பக்கம் எண் :

குயில் பாடல்கள்

கிளிக்குஞ்சு கண்ட உலகம்

வளர்ந்த தென்னையின் மட்டைக் கிடையில்
பன்னாடையெனும் பஞ்சு மெத்தைமேல்
கீச்சுக் கீச்சென்று கிளிக்குஞ்சு பாடியது,
அருகில் ஈன்ற அன்னை இருந்தாள்.

வானிடை உலவிய வன்சிறைப் பருந்து
திடீரென்று தாய்க்கிளி மேனி தீண்டித்
துன்புறும்படி தூக்கிப் போனதே!

கிளிக்குஞ்சு காக்கைக் குஞ்சியிடம் செப்பும்:
என்தாய், பருந்தை எடுத்துப் போனாள்.
போகையில் பாடிக் கொண்டே போனாள்,
அந்தப் பாட்டும் நல்லபாட்டு என்றது.

காக்கைக் குஞ்சு சுழறு கின்றதாம்;
எங்கே தூக்கிப் போனாள் பருந்தை?

கிளிக்குஞ்சு தானும் கிளத்துகின்றது;
பருந்தைத் தீயர் வருத்தி யிருப்பார்
ஆல மரத்தில் கொண்டுபோய் அமைக்க
எண்ணி யிருப்பாள் என்று கூறவே,
சற்றுநே ரத்தில் தாய்க்கிளி யின்தலை
கிளிக்குஞ்சு காணக் கீழே விழுந்தது.

காக்கைக் குஞ்சு, ஏன் என்று கழறவே,
கிளியின் குஞ்சு கிளத்து கின்றது?
என்தாய் உடம்போ அங்கே இருக்கும்
தலையோ இரை எனக்குத் தர வந்திருக்கும்.
என்று சொல்லும் போதே எதிரில்
தாயாம் காக்கை சரேலென வந்தது.

கிளிக்குஞ்சு, கெட்ட காக்கையே கேட்பாய்:
அதோ என் அம்மா! அவளிடம் சொல்லி

உன்னைக் கொல்லுவேன் ஓடு நீ என்று
சொன்னது! காக்கை சொல்லுகின்றது;

பச்சைக் கிளி ஒன்று பருந்தைத் தூக்கும் உலகை நீ உண்டு பண்ணினாய்! அன்றியும்
அறுத்த கிளித்தலை அன்பு மகவுக்கு,
இரைதர வருவதோர் இன்ப உலகை
நீயுண்டு பண்ணிணாய்!





( 5 )





( 10 )






( 15 )





( 20 )




( 25 )







( 30 )


நெடிய கடவுள்

உன் காப்படுத்தும் என்னையும் படைத்த இவ்
உலகில் உன்னுலகு செல்லாதென்று
அலகால் காக்கை அழித்தது குஞ்சையே.
( 35 )

வீட்டுத் தோட்டப் பூங்கா

தஞ்சையை விட்டுத் தண்வயல் ''வடவார்ப்
புகைவண்டி நிலையம்'' போந்ததென் வண்டி.

வண்டி நிலையத் தலுவலன் வாழும்
தனி வீடொன்றை இனிது நான் கண்டேன்.
நாலைந்து வாழைகள் நறுநிழல் தந்தன;
அகத்தி யொன்றும் அழகொடு நின்றது;
இளைய மாமரம் தளிர்த்திருந்தது;
புடலை, அவரை, பூசணி எல்லாம்
கொடி நீண்டு குளிர்இலையோடு படர்ந்தன;
பன்னிற நன்மலர் படைத்தன செடிகள்!

ஐம்பது சதுர அடி அளவுள்ள
தரையில் இந்தப் பச்சைத் தழையிடை
நீல மாமுகில் நீங்கா நிலையில்
செம்பருத்தி தன்னொளி சிறிது சிறிது
காட்டியதேபோற் காட்சி தந்தது.

வீட்டின் கொல்லைப் புறத்தில் விரிபுனல்
வாய்க்கால் ஒன்று வாய்த் திருந்தது.
ஒருத்தி; என் மகள்; மரங்கொடி, செடிக்கெலாம்
அன்னை போல்வாள்; அவள் ஒரு வாளிகொண்டு
செல்வாள்; நீர்மொண்டு மீண்டு தன்னருஞ்
செல்வர் உண்ணச் சேர்ப்பாள்! காண்கையில்
எனது வண்டி எடுத்தது நடையை,
இனிய காட்சியை இழந்தன கண்கள்.

அரசினர்க் கொன்று சொல்ல ஆசை,
வீட்டுத் தோட்டப் பூங்கா
நாட்டுவார்க்குத் தேவைநற் பரிசே.




( 40 )




( 45 )





( 50 )





( 55 )




( 60 )



சோலை தரும் நன்கொடை

மலரோ மணங்கொடுக்கும்
வண்டுகள் இசை கொடுக்கும்
சலசலென்று நீர் கொடுக்கும் ஓடையே -- தன்
கடுஞ்சூட்டில் தணிவு கொடுக்கும்
      கோடையே!

தென்னை இளநீர் கொடுக்கும்
தேன்வாழை பழம் கொடுக்கும்
புன்னையோ முத்தம் கொடுக்கும்
கையிலே -- தான்
போனதாய் எழுதிக் கொடுக்கும்
            வெய்யிலே!

முல்லை சிரிப்புக் கொடுக்கும்
மொய்யலரி சினம் கொடுக்கும்
சொல்லிலே, தமிழ் கொடுக்கும்
பச்சைக்கிளி -- தன்
தோகையால் எழில் கொடுக்கும்
               அச்சுமயில்!

மந்தியோ பால் கொடுக்கும்
வந்தகுட்டி வாய் கொடுக்கும்
சிந்தியே தேன் கொடுக்கும்
பூக்காடு -- மேல்
செந்தமிழ் உண்ணக் கொடுக்கும்
               ஈக்காடு
( 65 )





( 70 )




( 75 )





( 80 )





( 85 )
எறும்பின் தவம்

தரையிற் கிடந்த தங்கத் துகள்கள்
வரிசை மாறாது நடந்தன. அவற்றை
இரைக்குச் செல்லும் எறும்புகள் என்றனர்.

அரிய போர்வீரர் அணிநடை பயில
ஓராண்டு செல்லும் ஊசிமுனை எறும்புக்கு
ஈராண் டாயினும் வேண்டுமே என்றேன்.
வரிசை, ஒழுங்கும், மாறு படாமை
எறும்புகட் கெல்லாம் இயல்பில் அமைந்தவை!
மனிதன் ஒழுக்கநூல் ஆர்ந்தான் ஆயினும்
இனி அவன் திருந்துதல் எந்நாள் அறிகிலேம்
என்றனர்! இத்னைக் கேட்டஎன் உதட்டு
மன்றில் சிரிப்பு வந்து குதித்தது.

எறும்புகள் நடந்துகொண் டிருந்தன; வழியைச்
சிறுகல் தடுத்தது; ஏறி இறங்கி

எறும்புகள் நடந்துகொண் டிருந்தன! பெட்டி
குறுக்கில் கிடந்தது சுற்றிக் கொண்டு
போகும் மனிதரின் மனநிலை பெறாமல்
வழிகோ ணாமல், வரிகோணாமல்
பெட்டிமேல் ஏறிப் பின்புறம் இறங்கி
எறும்புகள் நடந்து கொண் டிருந்தன; சுவரொன்று
நடுவில் நின்றது; நடுங்க வில்லை,
மலைக்க வில்லை, வலிகுன்ற வில்லை,
நடையின் விரைவு தடைபடவில்லை;
எறும்புகள் நடந்து கொண் டிருந்தன! அரிசிநொய்க்
குவியலை அடைந்தன. ஓவ்வொன்று தூக்கித்
தாவ முடித்தன தம்புற்று மீண்டே.
மருந்தில்லாத நோய் சோம்பல்!
அருந்தவம் ஊக்கம்! அன்பு மக்களே!


( 90 )




( 95 )





( 100 )




( 105 )




( 110 )




( 115 )
ஏழையின் குடிசை

பானையிலே நற்சிலந்திக் கூடு பழஅடுப்பில்
பூனையின் தூக்கம், பொலிஎருமை மாட்டின்
முதுகெலும்பு போலும் முருங்கைக்காய் காய்க்கும்,
அதுவும் தலைமொட்டை. அன்னை கிழவி

மணைக்கட்டை மேல்தனது மண்டை உறுத்தக்
கணுக்கால் வயிறெட்டக் கட்டிச் சுருட்டிப்
படுத்த படுக்கை, பசிக்கோ குடல்தான்
கடித்துண்ணத் தக்க கறியுணவு, பச்சை
மயிலடியைப் போன்ற இளைநொச்சி மண்டும்
அயலிடத்தில் நின்றபடி அம்மே எனக்கதறும்
வற்றல் பசுமாட்டின் வாய்க்கதறல். -- காற்றசைவைச்

சற்றும் பொறுக்காமல், தள்ளாடும் மேற்கூரை
ஆன இவையும் அடுக்காய் அமைந்ததுதான்
கூனக் கிழவர் குனிந்து புகும்குடிசை...






( 120 )




( 125 )



தமிழகம்

ஆதி மனிதன் தமிழன்
   ஆதி மனிதன் தமிழன்தான்!
   அவன்மொ ழிந்ததும் செந்தமிழ்த்தேன்!
   மூதறிஞர் ஒழுக்க நெறிகள்
   முதலிற் கண்டதும் தமிழகந்தான்!

   காதல் வாழ்வும், புகழ் வாழ்வும்,
   காட்டிய தும்தமிழ் நான்மறைதான்!
   ஓதும் அந்தத் தமிழ் நான்மறை
   உலகம் போற்றும் முத்தமிழ்தான்.

   நெய்தல் நிலம்

   நீளக் கடலும் முத்துப் பெட்டி;
   நெய்தல் நிலத்துப் பெண்மான் குட்டி,
   ஆள னுக்கே வரித்து கட்டி
   அளிக்கும் உதவி சர்க்கரைக் கட்டி,

ஆதிமொழி தமிழ்மொழி
குறிஞ்சி நிலம்

   வேளை பார்க்கும் கிக்சிலிக் குருவி
   மீனை வீசும் மலை அருவி
   காளையின் மேல் கண்வாள் உருவிக்
   கதை முடித்தாள் அவள் மருவி.

    முல்லை நிலம்

   காட்டுமயில் கூட்டம் கூடிக்
   களித்திருப்பார் குரவை ஆடிக்
   கூட்டமுதப் பாட்டும் பாடிக்
   குழலூதிடும் ஆயர் பாடி..

    மருத நிலம் 

   பரந்தையிடம் சென்று வந்து
   பஞ்சமான நிலை பகர்ந்து,
   சிரித்த கணவன் மேல்சினந்து
   செங்கை தொட்டாள் பின் உவந்து.

   பாடிவரும் ஆறுகள் பல,
   பரந்துயர்ந்த மலைகளும் பல,
   ஆடி நடக்கும் உழவு மாடு
   கொடுக்கும் செல்வம் மிகப் பலபல.

   ஓடை என்பது மலர்ச் சோலை    ஒழுக விட்ட தேனாலே
   கோடை பறக்கும் முன்னாலே
   குளிரும் தென்றல் அன்பாலே!

     தாய்நாடு

   அறங்கிடந்து பண் பாடும்.
   அன்பிருந்து சதிர் ஆடும்,
   திறங்கிடந்த நாகரிகம்
   செய்து தந்தது தமிழ்நாடு.
   மறங்கிடந்த தோள் வீரர்
   மகளிர்தரும் பெருங்கற்புச்
   சிறந்திருக்கும் தமிழ் நாடு
   செந்தமிழர் தாய் நாடு!
( 130 )





( 135 )







( 140 )







( 145 )






( 150 )








( 155 )




( 160 )







( 165 )



( 170 )
இரட்டைப் பேறு

பொன்முகம் மலர்விழி கருங்குஞ்சி பொலியும்
என்மகனின்மகன் ஓருவன் இதழால்
விரலைச் சுவைத்தே ஒருபெருந் தடுக்கில்
கிடந்தான்.

             அயலூர்க் கிழவி ஒருத்தி
நேரில் அக் குழந்தையைக் கண்டாள்; நெடுஞ்சுவர்
ஓரமும் அவள் அவ் வோவியம் கண்டாள்!
திடுக்கிட்டுக் கிழவி செப்பு கின்றாள்;

   ''சுவர்க் கண்ணாடியே சுவர்க் கண்ணாடியே
   பிள்ளை உருக்காட்டும் பெருங்கண்ணாடியே
   என்னுருக் காட்டா திருத்த தென்ன?
   முதுமையும் சாவும் ஒன்றெனும் முடிபா?''

என்று துடிக்கையில் ஈன்றவள் வந்தே
இரண்டும் என் உடைமை என்றெடுத்தாள்.
எதிரல் நின்ற கிழவி,
முதுமையும் சாவும் எனக்கென்றாளே.





( 175 )





( 180 )





( 185 )
ஞாயிறு வாழ்க!

வருக ஞாயிறு! வருக ஞாயிறு!
விரிதிரைத் தமிழகப் பெருங்கடல் மீதில்
அறிவொளி பெருக்கி நிறைவாழ் வளிக்க
வருக ஞாயிறு! வருக ஞாயிறே!

பனிமலை வடக்கில் புனனுள் கிடக்கையில்
இனிதுயர்ந்த தனிப்பெரும் சீர்த்தித்
தமிழர்கள் இந்நாள் தந்நிலை தளர்ந்தார்;
மடமையில் ஆழ்த்தப் பெற்றனர்; அடிமை
நன்றென ஒப்பினார்; நலிந்தனர் அன்னார்.
இன்று புத்தொளி எய்திவாழ் வெய்த
ஞாயிறு வருக! ஞாயிறு வருக!

முத்தமிழ் வல்லவன்; தித்திக்கும்படி
செய்யுள் செய்யும் திறத்தினன்; திராவிடர்
இனநலம் காத்தலே இன்பெனக் கொண்டவன்;
ஏ கே. வேலன் எழுத்தில் எழுந்தனை,
அன்னவன் நெஞ்சத் தருளில் வாய்த்தனை;
ஞாயிறே, நற்றமிழ் ஏடே நீ இதோ
இன்பத் தமிழர் இருகை ஏந்தப்
புகழ்ச்சிறகு கொட்டிப் போந்தனை! நன்றே
வருக ஞாயிறே, விடுதலை,
திருநாடு பெற்றிட வருக! வாழியவே!





( 190 )




( 195 )





( 200 )




( 205 )
வருவாய் கதிரே

வருவாய் வருவாய் கதிரே -- தைம்
மதியே ஒளியே வருவாய்
திருவே உணர்வே வருவாய் -- எம்
செயலின் தெளிவே வருவாய்.

இருளும் பனியும் குளிரும் -- பல
இடரும் தொடரா வகையே
புரிவாய் சுடரே வருவாய் -- எம்
பொங்கற் புதுநாள் வருவாய்.

விலகாப் பாசிப் பொய்கை -- மிசை
விரியும் செந்தாமரைபோல்
அலைசேர் நீலக் கடல்மேல் -- கதிர்
அவிழும் பகலே வருவாய்!

கலையின் முதலே வருவாய் -- எம்
கண்ணுள் மணியே வருவாய்
மலையும் காடும் தெருவும் -- ஒளி
மருவப் புரிவாய் வருவாய்.

காவிரி ஆற்றுத் தண்ணீர் -- எம்
கழனிகள் தோறும் பாய்ச்சி
ஆவலின் நாட்டைப் பாடி -- நல்
அடைவுறும் எருதால் உழுதே,

தூவிய விதையும் காத்தோம் -- வயல்
சுற்றிலும் வேலி அமைத்தே;
ஆவன செய்தோம் மடைநீர் -- வடி
வாக்கித் தேக்கியும் வந்தோம்

ஆழக் கிடங்கெடுத்தே -- நிறை வாக தண்ணீர் தேக்கி
வாழை, கரும்பு நட்டோம் -- கால்
வைத்தே சாரம் செய்தோம்.

தாழப் புதைத்த மஞ்சள் -- பயிர்
தழையத் தழையக் காத்தோம்
வாழ்வின் பயனைக் கோரி -- உன்
வரவை நோக்கியிருந்தோம்.

வருவாய் வருவாய் சுடரே -- பணி
மாற்றித் தோற்றிய மணியே,
புரைதீர் வாழ்வின் பயனே -- யாம்
புதுநெல் அறுவடை செய்தோம்.

கரும்பு வெட்டிச் சேர்த்தோம் -- செங்
கனியொடு வாழை சாய்த்தோம்
திரும்பும் இடம் எங்கெங்கும் -- நல்
திருவே புரிவாய் வருவாய்.

எருமைக் கண்போல் நாவல் -- கனி;
இலந்தை, மா துளை, கொய்யா,
பெரு முந்திரியின் பருப்பும் -- தேன்
பிழிவும் யாண்டும் கொழியும்.

மருவின் கொழுந்தும் மலரும் -- மணம்
மருவத் திருவே வருவாய்.
வருவாய் வெயிலே அழகே -- எம்
வாழ்த்துக் குரியோய் வருவாய்.

புதுநெல் அரிசியினோடு -- பால்
பொங்கல் பொங்கிட எங்கும்
அதிர்வளை மங்கைமார்கள் -- தம்
அன்பும் தேனும் கலந்து,

முதிரா வழுக்கை இளநீர் -- நனி
முற்றல் கழையின் சாறும்
உதிர்மாதுளையின் முத்தும் -- தந்
துவக்க உவக்க நின்றார்.

பொன் வண்ணப் புத்துருக்கு -- நெய்
புறங்கை ஒழுகப் பொங்கல்,
இன்பம் பெறுமாறுண்போம் -- எம்
இனிதாம் பொழுதே வருவாய்.

சொன்னோம் பொங்கல் வாழ்த்தே -- எம்
தூய்மைத் தமிழால் நாங்கள்
தென்பாங்கடைந்த செல்வம் -- எம்
திராவிடம் வாழியே நன்றே.



( 210 )





( 215 )





( 220 )





( 225 )





( 230 )






( 235 )





( 240 )





( 245 )





( 250 )






( 255 )





( 260 )





( 265 )





( 270 )
சூறையில் ஓடம்

வீற்றிருக்கும் மணிமாடம்
விருந்துண்ணும் நடுக்கூடம்
ஆற்றிலே நடமாடும்
அழகான நம் ஓடம்
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

காற்றே குளிர்ந்துவரும்
கண்ணிலே விண்தெரியும்
சாற்றிலே சர்க்கரை போட்ட
தமிழ்ப் பாட்டும் தானேவரும்.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

சிற்றலையின் வரிசையிலே
சேல்மீன்கள் விளையாடும்
முற்றிவிட்ட பகைபோல
முதலை ஒன்று குறுக்கோடும்.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

கற்றாழை மிதந்துவரும்
கண்ணெதிரில் வாள்சுழற்றும்
முற்றாத தென்னம்பாளை
முன்னேவந்து தான்சிரிக்கும்.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

மேற்கை வெறுத்துவரும்
கிழக்கு நோக்கி விரைந்தோடும்
ஆற்றில் மிதக்கும் ஓடம்
காற்றுக்குமேல் ஆட்டம் போடும்
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

கீற்றுத் தென்னைமேலே
கிள்ளைகளும் தமிழ்பேசும்
சேற்றுத் தவளைகளும்
திடும்திடும் பறைவீசும்.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

வெள்ளாடு தழைமேயும்
வெய்யில் குடைபிடிக்கும்
புள்ளிமான் தென்துறையில்
பூரித்து நீர் அருந்தும்.            ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

கள்ளிமலர் பூத்திருக்கும்
பொன்வண்டு காத்திருக்கும்
துள்ளி வரால் மீன்கள்
சூறையாடும் மாம்பழத்தை.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

வானம் கருத்ததண்ணே
காற்றுமழை வந்ததண்ணே
ஏனம் கவழ்ந்ததண்ணே
என் கஞ்சி சாய்ததண்ணே.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

கை சோர்ந்து போன தண்ணே
கண்தெரிய வில்லை அண்ணே
ஐயையோ நம் ஓடம்
ஆற்றில் தள்ளாடுதண்ணே.
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!

ஒய்யென்று காற்றடித்தால்
மூச்சே ஒழிந்துவிடும்
பொய்தானோ நம் வாழ்வு
போனால் வராதே அண்ணே
           ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்!




( 275 )





( 280 )





( 285 )





( 290 )





( 295 )




( 300 )





( 305 )





( 310 )





( 315 )





( 320 )





( 325 )
பனை

முதலை முதுகின் அடிமரமும் அன்பு
மதலை தலைக்குலையும், மற்றக் குதலை
தனைஒப்பச் சாறும், தமிழ்ஏடும் நல்கும்
பனைஒப்ப துண்டோ பகர்.

பசுமை தடவி மெருகிப் பலவாம்
விசிறிகள் விற்பான்போல் நின்றே இசைபாடும்,
அப்பனையைக் கற்பனையாம் கற்பகமாம் என்றால்
ஒப்பனை கொள்ளாதிவ் வுலகு.

காலாணி என் வாரை! கட்டுவதும் என்நாரே!
மேலாடல் என் ஓலை! வீடுகளும், மேலும் உண்ணும்
நுங்கு, கருப்பட்டி, நூல்தான், பதனி, பனாட்
டெங்கும் என்சொத்தென்னும் பனை.

அகணிசேர் மட்டை மன்னாடை விரல்போல்
மிகவாம் பனம்பூ, விளைத்த தொகுகாய்கள்
உள்நாடிக், கண்டேன் உறிஞ்சி தமிழ்த்தேன் மங்கையரின்
கண்ணாடிக் கன்னம்நிகர் நுங்கு.





( 330 )





( 335 )





( 340 )