பக்கம் எண் :

காதல் பாடல்கள்

பாட்டுப் படிக்கத் தெரிந்தால் வா
இல்லாவிட்டாள் போ -- என்றாள்

            பாட்டுப் படியானாம்;
               பத்திலக்கம் உள்ளவனாம்
            வீட்டுப் படியேற
               வேண்டாம் என்றோட்டினாள்;
            வள்ளுவன்ப டித்தேன்என்
               றான்! நீ வழங்கிடு! நான்
   கொள்ளுவன்படித்தேன் என்
               றாள்.

    (பாட்டுப் படித்துச் சுவையாதவன் என்றும் ஆனால் பத்து
இலக்கம் (நூறாயிரம்) சொத்துடையவன் என்றும் கேள்விப்
பட்ட காதலி, அவனை என் விட்டுப் படியேற வேண்டாம்
என்று ஒட்டி விட்டாள். அவன் ஓடிப்போய் திருவள்ளுவர்
செய்த திருக்குறளைப் படித்துத் தெளிந்தேன் என்று திரும்பி
வந்தான். அப்படியானால், நீ கொடு நான் உன்னிடமிருந்து
படித்தேன். ஒரு படித்தேனளவான இன்பத்தைக் கொள்ளுவேன்
என்றாள் காதலி. கொள்வன் -- கொள்ளுவேன். வழங்கிடு -- கொடு, பின்னடியிலுள்ள படித்தேன் -- ஒருபடி அளவுள்ள
தேன்.)
( 1 )( 5 )

( 10 )
( 15 )


திருக்குறள் படித்தான்

மரத்தின் நிழலில் நின்றுகொண்டு
வந்த என்னை நீயும் கண்டு
வானம் பார்க்க என்ன உண்டு நல்ல
பருத்தி புடவை காய்த்ததடி பொன்வண்டு -- நீ
பக்கத்திலே நின்றாயடி கற்கண்டு.

   பார்த்ததில்லை என்கண்ணாலே
   பாரினிலே உன்னைப் போலே
   படித்த தில்லை இதுமுன்னாலே
   ஏத்தி ஏத்தித் தொழுவதும் உன்காலே -- கொஞ்சம்
   இசைந்து வாடி மயிலேஎன் பின்னாலே

வைய கத்தில் ஏன்பி றந்தாய்?
வாழ்க்கை இன்பம் ஏன்து றந்தாய்?
மங்கை கடன் ஏன்ம றந்தாய்?
ஐயையோ அழகி லேநீ சிறந்தாய்! -- எனை
அலைய விட்டால் நீ வீணில் இறந்தாய்!.

   நீ பத்தரை மாற்றுத் தங்கம்
   நிறைபேச்சு மதுரைச் சங்கம்
   நினைத்து நினைத்து வேகும் என்அங்கம்
   ஊர் பழிக்கும் என்மனமும் கசங்கும் -- அடி
   உண்டோ சொல் எனக்கேடி நிகரெங்கும்!

( 20 )
( 25 )

( 30 )

( 35 )இரும்பினும் பொல்லாத நெஞ்சினள்

இழையினும் மெல்லிடையாள்;
     கயற்கண்ணினாள்; ஏற்றிடுசெங்
கழையினும் இன்மொழியாள்
     வள்ளைக் காதினாள், காரிருள்செய்
மழையினும் கன்னங் கருங்
     குழலாள்; என் மனம்நலிந்து
நுழையினும் ஏற்காத நெஞ்சினாள்!
     என்ன நுவலுவதே?

பஞ்சினும் மெல்லடியாள்; பசுந்
     தோகையின் சாயலினாள்;
நஞ்சினும் கொல்லும் விழியுடையாள்;
     ஒரு நன்னிலவின்
பிஞ்சினும் ஒண்மைசேர் நெற்றியி
     னாள்; அவள் பின்நடந்து
கெஞ்சினும் ஏற்காத நெஞ்சினாள்!
     என்ன கிளத்துவதே?

முத்தினும் முல்லை அரும்பினும்
     ஒள்ளிய முரலினாள்;
சொத்தினும் சீரினள்; சோட்டுப்புறாக்
     கூட்டு மார்பகத்தாள்;
வித்தினும் மாணிக்க மேமிகும்
     பொன்வயல் மேனியினை
நத்தினும் ஏற்காத நெஞ்சினாள்!
     என்ன நவிலுவதே?

வேயினும் பொன்னெடுந் தோளுடை
     யாள்; ஒரு வேளையிலே
தேயினும் தேயா முழுநிலாப்
     போன்ற திருமுகத்தாள்;
ஆயினும் ஆய்ந்தாய்ந் தியற்றிய
     பாவை! என் விண்ணப்பமே
ஈயினும் ஏற்காத நெஞ்சினாள்!
     என்ன இயம்புவதே?

கரும்பினும் தித்திக்கும் சொல்லொன்று
     சொல்லிஎன் காதலினை
விரும்பினும் அன்றி விரும்பா
     விடினும் விளக்கிவிட்டால்
துரும்பினும் துப்பிழந்தேன் வாழுவேன்
     அன்றிச் செத்தொழிவேன்
இருப்பினும் பொல்லாத நெஞ்சினாள்!
     என்ன இயம்புவதே?

( 40 )
( 45 )

( 50 )

( 55 )
( 60 )

( 65 )

( 70 )

( 75 )


தலைவி தோழிக்கு

         சகியே தாளேன் நான்
         வாதே -- செய்யொண்ணாது!
         சதா என்நினைவு காதலால்
         மகாசோகம் அடைதல் நன்றோ! (சகி)

         மிகு விரைவினில் நீயே அதி
         சோகம் தவிரத் துரை வரவே
         தோது செய்வாய் உயிர் மீட்பாய்
         இங்கினிப் பொறாது நெஞ்சம் (சகி)
         மாமயிலும் இதோ பார் வண்
         கோகிலமது விரசமாய்ப்
         பாவையெனை மிகுகேலி
         பண்ணுதேடி தாங்கொணாது!
         சகியே தாளேன் நான்

( 80 )

( 85 )
( 90 )
அவள் இல்லை

பழகுதற்குத் தோழருள்ளார்; கிளைஞர் உள்ளார்;
பல்பொருளும் இல்லத்தில் நிறையக் கொண்டாய்;
விழியினிலே ஒளியிழந்த தென்ன' என்று
விளம்பினை நீ உளம்ஒத்த தோழா கேளாய்;
எழுதுகின்றேன் ஓடவில்லை இறகு! கண்கள்
எதிலேயும் பொருந்தவில்லை என் அகத்தை
அழகுசெய்து நாளும்என்பால் அன்பு செய்வாள்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை!

'புகழ்வந்து மலைமலையாய்க் குவிய, வாய்த்த
புதையலைப்போல் வருவாயும் கொட்ட, நீயேன்
இகழ் அடைந்த தமிழரசு போல நெஞ்சம்
இளைக்கின்றாய்' என்கின்றாய் தோழா கேளாய்:
பகற்பனியும் காயவில்லை இரவில் தூக்கம்
பகையாகும்! என்உளமாம் கருங்கல் மேட்டை
அகழ்ந்ததிலே இன்பமென நிறைந் திருந்த
அவள் இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை;

'அடுக்களையில் எழும்புகையே அமுதாய் நாற
அண்டையிலே பணிசெய்வோர் உன்வாய் பார்த்து
நடுக்கமுறும் நிலையுடையாய் நலிவேன்' என்று
நவிலுகின்றாய் தோழனே புகலு கின்றேன்;
கடைக்கேகக் காலினிலே ஓட்ட மில்லை
கண்ணுக்குள் மூடிவைத்துக் காத்திருந்த
அடிச்சிலம்பின் இசையாளைத் தாய் அழைத்தாள்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை;

'தென்றல்வரும் வழியினிலே அமைந்த வீடும்
செந்நெலினைக் குவிக்கின்ற நன்செய் தானும்
என்றைக்கும் உடையாய்நீ என்ன ஏக்கம்' என்றுரைத்தாய் நன்றுரைப்பேன் கேளாய் தோழா.
ஒன்றிலுமே பொருந்தவில்லை என்றன் காதும்
உயிர்போன்ற மங்கையினை அண்டை வந்தே
அன்றழைத்துச் சென்றாள் என் அருகில், வீட்டில்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை!

'புருவம் நெறித்தால் உலகம் பொடியாய்ப் போகும்
போஎன்றால் செங்கதிரும் போக்கில் மாறும்
பெருமறவா ஏன் நலிந்தாய்' எனக்கேட் கின்றாய்
பெறற்கரிய தோழனே இதைக்கேட் பாய்நீ
ஒருநினைவும் ஒருசெயலும் இலாதொழிந்தேன்
உயிர்வாழ் கின்றேன் இதுவும் புதுமையேஆம்!
அருந்துனையை அன்னைவந்து கூட்டிச் சென்றார்!
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை.( 95 )

( 100 )
( 105 )

( 110 )
( 115 )

( 120 )

( 125 )
( 130 )
பழங்குப்பை பஞ்சுமெத்தை

         ஆருமில்லா நேரத்திலே
             'வா' என்றால் வருவதில்லை
         அம்மா இருக்கும் நேரத்திலா
             கும்மாளமா? -- அவள்
         அடியைத் தாங்க என்முதுகு
             பெரிய மேளமா?

         தேரும் இல்லை திருவிழாவும்
             இப்போதில்லை தெருவிலே
         சிவன் கோயில் தானுண்டு
             வரச்சொல்லடி இரவிலே.
         ஆரிருப்பார் ஊஊ ஊஉம்             அவனும் நானும் தாமிருப்போம்
         ஆசைதீரக் கூடலாமே
             அதிகாலையில் பிரியலாமே! (ஆருமில்லா)

         ஆயிரங்கால் மண்டபத்தில்
             போயிருப்பேன் முன்னாடி,
         அழகுதுரை முகத்தை மூடி
             வந்திடட்டும் பின்னாடி,
         பாயும் படுக்கத் தலையணையும்
             இல்லாவிட்டால் என்னாடி?
         பழங்குப்பை எங்களுக்குப்
             பஞ்சுமெத்தை அன்றோடி? (ஆருமில்லா)( 135 )

( 140 )
( 145 )

( 150 )


அக்கா என்பதற்கு

அக்கக்கா என்றது கிளிக்கழுதை!

         கட்டழகி நான் நாளும்
            காத்திருந்தேன்; ஓர் நாள்என்
         கிட்டவந்தான்! இந்தக்
            கிளிக்கழுதை மட்டின்றி
         அக்கக்கா என்றதனால்
            தெக்குவாய்த் தங்கை வந்தாள்;
         எக்கேடோ என்று பறந்
            தான்.

    (கிளிக்கழுதை என்றது கிளியை ஏசியபடி! மட்டின்றி-
அளவில்லாமல்.)
    அரி்தில் வந்த காதலன், அக்கக்கா என்று கிளி கத்தியதால்
தெக்குவாயுடைய தங்கை போலும், அவள் இங்கு வருகின்றாள்
போலும், அதனால் எக்கேடு வருமோ என்று காதலன் பறந்து
போய் விட்டான் என்பது பின் இரண்டடிகளின் கருத்து.)

( 155 )
( 160 )


( 165 )

அவளையா மணப்பேன்?

மேனி யெல்லாம் வெளியில் தெரிய
வெங்காயத்தோல் சேலை கட்டி
மானமெல்லாம் விற்பவளா பெண்டாட்டி? -- அவள்
மாந்தோப்பில் எனை அழைத்தாள் கண்காட்டி!
தேனிருந்தால் அவள் பேச்சில்
சிரிப்பிருந்தால் அவள் உதட்டில்
நான் மயங்கி விடலாமா சொல்லையா? -- அவள்
நடத்தை கெட்டுப் போவாளா இல்லையா?

கமழ்விருந்தால் கூந்தலிலே
கலையிருந்தால் நடையினிலே
அமைவிருக்க வேண்டாமா தென்பாங்கே -- கேள்
ஆர் பொறுப்பார் அவள் கொடுக்கும் அத்தீங்கே?
அமிழ்திருந்தால் கண்களிலே
அழகிருந்தால் முகத்தினிலே
தமிழர்க்குள்ளே மான உணர்ச்சி வேண்டாமா? -- நாம்
தலைகுனிந்து வாழும் நிலை பூண்டோமா?


( 170 )
( 175 )

( 180 )


அவன் எனக்குத்தான்!

எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!
என்னைத்தான் அவன் காதலித்தான்.
தனித்திருக்கையில் புன்னை யடியில்
சாய்ந்திருக்கையில் என்னைக் கண்டவன்
மனத்திலிருந்த தன் காதலை
வாரிக் கண்ணால் நேரில் வைத்தான்.
                எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

மயிலிறகின் அடியினை அவன்
மலருதட்டின் நடுவிற் கண்டேன்!
வியப்பிருந்தது கண்குறிப்பில்
விருப்பமிருந்தது புன்சிரிப்பில்
                எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

எப்படி இருக்கும் செந்தாமரை
அப்படி இருக்கும் செங்கைநிரை
கைப்பட என்னை அணைக்கும்போது
கணமும் பிரிய மனம் வராது.
                எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

இரண்டு தோளும் இரண்டு பொன்மலை
எவள் அடைவாள் இந்தச் செம்மலை?
வருத்தம் இனியும் என்னிடத்திலா?
மனஇருள் கெட வந்தவெண்ணிலா!                - எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

( 185 )
( 190 )

( 195 )

( 200 )

( 205 )
என் அத்தான் எனக்குப் பொன் அத்தான்

எனை,
     மணக்கத்தான் பணத்தைத்தான்
     குவிக்கத்தான் புறப்பட்டான்
     மறப்பானோ தோழிப் பெண்ணே!
                    என் அத்தான் -- மனம்
     மாறமாட்டான் மாற்றுயர்ந்த பொன் அத்தான்!

நல்ல,
     குணத்தில்தான் செயலிற்றான்
     அணைப்பில்தான் மிகுந்திட்டான்
     குற்றமில்லான் தோழிப் பெண்ணே
                    என் அத்தான் -- ஓரு
     கோவைப் பழத்தைக் கிளிவிடுமா தின்னத்தான்?

என்,
     சீரைத்தான் கோரித்தான்
     தேரிற்றான் ஏறித்தான்
     திரும்புகின்றான் தோழிப் பெண்ணே
                    என் அத்தான் -- அவன்
     விரும்புவதும் உலகத்திலே என்னைத்தான்!

என்,
     பேரைத்தான் எண்ணித்தான்
     ஊரைத்தான் நோக்கித்தான்
     பெயர்கின்றான் தோழிப் பெண்ணே
                    என் அத்தான் -- நீ
     துயரத்தில் ஏன் தள்ளிக் கொண்டாய்
     உன்னைத்தான்?( 210 )

( 215 )

( 220 )

( 225 )
( 230 )
லம்பாடி வேண்டாம்

கணவன் : பார்ப்பானைக் கூப்பிடு! பஞ்சாங்கம் பார்த்திடு!
மனைவி  : ஏய்ப்பானைக் கூப்பிடுவே தேதுக்கு? கெட்ட
         கூப்பாடு வேம்புதான் காதுக்கு!

கணவன்  : தாழ்ப்பாள் திறந்திடு! சண்டை மறந்திடு!

மனைவி  : தீர்ப்பாகச் சொல்லிட்டேன் உன்னிடம் -- அந்தப்
         பார்ப்பானைச் சொல்லாதே என்னிடம்.

கணவன  : பெண்எந்த ஊரிலே? கேட்போமே நேரிலே!

மனைவி  : மண்ணாந்தைக் காதெரியும் மட்டியே
         வாராய்இங் கேசிங்கக் குட்டியே!

மனைவி  : கண்ணுண்டு பையனுக்குக் காலுண்டு தேடுதற்கு.

கணவன்  : தொண்ணூறு சாதியடி நாட்டிலே -- அவன்
         தொலைவானே தாழ்ந்தவரின் வீட்டிலே

மனைவி  : எல்லாம் ஒரே சாதி எல்லாம் தழிழ்ச்சாதி,

கணவன்  : இல்லையடி ஊருக்குள்ளே லம்பாடி?
         என் பிள்ளைகைக் காப்புச் செம்பாடி?

மனைவி  : பொல்லாத சாதிஏது? போகாத சாலைஏது?

கணவன்  : கொல்லவந்த பார்ப்பனத்தி கூடுமா?பெட்டைக்
         கோழிவந்து நம்வீட்டில் ஆடுமா?

மனைவி  : நல்லதொரு சாதிதான் நம்தமிழ்ச்சாதிதான்!
கண்வன்  : கொல்லுவது பாப்பாரச் சாதியே -- இங்குக்
         கூறாதே நீ அந்தச் சாதியே.

இருவரும் :  லல்லல்ல லாலலா லல்லல்ல லாலா
          லல்லல்ல லாலலா லாலல்லா -- நமக்
          கெப்போதும் லம்பாடி கூடாது.


( 235 )
( 240 )( 245 )
( 250 )
கலப்பு மணம் வாழ்க

எனக்குப் பகைமேல் உனக்குக் காதலா?
என்று ''மன்று ளா டியார'' இயம்பவே,
புதுப்பூ முத்துநகை புகலு கின்றாள்:
எதற்குநீர் எதைப்புகல் கின்றீர் அப்பா
அவர் உமக்கே அன்றுபோல் இன்றும்
பகையாய் இருப்பதைப் பாவைநான் என்றும்
எதிர்ப்பதே இல்லை. நீங்களும் என்போல்
மாதுநான் அவர்மேல் வைத்த காதலை
எதிர்க்க வேண்டாம்! ஏனெனில் அப்பா
எட்டிய தென்மனம் அந்த இளைஞரை
ஒட்டியது மீட்க ஒண்ணுமோ சொல்லுக.

ஒழுக்கம் உடையவர்; கல்வி யுடையவர்
பழுத்த தமிழன்பு படைத்த மேலோர்;
நான்அவ ராகி விட்டேன்; நான் என
வேறொன் றில்லை, அவரும் வீணாய்த்
தனித்தே இருந்து சாக எண்ணிலர்,
என்று சாற்றினாள்! தந்தை இயம்புவான்:

'நமது சாதி வேறு: நல்லோய்,
அவனது சாதி வேறென் றறிகிலாய்'
என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான்,
மங்கை இனிய வகையில் சொல்லுவாள்;
அப்பா உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்!
காக்கை அல்லர்; கரும்பாம் பல்லர்!

என்று கூறத் தந்தை இயம்புவான்;
மனிதரில் சாதி இல்லையா மகளே?
என்று கேட்க -- மங்கை இயம்புவாள்; 'சாதி சற்றும்என் நினைவில் இல்லை
மாதுநான் தமிழனின் மகளாத லாலே;
என்றாள் செந்தமிழ் இலக்கியப் பைங்கிளி.
தந்தை,
மக்கள் நிகர்எனும் தனது
சொந்த நிலையில் தோய்ந்தே
அந்த வண்ணமே வாழ்கஎன்றானே.
( 255 )
( 260 )

( 265 )

( 270 )

( 275 )

( 280 )
( 285 )

Untitled Document
திருமணம் எனக்கு!

பார்க்காதவன் போலே
பார்த்துப் போனாண்டி--அந்தப்
பாவிஎன் மனத்தினில்
ஆசையைத் தூண்டி (பார்க்காதவன்)

தீர்க்காத வன்போல்தன்
ஆவலைத் தீர்த்தே,
சிரிக்காத வன்போலே
மறைவாய்ச் சிரித்தே! (பார்க்காதவன்)

ஐந்தாறு பேரோ டசைந்தாடிச் சென்றான்,
ஆதலால் தன்எண்ணம் கண்ணால் புகன்றான்.
செந்தாம ரைகாட்ட வந்தால் இருந்தேன்
சீராளன் வாராவிட்டாலோ இறந்தேன். (பார்க்காதவன்)
உள்ளத்தில் உள்ளம் கலந்தபின் அங்கே
உடம்புதான் என்செய்யும் வாராமல் இங்கே?
தெள்ளு தமிழன்தோள் நான் பெற்ற பங்கே
திருமணம் எனக்கென்றே ஊதாயோ சங்கே! (பார்க்காதவன்)
( 290 )

( 295 )


( 300 )

( 305 )
Untitled Document
அவனை அழைத்து வா!

காசுபணம் வேண்டாமடி தோழியே -- அவன்
கட்டழகு போதுமடி தோழியே!
ஆசைவைத்தேன் அவன்மேலே தோழியே -- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!
ஓசைபடா தென்வீட்டில்ஓர் இரவிலே -- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே!
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே -- நான்
இவ்வுலகுக்கு அஞ்சேனடி தோழியே.

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் -- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் -- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!
ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே -- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சிதந்த கண்ணாளன் -- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழியே!

என்பார்வை அவன்பார்வை தோழியே -- அங்கே இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே,
தன்அழகின் தாக்கடைந்த என்வாழ்வில் -- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே
பொன்னான நாளடியே என்தோழி -- ஒருவாய்
பொங்க லுண்டு போகும்படி சொல்வாயே.
இந்நாளும் வாழுகின்றேன் தோழியே -- அவன்
எனைமறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!
( 310 )

( 315 )

( 320 )

( 325 )
Untitled Document
புது நாளில் புது வாழ்வு

பகற்பொழுதிற் பொங்கற்புது
பானை வாங்கி வருகையிலே
நகைத்தபடி என்னை அவன் பார்த்தான் -- நான்
நாணத்தினால் உள்ளமெல்லாம் வேர்த்தேன்!
முகமறியாப் பெண் முகத்தில்
முத்துநகை வந்து மொய்த்தால்
மகளிரெல்லாம் என்ன நினைப்பார்கள்? -- என்
மனநிலையில் ஐயமுங் கொண்டார்கள்.

சேவல் கூவக் -- கீழ்க்கடலில்
செம்பரிதி தோன்ற -- அந்த
நாவற்குள நீரெடுக்கச் சென்றேன் -- அங்கு
நம் திருநாள் இன்றல்லவோ என்றான்.

காவலுண்டு பற்பலபேர்
காணலுண்டு காளையின்மேல்
ஆவலுண்டு காட்டிக் கொள்ளவில்லை -- அவன்
அகம்புகுந்தான் அதுமட்டுந்தான் தொல்லை!

நாட்டிலெங்கும் பொங்கல் வாழ்த்து
நடப்பதெல்லாம் தைத் திருநாள்
வீட்டினில் நான் பொங்கலுண்ணும் வேளை -- அதில்
வெல்லமாய் விளைந்தான் அந்தக் காளை!
தோட்டத்திலோர் ஊஞ்ச லிட்டுத்
தோகையரோ பாடுகையில்
பாட்டினில் ஓர் செந்தமிழும் ஆனான் -- அந்தப்
பண்ணிலெல்லாம் நல்லிசையால் ஆனான்.

ஆடலிலும் பாடலிலும்
அன்னவனே என்நினைவில்
கோடை மழைபோற் குளிரச்செய்தான் -- என்
கொள்கையிலே காதலினைப் பெய்தான்.
ஆடியபின் வீடுவரும்
அவ்விருண்ட தோப்பினிலே
ஓடி வந்தே கட்டிமுத்தம் தந்தான் -- அது
பொங்கல் திருநாள் அளித்த செந்தேன்!
( 330 )( 335 )


( 340 )

( 345 )

( 350 )

( 355 )

( 360 )
சோறல்ல கோவைப்பழம்

அவன்;

வேலை விட்டு வீடு வந்தேன்
மெல்லி உன்னைக் காணவில்லை
சாலையில்இ ருப்பாய் என்று வந்தேனே -- அடி
தங்கமே இதோ உன்னைக் கண்டேனே!

அவள்;

ஆலை விட்டு நீ வரவே
ஐந்துமணி ஆகுமென்றே
ஆலிலை பறிக்க இங்கு வந்தேனே -- என்
அத்தானே உன்னை இங்குக் கண்டேனே!

அவன்;

தாங்க முடியாது பசி
சாப்பாடு போட்டுவிடு
ஏங்கமுடி யாது பெண்ணே என்னாலே -- அடி
என்னாவல் தீர்க்க முடியும் உன்னாலே!

அவள்;

தாங்கமுடி யாதென்றால்
சாலையிலா சாப்பாடு? வாங்கால் இலைப றித்துக் கட்டுக்கட்டி -- வீடு
வந்திடுவேன் பொறுத்திரு என் சக்கரைக்கட்டி.
                      (வாங்கு -- சுழிமுனைக்கத்தி)

அவன்;

கேட்டதுவும் சாப்பாடா?
கொஞ்சுவதும் பாற்சோறா?
காட்டுக்கிளி நான்கேட்டது கோவைப்பழந்தான் -- என்
கண்ணாட்டியே இங்குவாடி உண்ணத்துடித்தேன்!
( 365 )


( 370 )( 375 )


( 380 )


( 385 )

Untitled Document
எனக்காகப் பிறந்தவள்!

         எனக்கொன்று தெரியும் -- நீ
         எனக்காகப் பிறந்தவள்;
         உனக்கொன்று தெரியுமா? -- நான்
         உனக்காகப் பிறந்தவன்.
         இனிக்க இனிக்க நாம் திருமணம் புரிவோம்
         இன்ப உலகில் கைகோத்துத் திரிவோம்.
         தனித்துவாழும் வாழ்வு நமக்கல்ல
         சாவும் மனிதர்க்கது சொந்தம் மயிலே! (எனக்கொன்று)

         மக்கள் ஒன்று சேர்வதைப் -- பிறர்          தடுக்க முடியும் பேண்ணே,
         மனம் ஒன்று சேர்வதை -- யார்
         தடுப்பா ரடி கண்ணே!
         துய்க்கின்றோம் உன்னைநான் -- என்னை நீ,
         துயரில்லை அயர் வில்லை மறிப்பேது மானே?
         தக்கது செய்தோம் காதலின் புறுவோம்
         தப்பாதுரையடி ஒப்பிலாதவளே!    (எனக்கொன்று)


( 390 )
( 395 )


( 400 )நானும் அவளும்

         நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
         நரம்பும் யாழும், பூவும் மணமும்,
         தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
                                    நானும் அவளும்!
         திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
         மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
         வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
         ஆனும் கன்றும், ஆறும் கரையும்
         அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
                                   - நானும் அவளும்!
         அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
         அறமும் பயனும், அலையும் கடலும்,
         தவமும் அருளும், தாயும் சேயும்,
         தாரும் சீரும், வேரும் மரமும்
                                    -அவளும் நானும்!

         அவலும் இடியும், ஆலும் நிழலும்;
         அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
         அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
         ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
                                    -அவளும் நானும்!
( 405 )
( 410 )


( 415 )

( 420 )தொழிலாளியின் தோள்

தொழிலாளியின் தோள்களைத்தான் அணைப்பேன் -- அவன்
தொடத் தொடத்தான் இன்பம் திளைப்பேன்
விழிக்கவன் கைகளோ வலிய இரும்பு -- கைசெய்
வினையெலாம் உலகுக்குக் கரும்பு!         (தொழிலாளி)

தொழிலாளி அவன் இன்றேல் வாழுமா உலகம்?
சோம்பேறி யாயிருந்தால் தோன்றுமே கலகம்!
விழியாளி அவன் விரல்கள் என்னுடல் பழகும்,
வெட்கமெல்லாம் அவன்கை பட்டாலே விலகும்!    (தொழிலாளி)

இரும்புப் பட்டறையில் ஓங்கும் ஒவ்வோர் அடியும்
எத்திச் சுரண்டுவார்க்கு இடியாக முடியும்!
பெருமைகொள்வேன் அவன்தலை தாங்கும் என்மடியும்
பேசொணா இன்பங்கள் பருகுவோம் விடியும்!      (தொழிலாளி)

மக்கட் குழைப்பவதற்கு நான்ஒரு துணைவி
மகிழ்ச்சி அளிப்பதில் மகிழ்ந்திடும் மனைவி!
எக்காலமும் அவன் முரட்டுக்கை அணைப்பு
ஏங்கும் என் உளம் உடல் அன்புறும் இணைப்பு!   (தொழிலாளி)
( 425 )

( 430 )


( 435 )

( 440 )
Untitled Document
கூவாயோ குயிலே ?

         குயிலே குயிலே கூவாயோ?
         கொழுநன் வருகை கூவாயோ?
         வெயிலில் உழைத்து
         வியர்வை சிந்தி

         உயிராய் உலகுக் குழைக்கும் கணவன்
         உண்டின் புறவே
         ஒளிக்கண் குயிலே கூவாயோ!

         கருமைக் குயிலே கூவாயோ?
         கணவன் வருகை கூவாயோ?
         அருமைத் தொழிலால்
         உலகம் அனைத்தும்
         பெருமைக் குரித்தாய் உழைக்கும் அன்பன்          பிள்ளையோ டுவக்கப்
         பெட்டைக் குயிலே கூவாயோ!

         மாங்குயிலே நீ கூவாயோ?
         மணாளன் வருகை கூவாயோ?
         நீங்கா உழைப்பால்
         நீளுல குயர்த்த
         ஓங்கும் தொழிலைப் புரியும் தோழன்
         உறவுற்றிடவே
         ஓலிக்குரல் எடுத்துக் கூவாயோ!

         பாடல் குயிலே கூவாயோ?
         பாட்டாளிவரக் கூவாயோ?
         பாடுபடும் தொழி
         லாளிகளே ஒன்று
         படுவீர் என்று பசிநோய் தீர்ப்போன்
         பசியாறிடவே
         பண்ணார் குயிலே கூவாயோ!

( 445 )


( 450 )
( 455 )
( 460 )

( 465 )வண்டி முத்தம்

அவள் :

       வந்து விட்டேன் இந்த மட்டும்
          வழிதெரிய வில்லை -- ஏ
       வண்டி ஓட்டிப்போகும் ஐயா
          எங்கே உள்ளது தில்லை?

அவன் :

       குந்திக் கொள்வாய் வண்டியிலே
          என்னத்துக்குத் தொல்லை? -- அதோ
       கொய்யாத் தோப்பைத் தாண்டிவிட்டால்
          தெரியும் உன்னூர் எல்லை.

அவள் :

       பஞ்சி கூட நெருப்பிருந்தால்
          பற்றிக் கொள்ளக் கூடும் -- இந்தப்
       பச்சைக்கிளி நொச்சிக் கிளையில்
          தொத்திக் கொள்ளக் கூடும்.
அவன் ;

       நெஞ்சிருக்க நினைவிருக்க
          உடம்பெங்கே ஓடும்? -- அம்மா
       நீ குந்து நான் ஓட்டுவேன்
          நன்றாய் ஓடும் மாடும்!

அவள் ;

       நல்லதையா குந்திக் கொண்டேன்
          நானும் இந்த ஓரம் -- இனி
       நடந்திடுமோ ஒற்றை மாடு?
          நாம் அதிக பாரம்.

அவன் :

       இல்லைபெண்ணே இப்படி வா!
          இருந்தது பின் பாரம் -- உம்
       இப்படிவா! இப்படிவா!
          இன்னம் கொஞ்ச நேரம்.

அவள் :

       ஏறு காலின் ஒட்டினிலே
          இருந்து சாக லாமா? -- நீ
       இப்படிவா இப்படிவா
          என்னருமை மாமா.

அவன் :

       ஆறு கல்லும் தீர்ந்தாலும் தம்
          ஆசை தீர்ந்து போமா? -- வை
       அன்பு முத்தம் நூறு கோடி!
          அதை மறப்பவர் நாமா?


( 470 )


( 475 )


( 480 )


( 485 )


( 490 )


( 495 )


( 500 )


( 505 )