பக்கம் எண் :

குயில் பாடல்கள்

வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும்

வீட்டுக்கோழி
    காலையில் எனக்குக் கம்பு போடுவர்,
    காலையில் தவிடு பிசைந்து வைப்பர்.
    இட்டிலி உண்கையில் என்னையும் அழைத்துப்
    பிட்டுப் பிட்டுப் போட்டு மகிழ்வர்.
    இரவில் எனக்கோர் இன்னல் வராமல்
    ஒரு பெருங்கூடை கவிழ்ப்பார்! வருபிணி
    வராமல் வசம்பு நீர் வார்த்துக் கழுவுவர்.
    என்னை வளர்ப்பவர் எனக்குச் செய்யும்
    நன்மை நவிலத் தக்க தன்று.

காட்டுக்கோழி
    உன்னால் அவர்க்கு நன்மை இல்லையா?

வீட்டுக்கோழி
    முட்டை இடுவதற்கு மூலை யடைவேன்.
    எதிர்பார்த்திருந்த என் வீட்டார்கள்
    சட்டியை அடுப்பில் இட்டு நெய்விட்டு -- உடன்
    என்னைக் கூடையில் இட்டுக் கவிழ்ப்பர்,
    பன்முறை கூடையைத் திறந்து பார்ப்பர்.
    வெளிவரும் முட்டையை வெடுக்கென் றெடுத்தே
    அடைசுட்டு உண்டு மகிழ்வர் அனைவரும்.

காட்டுக்கோழி
    அடைகாத்திடவும் முட்டைகள் அமைப்பரோ?

வீட்டுக்கோழி
    ஒரு பெருங் கூடையில் உமியைப் பரப்பி
    அதன்மேல் ஐந்தோ பத்தோ முட்டையை
    அமைத்து மேல்எனை அமைத்து மூடுவர்;
    இருபத் திரண்டு நாட்கள் அடைகாத்துக்
    குஞ்சு வெளிப்பட நெஞ்சம் மகிழ்வேன்.
    இதனிடை எனக்குத் தீனியும் இடுவர்,     குஞ்சு கண்டு நான்கொள்ளும் மகிழ்ச்சியைவிட
    வளர்ப்பவர் கொள்ளும் மகிழ்ச்சியே பெரிது.

காட்டுக்கோழி
    குஞ்சுகள் அவர்கட்கு என்ன கொடுக்கும்?

வீட்டுக்கோழி
    பதினைந்து நாளில் என் பசுங்குஞ்சுகளில்
    இது நன்று மற்றையது நன்றன்று
    வாட்டம் பார்த்தே ஓட்டமாய் ஓடி
    இரண்டு மூன்றைப் பற்றித் -- தலையைப்
    பனையிற் பாக்குக் காய்போல் திருகிப்
    பிஞ்சுடம்பின் பஞ்சுமயிர் கிரைத்துக்
    குருதி கொட்டக் கூறிட்ட சதையை
    நெய்யொடு நெய்யாய் நீர்ப்பதம் எய்தச்
    சொய் எனத் தாளித்துச் சூப்பென்று அருந்துவர்!
    அப்போது நானோ அழுதுகொண்டிருப்பேன்.

காட்டுக்கோழி
    வடக்கன் தெற்குவாழ் தமிழர்க்குக அள்ளிக்
    கொடுப்பதாய்ச் சொல்லிக் குதிக்கின் றார்கள்
    உன்போல் உன்போல்! உரைப்பது கேட்பாய்;
    இங்குளார் உழைப்பின் பயனை யெல்லாம்
    வடவர் அடியோடு விழிங்கி வாழ்பவர்;
    அடிமைகள் தமிழர்கள் என்றே அறைபவர்;
    இதனை எண்ணி அழுதிடும் தமிழரும்
    முட்டைகள், குஞ்சுகள் முற்றும் இழக்கையில்
    அழுதிடும் உன்னையே ஒப்பவர் ஆவார்.
    வீட்டுக் கோழியே வீட்டுக் கோழியே
    கேட்பேன் உன்னையோர் கேள்வி! உன்றன்
    தாயகம் எது? அதைச் சாற்ற முடியுமா?

வீட்டுக்கோழி
    சேலத்தி லிருந்து ஓசூர் செல்லும
    வழியில் அழகு வழங்குகின்ற ஓர்
    ஈக்காடு வேய்ங்குழல் இசைத்தட்டு வைக்கும்
    பூக்காட்டின் கீழ்ப்புதர் என்தாயகம்
    என்றே என்றன் பாட்டி சொன்னதாய்
    என்தாய் எனக்குச் சொல்லிய துண்டு.

காட்டுக்கோழி
    ஆசை மலர்க்கொடி யூசல் ஆடி
    அகமகிழ்ந் திருக்கும் என்அன்னை நாடும்,
    அது தான்! இது கேள், உடனே பிறந்தோய்,
    பூச்சி, புழுக்கள், பொன்னிற மணிகள்
    உண்டு தன்மானத்துடன் சேவலின்
    முன் மார்பு, கதிர்முகம் பார்க்கும் கண்ணாடி!
    ஒளியை இறைக்கும் வாலின் சிறகுகள்
    தரையிற் புரள்வது தனி ஒரு காட்சி!
    பலவின் அடியில் இலவம் பஞ்சுமேல்
    இட்ட முட்டையெலாம் பொறித்திட்ட
    பெட்டை, மாம்பழ மேனிப் பிள்ளைகள்
    யாழும் குழலும் இசைத்துச் சூழ
    நரிகள் அஞ்சிப் பறக்கும் அங்கே!
    கம்பு போட்டுக் கழுத்தை யறுக்கும்
    வடக்கன் ஆட்சி போன்ற இடக்கு
    நம் தாயகத்தில் நாம் கேட்டறியோம்,
    ஆதலின் பற! நம் தாயகம் பெறவே.

வீட்டுக்கோழி
    இறக்கை இருந்தும் பறக்க வகையிலேன்.

காட்டுக்கோழி
    என்றன் முதுகில் ஏறு
    துன்பமில்லாத விடுதலை தோய்கவே.





( 5 )






( 10 )






( 15 )








( 20 )



( 25 )








( 30 )




( 35 )






( 40 )




( 45 )






( 50 )





( 55 )




( 60 )



( 65 )



( 70 )




( 75 )
அதிட்டம் பார்ப்பானுக்கு!

கூட்டிய குப்பையில் தங்க மணியைப்
போட்டுப் போனான் மடைமைப் பென்னன்!

அப்பக் கத்தில் அலைந்து திரிந்து
குப்பை கிளறிய கோழியதை விழுங்கிற்று!
விலைக்கு விற்கப்பட்ட அக் கோழியைக்
கொலைக்குக் 'கொண்டலையன்' வாங்கிச்
சமையல் அறையில் தனியே குந்தி,
அமிழ்த்திக் கொன்றே அரிந்த சதையைச்
சட்டியில் இட்டுத் தங்க மணியை
இடுப்பில் ஏற்றினான்! ''தங்க மணியை''

அடைந்ததைப் பார்ப்பான் அதிர்ஷ்டம் என்பான்.
அதிட்டம் ஒப்பாத் தமிழன் அதுதான்,
மடமைமேல் வாய்த்த வெற்றி ஆதலால்
உடைமையை உடையனுக் காக்குவான் உடனே.





( 80 )




( 85 )




அயல்மனை விரும்பியவன் பட்டபாடு

கண்ணான மனைவியிடம் திரைப்படம் பார்த்திடக்
கருதினேன் என்று புளுகிக்
கந்தனோ ஒரு மங்கை வரச் சொன்ன நள்ளிருள்
வரும்வரை அழகியதிரு

வண்ணா மலைத்திருக் குளப்படி வலக்கழிவில்
அமிழ்ந்தே பதுங்கி, நேரம்
ஆனபின், விரைவினில் போனதோர் போக்கிலே
ஆலமர வேர்த்தடுக்கப்,

புண்ணான காலையும் எண்ணாமல் முள்ளொன்று
பொத்ததும் வாங்காமல்மேல்,
புளியங்கிளையொன்று துளையிட்ட நெற்றியில்
போட்டகை போட்ட வண்ணம்,

வண்ணான் பெருங்கழுதை மேல் விழுந்துதையுண்டு
தோட்ட வாயில் சேர்ந்தனன்;
வள்ளென்ற தொருநாய், தன் உள்ளங் கலங்கினான்
வந்து வீழ்ந்தனன் வீட்டிலே.
( 90 )





( 95 )





( 100 )





( 105 )
கழைக் கூத்தாடி

திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம்
திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம்
அஹஹ கும்பிட்றேன் அல்லாருக்கும்
அஹஹஹ வரிஞ்சலா அமர்ந்திருங்க!

மக்களெ பெத்த மகராசருங்க
கண்ணால் பார்த்துக் காசு போடுங்க.
ஒருதுட்டு உங்கட்கொருவாய் வெத்லே,
எங்களுக்கதுதான் திங்கற சோறு!
மொதல் ஒரு வேலே, முழக்கடா மோளம்.
திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம்.

என்னடா தம்பி?
ஏண்டா அண்ணா!
இதோபார் தம்பி எலும்புக்கூடு,
சதையும் இல்லே சத்தும் இல்லே.

ஆமாம் திடுதிடும் அதற்குப் பேரென்னா?
அதன்பேர் தமிழ்நாடு!

சரிசரி திடுதிடும்!

இந்த எலும்பே எழுந்திருக்க வைக்கிறேன்;
செய்யி செய்யி பார்ப்போம் திடுதிடும்;
அமிஞ்ச எலும்பே ஆட வைக்கிறேன்;
செஞ்சி காட்டு திடுதிடும் திடுதிடும்;
ஓய்ஞ்ச நாட்டிலே உசுருண்டாக்றேன்
ஆக்கிக் காட்டடா அண்ணே திடுதிடும்!
அடிமோளத்தெ! 'திடுதிடும் திடும்'
இந்த எலும்பே இப்படி வைக்கிறேன்.

வைச்சா உயிரா வந்திடும்? திடுதிடும்!
மருத்து செய்யனும் தெரிஞ்சுதா ஒனக்கு?

சரி செய் திடுதிடும்!
இதோ பார் மாம்பழம் இதை நான் புழியறேன்.
புழி புழி திடுதிடும்!

இது ரஸ்தாளி இதையும் புழியறேன்.
புழி திடும் திடுதிடும்!

பலாச்சுளை புழியறேன்
திடுதிடும் புழிபுழி!

தேனும் சேக்கறேன், பாலும் சேக்கறேன்,
எளநீர் வழுக்கே இட்டுக் கொழைக்றேன்.
இடித்த தினைமா இட்டுப் பெசையறேன்,
பொடித்த பருப்பும் போட்டுக் கலக்றேன்,
எல்லாத் தையுமே இளஞ்சூடாக்கி,
பல்லாய் நிறையப் பக்குவப் படுத்தினேன்.

ஆஹா ஆஹா, அண்ணே அண்ணே!
இந்த மருந்துக் கென்னா பேரு?

உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும்
தெள்ளு தமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்!
இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
தடவுறேன் தம்பி அடி மோளத்தை!
திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்

சிரித்ததது பாரடா செந்தமிழ்க் கூடு!
விரிந்தது பாரடா அழிந்த நம்நாடு!
பாடுது பாரடா பைந்தமிழ் நாடு!
முழிச்சிப் பாத்து முறுக்குது மீசையை! எதிரி மேலே எண்ணம் கொள்ளுது!
சொத்தைக் காக்கக் கத்தியைக் தூக்குது;
தமிழில் நனைந்த தமிழ்நாடு பாத்தியா;
ஆடுது பாத்தியா அழகு நாடு!

தாயி மாரே தகப்ப மாரே
மாய மில்லை, மந்திர மில்லே,
கருத்து வேணும்! நம்ப
வருத்தம் நீங்கத் தேடனும் வழியே!





( 110 )




( 115 )






( 120 )






( 125 )




( 130 )






( 135 )







( 140 )




( 145 )






( 150 )




( 155 )




( 160 )



நல்ல தொண்டு

நகர்ப்புற ஓடையில் குளித்து, நகரத்துத்
தமிழர் இட்ட கூழ் அமிழ்தென மகிழ்ந்து.
சிராப்பள்ளி ஊரில் இராப்பள்ளி நடத்தும்
தார்க்கோல் தண்டன் வீட்டுத் திண்ணையில்
இருந்த அடிகள் நம்பியார் எதிரில்
திருந்தாத் திருமலை செயல்கண்டிருந்தார்.

சிறுகுடிற் கதவு திறந்தி ருந்தது
குறுமதிக் குப்புதன், கொண்டான் இருக்கவும்
தெருவில் சிரிப்புடன் சென்ற சீனனை

வரலாம் என்று வலக்கை அசைத்தாள்,
சீனன் வந்து சேர்ந்தான் பின்னொடு.

திருமலை வந்து அறிந்தான்,
திருமலை திகைத்து நின்றான்! திரும்பினான்!
தெருவில் வந்தான், சீனனைக் கொல்வதா?
குறைமதிக் குப்பைக் கொன்று போடுவதா?
அல்ல திரண்டு பேரையும் அழிப்பதா?

நான் தொலைகுவதா? எதுதான் நல்லது?
அடிகளாரிடம் அனைத்தும் கூறினான்.
தானே சாதல் நன்றென்று சாற்றினான்.
இருளை நினைக்க வில்லையா என்று
நம்பியார் கேட்டார்; இல்லை என நவின்றான்.
சாவது திண்ணமா என்று சாற்றிய
அடிகள்பால், ஆம் ஆம் என்றான் திருமலை.
அடிகள் நம்பியார் அறிவிக்கின்றார்;
பூண்ட பழியைநீ புகழிற் புதைப்பாய்தமிழுக்குத் தொண்டு செய்து சாவு.
அங்குக் கிடந்த திருமலை உடம்பையும்
அமைத்த குழியில் இட்டனர்.
தமிழ் வாழ்கென்றனர் ஆங்குப் பலரே;
( 165 )




( 170 )





( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இறைப்பது எளிது பொறுக்குவது அரிது!

என்கணக்கன் எல்லப்பன் இல்லா நேரம்
   இரிசப்பன் என்னிடத்தில் வந்து குந்தி
உன்கணக்கன் பெரும்பொய்யன் என்று சொன்னான்.
   உண்மையிலே அவன் தீயன் என்று சொன்னான்.
அன்னவனை இன்றைக்கே நீக்க வேண்டும்.
   அன்பினால் இதைஉன்பால் சொல்லு கின்றேன்
என்றுரைத்தான். இரிசப்பா எனக்க ணக்கன்
   ஏன்தீயன்? -- உரையப்பா என்றுகேட்டான்.

நேரிலும் நான் அறிந்ததுண்டு பிறர்வா யாலும்
   நிறைய நான்கேட்டதுண்டு, பொய்யா சொல்வேன்?
பாரில்அவ னைப்போலே முடிச்சு மாறிப்
   பையனைநாம் பார்த்திடவும் முடியா தென்றான்.
சீரிய என் எல்லப்பன் தீயன் ஆன
   சேதியைநான் இன்றுதான் கேட்கலானேன்
ஏரோட்டப் போகாமல் இரிசப் பன்தான்
   எல்லப்பன் மேற்பழியை அடுக்கு கின்றான்.

என்நலத்துக் குழைப்பதாய்ச் சொல்லிச் சொல்லி,
   இயல்புடையார், நண்புடையார், சொந்தக் காரர்,
தந்நலத்தை எண்ணிஎனை ஏய்த்துச் சென்றார்;
   தனிஓர் ஆள் எல்லப்பன் துணையாய் நின்றான்;
அன்னவனும் போய்விட்டால் நிலைமை என்ன?
   ஆம்! எனினும், அன்புள்ள இரிசப்பாநீ
சொன்னபடி எல்லனைநான் நீக்கி விட்டேன்,
   தோதாய் நீ வேலைபார் என்று சொல்லி.

போய்வாஎன் றேஉரைத்தேன்! இரிசன் போனான்,
   புதன்கிழமை மாலையிலே சாலை ஓரம்,
நேயனாம் கணக்கனிடம் இரிசன் என்ற
   நெருப்புமனக் கொடும்பாவி நிகழ்த்து கின்றான்,
''நாயேடா எல்லப்பா உனைத்தொ லைத்தேன்
   நான்தாண்டா இனிக்கணக்கன்; என்வி ருப்பம்
தீயேஎன் றாலும்அது தென்றல்'' என்றான்.
   செவிமடுத்தேன் அவன்சொல்லை மறைந்து நின்றே.

அலுவலகம் இரிசனார் அதிகா ரத்தில்
   அடங்கிற்று, நானும்உள் ளூரில் இல்லை.
தொலைநோக்கிச் சென்றுவிட்டதாய் நினைத்தான்.
   தொடங்கினார் காரியத்தை இரிச னாரும்.
விலைஏறப் பெற்ற என்மேசை யைத்தன்
   வீட்டுக்கு வண்டியிலேஏற்றிச் சென்றான்;
குலைகுலையாய்ப் பழந்தொங்கும் மாம ரத்தைக்
   கொலைகாரன் சூளைக்கு விற்றுவிட்டான்.

வெட்டுமுன்னே குறுக்கிட்டான், வெட்டா வண்ணம்    வெடுக்கென்று கோடரியைப் பறித்துக் காத்தேன்;
பெட்டியிலே இருப்பென்ன என்று பார்த்தேன்.
   பெரிய தொகை காணவில்லை. என்ன என்றேன்.
எட்டுநூ றெடுத்துள்ளேன் என்பற்றாக
   எழுதிவைத்தேன் பார்க்கணக்கை என்று சொன்னான்.
இட்டார்கள் சிறையினிலே இரிசனாரை
   எல்லப்பனைக்கெஞ்ச யாரால் ஆகும்?


( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )





( 240 )



( 245 )