பக்கம் எண் :

பன்மணித்திரள்

தமிழ் நாட்டில் சினிமா

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப் பியர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்
இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்' என்றுபல நினைத்தேன்.

ஒலியுருவப் படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்
புலிவாழும் காட்டினில் ஆங்கிலப்பெண் ஒருத்தி
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.

உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே.
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமில்லாத காட்சி,அதில் இயற்கை யெழில்கண்டேன்!
கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்தவதாயில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்!
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதம் துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் -- இவைகள் சுதாசாரம்.
இரக்கமுற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் வித்ததினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்
படமெடுத்தா டும்;தமிழர் பங்கமெலாம் போமே!

( 5 )

( 10 )

( 15 )

( 20 )

( 25 )

( 30 )

( 35 )
( 40 )

( 45 )( 50 )
( 55 )

புத்தகசாலை

தனித்தமைந்த வீட்டிற்புத்தகமும் நானும்
   சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
   இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள்
                            உண்டேன்!

மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
   மகாசோதியிற் கலந்து எனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்தகங்கள்
   தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
   மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
   சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்துஉயர் எண்ண மெல்லாம்
   இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
   புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
   சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
   தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
   அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்
   துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக்கொன்று வீதம்
   நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்,
நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
   நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
   குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
   முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
   மரியாதை காட்டி அவர்க்கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
   அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
   நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும்
மாசற்றதொண்டிழைப்பீர்! சமுதாயச்சீர்
   மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!
( 60 )

( 65 )

( 70 )

( 75 )
( 80 )

( 85 )

( 90 )
( 95 )

வாளினை எடடா!

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர;கெடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!( 100 )

( 105 )
( 110 )

( 115 )
( 120 )

( 125 )


வீரத் தமிழன்

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையேலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சகவி பூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!

( 130 )
( 135 )

( 140 )
( 145 )

( 150 )


சைவப்பற்று

இரும்புப் பெட்டியிலே -- இருக்கும்
எண்பது லக்ஷத்தையும்,
கரும்புத் தோட்டத்திலே -- வருஷம்
காணும் கணக்கினையும்,
அருந்துணையாக -- இருக்கும்
ஆயிரம் வேலியையும்
பெருகும் வருமானம் -- கொடுக்கும்
பிறசொத்துக்களையும்,

ஆடை வகைகளையும் -- பசும்பொன்
ஆபரணங்களையும்
மாடு கறந்தவுடன் -- குடங்கள்
வந்து நிறைவதையும்,
நீடு களஞ்சியம்கள் -- விளைந்த
நெல்லில் நிறைவதையும்,
வாடிக்கைக் காரர்தரும் -- கொழுத்த
வட்டித் தொகையினையும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே -- ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் -- சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் -- அணிந்து
கட்டில் அறைநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் -- குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத்தைதனிலே -- மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் -- அருந்திச்
சைவத்தை ஆரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் -- சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் -- கனவில்
நடந்தது கேளீர்.

நித்திரைப் பூமியிலே -- சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் -- சிலசொல்
புகல ஆரம்பித்தார்.
'இத்தனை நாளாகப் -- புவியில்
எனது சைவமதை
நித்த நித்த முயன்றே -- புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.

மடத்தின் ஆஸ்தியெல்லாம் -- பொதுவில்
மக்களுக்கு ஆக்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே -- இனிநீ
சிவபுரி வாழ்க்கை
நடத்துக!' என்றே --சிவனார்
நவின்றுபின் மறைந்தார்.
இடிமுழக்க மென்றே -- தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டதுபோல் -- உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலரை' -- எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் -- பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிளை என்றனுக்கே -- இத்ததி
மரணம் ஏதுக்' கென்றார்.

சொப்பனத்தை நினைத்தார் -- தம்பிரான்
துள்ளிவிழுந்து அழுதார்!
ஒப்பி உழைத்ததில்லை -- சிறிதும்
உடல் அசைந்ததில்லை!
எப்படி நான்பிரிவேன் -- அடடா!
இன்பப் பொருளையெல்லாம்;
தப்பிப் பிழைப்பதுண்டோ -- எனது
சைவம் எனத்துடித்தார்!


( 155 )
( 160 )

( 165 )

( 170 )
( 175 )

( 180 )

( 185 )
( 190 )
( 195 )
( 200 )

( 205 )

( 210 )
( 215 )

எமனை எலி விழுங்கிற்று!

சர்க்காருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
பக்கத்தூரைப் பார்க்க எண்ணி
விடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை!
விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன்
மார்புநோய் வந்து மனதில் நுழைந்தது!

மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்!
குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
என்பெண் டாட்டி என்னை அணுகினாள்.
எதிரில் பந்து மித்திரர் இருந்தார்.
தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
எதிரில் நிமிர்ந்தேன்; எமன்! எமன் ! எமனுரு!!!

இருகோரப்பல்! எரியும் கண்கள்!!
சுவாசமும் கொஞ்சம் சுண்டுவது அறிந்தேன்.
சூடு மில்லை உடம்பைத் தொட்டால்!
கடிகாரத்தின் கருங்கோடு காணேன்;
கண்டது பிழையோ, கருமத்தின் பிழையோ,
ஒன்றும் சரியாய்ப் புரியவில்லை,
என்ற முடிவை ஏற்பாடுசெய்தேன்!
என்கதி என்ன என்று தங்கை
சொன்னதாய் நினைத்தேன் விழிகள் சுழன்றன!
பேசிட நாக்கைப் பெயர்த்தேனில்லை.
பேச்சடங்கிற்றெனப் பெருந்துயர் கொண்டேன்.
இருப்புத் தூண்போல் எமன்கை இருந்ததே!
எட்டின கைகள் என்னுயிர் பிடிக்க!
உலகிடை எனக்குள் ஒட்டுற வென்பதே
ஒழிந்தது! மனைவி ஓயாதழுதாள்!
எமனார் ஏறும் எருமைக்கடாவும்
என்னை நோக்கி எடுத்தடி வைத்தது.
மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
சர்க்கார் வைத்தியர் சடுதியில் வந்து
பக்குவஞ் சொல்லிப் பத்துத் தினங்கள்
விடுமுறை எழுதி மேசைமேல் வைத்து
வெளியிற் சென்றார். விஷயம் உணர்ந்தேன்.

"அண்டையூர் செல்ல அவசியம், மாட்டு
வண்டி கொண்டுவா" என்றேன்! மனைவி
எமனிழுக்கின்றான் என்றாள். அத்ததி
சுண்டெலி ஒன்று துடுக்காய் அம்மி
யண்டையில் மறைந்ததும் அம்மியை நகர்த்தினேன்!
இங்கு வந்த எமனை அந்த
எலிதான் விழுங்கியிருக்கும் என்பதை

மனைவிககு் உரைத்தேன். வாஸ்தவம் என்றாள்!
மாட்டு வண்டி ஓட்டம் பிடித்தது!
முன்னமே லீவுதந்திருந்தால்,
இந்நேரம் ஊர்போய் இருக்கலாமே!( 220 )

( 225 )

( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )

( 255 )

( 260 )


சுதந்திரம்

தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?


( 265 )
( 270 )
( 275 )

உன்னை விற்காதே

தென்னிலங்கை இராவணன் தன்னையும்
தீய னென்னும் துரியனையும் பிறர்
என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்
இன்று நானவர் ஏற்றத்தைப் பாடுவேன்;
இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்
எத்தனை துரியோதனர் வாழினும்
அன்னவர்தமைக் கொல்ல முயன்றிடும்
அந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.

நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்
நீச மன்று; மறக்குல மாட்சியாம்!
தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்
தன்மை யாவது வீரன் முதற்குணம்!
நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை
நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
பஞ்சை யன்று. துரியன் இராவணன்
பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே,

தன்குலத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்
சகம்சிரிக்கப் பிறந்தவி பீஷணன்
நன்மனத்தவன் ராமனைச் சார்ந்ததை
நல்லதென்பது ராமன் முகத்துக்காம்.

இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை
இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்
துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே
துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன்.

பார தத்திருத் தாயெனும் பேச்சிலே
பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்
வீரத் தால்உளமே செய லாயினோர்
விழி யிலாதவர் ஊமைய ராயினும்
கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை!
கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்!
ஓரி போலப் பதுங்கும் படித்தவர்
ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்!

இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்
ஓன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்லுவதால்,
என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே!
அன்பிருந்திடில் நாட்டின் சுகத்திலே
ஆயிரம்கதை ஏன்வளர்க்கின்றனர்?
( 280 )

( 285 )
( 290 )

( 295 )


( 300 )
( 305 )

( 310 )
( 320 )

பத்திரிகை

காரிருள் அகத்தில் நல்ல
   கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
   பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
   உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
   பிறந்த பத்திரிகைப் பெண்ணே

அறஞர்தம் இதய ஓடை
   ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
   செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
   குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
   நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
   களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட்கான
   நினைப்பினிற் சென்று நெஞ்சிற்,
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
   படித்தவர். அவற்றை யெல்லாம்
'கொடும்' என அள்ளி உன்தாள்
   கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
   மாயங்கள், மாநிலத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
   உட்புறம் வெளிப்பு றத்தே.
ஆன நற்கொள்கை, அன்பின்
   அற்புதம் இயற்கைக் கூத்துத்,
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
   தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
   பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்தவற்றை
   அம்பலத்திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
   களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
   நீட்டிய வெறுங்கரத்தே.

ஓவியம் தருவாய்! சிற்பம்
   உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
   கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
   மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
   கொட்டுவாய்க் கோலத் தாளே!

தெரு பெருக் கிடுவோ ருக்கும்
   செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை
இருப்பிற் பத்திரிகை நாளும்
   இருந்திடல் வேண்டும்! மண்ணிற்
கருப்பெற் றுருப்பெற் றிளநடை
   பெற்றுப் பின்னர் ஐந்தேஆண்டு
வரப்பெற்றார், பத்திரிகை நாளும்
   உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்!
( 325 )

( 330 )
( 335 )

( 340 )
( 345 )

( 350 )

( 355 )
( 360 )

( 365 )

( 370 )
( 375 )

யாத்திரை போகும் போது!

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.( 380 )

பூசணிக்காய் மகத்துவம்

மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்குக்கண்டேன்; கறிவண்ணம்
இங்குக்கண்டேன்!
( 385 )