பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 3

தாவி எழு!

மாணவ உலகே! விழிப்புக்கொள்; ஆரிய
ஆணவம் மாய ஆர்த்தெழு வாய்நீ!
உன்இனம் “பொன்னினம்” என்ன, உயர்வுற
இன்னே எழு!உன் திறள்தோள் உயர்த்து!
ஆரப்பன் நாட்டில் ஆரியம் திகழ்வது?
தேரப்பா! ஆரியம் வீழ்த்தியே தீரப்பா!

கலையுளங் கொண்ட காளையே! சூழ்ச்சி
வலையை அறுத்தெறி! இதுவே வாழ்நெறி!
போர்ப்பறை முழக்கு! புயலெனச் சீறு!
புல்லர் அஞ்சஉன் வல்லமை காட்டு!
மார்தட்டு, பகைவர் நிலைகெட்டு வீழ!
சீர்கெட்ட மடமை சிதைவுறச் செய்திடு!

திராவிடம் உற்ற சிறுமையைத் தீய்த்திடு!
தூக்குக் கயிறுனைத் தொட்டிழுத் தாலும்
துளியும் அஞ்சாதே! ஒளியிலா நாட்டில்
ஒளியினைப் பாய்ச்சஉன் உயிரையும் ஈவாய்!
எழுக! இளைஞனே, தமிழ் இனம்
தழைக்க இன்றே தாவி எழுந்திடு! 

‘புதுவாழ்வு’ - 1946