வருக நேருவே வருக வருக!
பெருகு தமிழர்க்குப் பெரும்பகை நீவிர்;
வரவேற்க வேண்டும், மறுப்பது சரியன்று!
வருக நேருவே வருக! நீவிர்
உலகின் அரசியல் உணர்ந்த துண்டோ?
அரசியல் ஒழுக்கம் அடைந்த துண்டோ?
பதவி யாளர்க் குள்ளபண் பாடுகள்
உம்மிடம் உண்டா? உலகின் பொதுவறம்
உம்மிடம் உண்டா? செம்மையாய் எண்ணினால்
இல்லை, எதுவும் இல்லை என்பதே
என்றன் எண்ணம் ஆகும்! கேட்பீர்;-
ஓரி னத்தின் உயிரே ஆன
ஒருதனித் தொன்மொழி ஆன தமிழை
அழிக்க முடியுமா? அழிக்க எண்ணும்
எண்ணம் அறமா? இந்த உலகில்
இம்மனப் பான்மையை எந்தத் தலைவர்பால்
கண்டீர்! காட்ட முடியுமா உம்மால்
என்னதி கார எல்லையின் ஒருமொழி
வளர்ந்தால் என்றன் பதவியும் வளரும்
என்றுநாம் எண்ணுவர் எந்தத் தலைவரும்!
ஓரி னத்தை அதிலும் ஒண்தமிழ்ப்
பேரினத்தைப்பெரிதும்கூட் டழித்து
நும் அதிகார நுழைவைப் பெருக்க
எண்ணுவது சரியா? இந்த வண்ணம்
எந்த அரசியல் தலைவ ரிடத்தில்
கண்டீர்! அல்லது கல்வி, அறிவு
ஒழுக்கம் என்ப வற்றில் ஒன்று
நன்றெனச் சொல்லுமா இந்த நடத்தையை!
நாட்டு மக்களைப் பிரிவினில் நடத்தி
ஆட்சி நடத்தினால் ஆங்கிலன் என்றீர்
நீர்செயும் வேலை எப்படி? நினைத்தீரா?
தமிழர் எடுத்த தமிழ அமைச்சரைத்
தமிழரி னின்று தடுத்தாட் கொண்டீர்;
அவர்களை எமக்குப் பகைமை ஆக்கினீர்
அவர்கள் கையால் அல்லல் இழைத்தீர்;
எத்தனை நாளைக்கிம்முறை செல்லும்?
நீரைப் பிரித்தால் நிலையிற் பிரியுமா?
அரிசியைப் பிடுங்கினீர்; அயலார்க் களித்தீர்
இதுவே சிறிது முற்றினால் போதுமே
தமிழினம் ஒன்றுபட்டு உம்மைத் தாழ்த்த!
வருக நேருவே வருக! வந்து --
அரியஎம் அமைச்சர் உள்ளத் துள்ளே
உம்முள் ளத்தையும் ஒட்டி, உள்ள
நிலைமையின் துடிப்பை நேரில் உணர்க.
தமிழர்க்குச் சாவு வருவதைத் தமிழரின்
அமைச்சர் ஒப்புவார் அல்லர்!
தமிழர்கள் அவர்கள்!! தமிழகம் வாழ்கவே.
|
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
|