரா கவிதைகள்

மறைமலையும் பசுமலையும் மீண்டும் இந்த
மண்ணிலொரு முறைதோன்ற வேண்டும்! தூய
இறைநிலையை இயற்கையிலே காட்டி, முத்து
எண்ணங்கள் சிந்தனைகள் நல்கிச் சென்ற
நிறைமதியாம் திரு.வி.க. மீண்டும் இங்கே
நிச்சயமாய்த் தோன்றத்தான் வேண்டும்! தீய
குறைமதியோர் மொழிக்கலப்பைக் கண்டே உள்ளம்
கொதித்தெழுந்த மாற்கலைஞன் பிறக்க வேண்டும்!

எட்டடுக்கு மாளிகையில் வாழ்ந் திருத்தல்,
இராப்பொழுதில் பஞ்சணையில் படுத்தி ருத்தல்,
பட்டுடுத்தல், சுவையான உணவை உண்டே
பசியாறி அமர்ந்திருத்தல், காதற் பெண்ணைத்
தொட்டணைத்தல் எல்லாமே உடலுக் கின்பம்;
தொல்தமிழ்தான் உயிர்க்கின்பம்! தமிழின் வீரக்
கொட்டுமுர சறைவோம்நாம்! விரைவில் வெற்றிக்
கொடிபறக்கச் செய்வோம்நாம்!ஏற்றம் காண்போம்!

அழகப்பர் கல்லூரி மலர்