பக்கம் எண் :

எது இசை?

மணக்காதா?

உருவடைய ஒன்றுபட வாழ்வு கொள்ள
  உரிமைபெற இன்பமுற நாளும் நாட்டின்
இருள்கடிய அறிவுபெறப் பெருந்தொண் டாற்றி
  இயங்குமோர் தன்மானக் கழகத் தாயின்
திருவடியின் அருளாகப் பல எண்ணங்கள்
  செயற்படுத்தக் கிடைப்பனவாம்; அவற்றுள் ஒன்றே
தமிழிசையைப் பிறமொழியால் இசைத்தல் வேண்டாம்
  "தமிழிசைபா ராட்டிடுவீர என்பதாகும்.

தமிழ்ப்பயிரில் இந்திஎனும் எருமை மேய்க்கத்
  தவறாக நினைத்தவரும், அவர்செல் வாக்கை
அமுதாக நினைப்பவரும் தமிழி சைக்கோர்
  ஆதரவு தரவந்தார்; எனினும் அன்னார்
தமிழிசையைத் தவறான வழியிற் போக்கித்
  தாங்கரிய பழிதாங்கா திருத்தல் வேண்டும்
தமிழுக்குப் பகையானோர் தமிழிசைக்கோ
  தக்கபேராதரவை நல்குவார்கள்?

சமயவெறி சாதிவெறி மூடச் செய்கை
  தமைவளர்த்தல் தம்நலத்தை வளர்த்தல் என்று நமதருமை நாட்டினிலே இந்நாள் மட்டும்
  நடைமுறையால் காட்டிவரும் கூட்டத் தார்கள்
தமிழிசைப்பாட் டென்பதெலாம் வெறிப்பாட் டாகத்
  தருவதற்கு முயல்வதின்றி வேறென் செய்வார்?
தமிழ்ப்பாடல் மதம்சாதி மூட எண்ணம்
  தரும்பாட்டாய் இருப்பதினும் இலாமை நன்று.

பாடல்பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று!
  பாடலெலாம் கடவுளுக்கென் றிருக்கு மட்டும்
பாடலிலே புதுப்பாங்கும் புதுக்கருத்தும்
  பல்பொருளின் நல்லழகும் உயர்வும், இந்த
நாடுபெறல் முடியாது. தன்னில் ஊறும்
  நல்லூற்றுக் கவிஞர்களும் தோன்ற மாட்டார்
மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்!
  மடையர்களும் இயற்றிடுவார் கடவுள் பாடல்!

இசைப்புலமை உள்ளவரில் பெரும்பாலோர்க்கும்
  இந்நாட்டில் தமிழறியார் எனினும், அன்னார்
கசந்துருகப் பாட்டெழுதிச் சிவனே என்று
  கசிந்துருகி நிற்பாரேல், பொருள் அளிக்க
இசைந்திடவோ பலருள்ளார். எனினும் நாட்டில்
  இனியதமிழ், இழுக்கின்றிச் சுவையும் சொல்லும்
பிசைந்தெழுந்தால் உணர்வுற்றே எழும்நாடென்னும்
  பெற்றியினை அறிவாரிங்கில்லை அன்றோ!

தமிழிசைக்கு மாநாடு கூட்டு கின்றார்;
  தம்சரக்கால் வாணிகம்செய் இசைவல் லாரில்
அமைவுற்ற பெண்டிரும் ஆடவர்கள் தாமும்
  அழைத்தபடி அங்குவந்து கூடு கின்றார்
இமைப்போதும் விட்டுவில காத செல்வர்,
  எழிலடியார். வழக்கம்போல் வருகின்றார்கள்;
தமக்காக என்றெண்ணி ஊரிலுள்ளார்
  தடையின்றி அங்குவந்து நிறைகின்றார்கள்.

அவர்களிலே ஒருவர்மா நாட்டி னுக்கே
  அருந்தலைவர்; திறப்பாளர் ஒருவர்; மற்றும்
அவரிலொரு வரவேற்புத் தலைவர் ஆவார்!
  அத்தனை ஆள் பேச்சினையும் ஆய்ந்து பார்த்தால்,
முதிர்ந்தபொரு ளாளியின்மேல் முடிந்த வாழ்த்தும்
  முழக்குகின்ற புகழ்ச்சியுந்தாம்! பின்போ, பாடல்,
மிதந்தோடி மாநாட்டுச் செல்வாக்காளர்
  மேலெல்லாம் உளமெல்லாம் குளிர்ச்சி செய்யும்.
தமைமறந்த பொருளாளர், நண்பர் அங்குத்
  தமிழிசைக்குத் தாமகிழ்தல் போலே அந்த
அமுதமொழி அழகினிலே சொக்கு வார்கள்
  அப்போதில் அந்தமயில் தெலுங்கிற் பாடும்!
தமிழிசைதான் அடடாவோ என்பார்! மேலும்,
  சமத்கிருதம் பாடிடுவாள் அடுத்தாற்போலே!
தமிழிசைக்கு மாற்றுமையா என்பார்மக்கள்
  தமிழிசைதான் என்பார்கள் மாநாட்டார்கள்!

வாய்ப்பாட்டால் வருமானம் அடைவோர் உள்ளம்
  வருந்தாமல் தீர்மானம் நிறைவே றும்!பின்
சாப்பாடு பெறுமானம் நடக்கும்! மற்றும்
  தக்கபல வெகுமானம், முடிந்த பின்பு,
'காப்பாற்றப் பட்டதின்று தமிழின் மானம்
  கண்டீரோ' என்றுரைத்துத் தியாகையர்சீர்
போய்ப்பாடத், தம்மானம் அடமானத்தால்
  போக்கியவர், அவருக்கும் பணங்கொடுப்பார்.

முழுவெற்றி அடைந்ததுவாம் தமிழிசைதான்!
  முன்பெல்லாம் தமிழ் ஒன்றே பாடினோரும்,
அழலானார் தெலுங்கினிலே வெற்றிக் குப்பின்
  அங்கங்கே தெலுங்கிசைக்குக் கட்டிடங்கள்
எழும்படி ஆனதன்றே, உடலை விற்க
  இணங்குகின்ற பெண்கள்சிலர் தங்க ளின்தாய்
மொழி விற்கத் தயங்குவரோ? பாடகர்கள்
  முழுநாட்டு வான்ஒலியில் தெலுங்கிசைத்தார்!

இசைப்பாட்டுக் குயிலினங்கள் வர, இருக்க,
  ஏனென்றால் 'ஆம்' என்ன இவ்வா றான
பசைப்புள்ள விருப்புக்கும், திரைக்குப் பின்னால்
  பழிச்செயல்கள் புரிவதனை அறிந்தோர் பாடும்
வசைப்பாட்டின் அடைப்புக்கும், வழியைத் தேடி
  மகிழ்வடைதல் அல்லாமல், இந்நாள் மட்டும்
கசப்பான நிலைமையிலே சிறிது மாற்றம்
  கண்டதுண்டோ தமிழிசையின் இயக்கத் தாலே?
நீர்கலந்து பால்விற்பான் தனைஅடைந்து,
  நீர்தவிர்த்துப் பால்விற்கக் கேட்டுக் கொண்டால்,
நீர்கலக்கும் வழக்கத்தை நீக்கிக் கொள்ளான்!
  நீர்கலப்பான் கூட்டுறவை அறவே நீக்கி
ஊர்கலந்து, மக்களிடம் உணர்வெ ழுப்பி.
  உள்ளநிலை மாற்றுவதே நேர்மையாகும்.
நீர்கலந்தான் உடன்கலந்து நிற்பதேனோ!
  நீர்கலந்தா னைச்சார்ந்தார் உறவெதற்கோ!

எந்நாளும் தமிழிசையே பாடுவோர்கள்
  இருக்கின்றார் சிலர், என்றால் அவரை விட்டுப்
பொன்னாகத் தெலுங்கிசைபா டிடுவார் தம்மைப்
  போய் அழைப்பார் தமிழிசையை இயக்கு வோர்கள்!
சொன்னாலும் வாய்நாணும் செய்கை யன்றோ!
  தொட்டதெலாம் மேற்பூச்சு, வஞ்சம், சூழ்ச்சி!
இந்நாடு விழிப்படையாதிருக்க வில்லை;
  இழுத்தஇழுப் புக்குவரும் நிலையில் இல்லை;

தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள்! தமிழே பாடச்
  செய்யுங்கள்! அதற்காகத் திரண்டெழுங்கள்!
இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை
  எனஉரைத்தால், அறையுங்கள்! தமிழமைப்பு
நலமுள்ள இசைக்கொவ்வாதென்பார் வாலை,
  நறுக்குங்கள்! இசைக்கு,மொழி வேண்டாம் என்னும்
விலங்குகளை வளையுங்கள் எனமக்கள்பால்
  விண்டதுண்டோ தமிழிசையின் தலைவர் என்போர்?

பெருமக்கள் நலம்பறிக்கும் தெலுங்குப் பாட்டைப்
  பெருமக்கள் எதிர்க்கும்வகை செய்தல் வேண்டும்!
திருடருண்டு விழித்திருங்கள் பறிகொடாதீர்
  செயல்செய்வீர் என்பதுதான் சரியே யன்றித்
திருடர்களை வீட்டுக்கும் அழைத்துப் பேசித்
  திருடருக்குப் பணம்கொடுத்துக் கூட்டுகின்ற
திருடர்மாநாட்டாலே திருட்டைத் தீர்க்க
  முடியாதே என்றுதான் செப்புகின்றேன்.

பல்லவிகள், கீர்த்தனங்கள், மற்று முள்ள
  பலநுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள்ளாரின்
நல்லுதவி பெற்றுத்தான் தமிழிசைக்கு
  நாம்ஏற்றம் தேடுவது முடியுமென்று
சொல்லுகின்றார் சிலபுலிகள்! அவர்க்கு நானும்
  சொல்லுகின்றேன்; சுண்ணமிடிப்பார்கள் பாடும்
பல்வகைஇலேசான இசைகள் போதும்;
  பாரதியாரேபோதும்; தியாகர் வேண்டாம்!

விரிவான இராகமும்,பல்லவியும், மற்றும்
  வெறும்சரளி யும்;கருவி வல்லவர் பால் இருப்பனவே! பாடகர்கள் என்போ ரெல்லாம்,
  இன்கவிதைத் தமிழ்ப் பழத்தின் தோலுரித்துத்
தரும்திறமை அடைந்தாலே போதும்! ஐயோ
  தமிழ்ப்பாவை இசைப்புலியால் மாய்க்க வேண்டாம்;
நரம்பிழுப்பும், குறைகொள்ளிப் பிணப் பதைப்பும்,
  நாய்க்குரைப்பும், தமிழ்ப்பாட்டை நண்ண வேண்டாம்.

செல்வர்களோ, இன்றுள்ள செய்தித் தாளால்
  சிறப்பவரோ, சுவையுணர்வோர் என்பார் தாமோ,
சொல்லளவே கலத்தஇசைத் துளிகட்கு அன்றித்
  தொழிற்புலமை காட்டுதற்கு முயலுகின்ற
வல்லநடை, மறைவான நிறஅமைப்பின்
  வாய்ப்பு,முழு தும்சுவைத்தல் இல்லை; ஆடித்
தொல்லையுறும் தலை; நகைத்துத் தொலைக்கும் வாய்தான்;
  துடையில்தேள் கொட்டினும் எடார்தம் கையை!

பணக்காரர் மகிழ்ச்சியிலே பொழுது போக்கி,
  பார்ப்பதற்கோ பயன்விளைப்பதாகக் காட்டித்
தணிக்கின்றார் தம்விருப்பம்! அதற்குப் பேர்தான்
  தமிழிசைஎன் றால்அதனை மறுப்பாரில்லை
'மணக்காதா செந்தமிழ்தான் இசையால்' என்று
  வழியன்பால் தொண்டுசெய வந்திட்டாரோ;
அணித்தான தமிழ்ப்புலவர் அருவருக்கும்
  அறிவற்ற செயலென்றால் யார் மறுப்பார்?





( 5 )





( 10 )




( 15 )





( 20 )




( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )




( 65 )




( 70 )





( 75 )




( 80 )




( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )



( 110 )





( 115 )




( 120 )




( 125 )





( 130 )




( 135 )





( 140 )




( 145 )





( 150 )