பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

குன்றூர்ப் பாட்டு

குன்றூர் குன்னூர் என்று சிதைந்து, பின்
குன்னூர் குன்றூர் எனத்திருந்திற்றாம்
அவ்வூர் மக்கள் பெரியார் ஆக்கிய
அறிவியக்கத்தை அடைந்தனர் ஆதலின்
குன்னூர் என்பதில் உள்ள குறையைக்
கடிந்து குன்றூர் என்று கண்டனர்
குன்னூர் என்று திரித்துக் கூறினோர்
யார் எனில், ஆங்கிலர் என்றே கூறுவர்;
ஆங்கிலர் தமிழை அறியார் அவருடன்
ஈங்கிருந்த பார்ப்பனர் ஆகிலும்
உண்மை இதுவென உரைத்த துண்டா?
இல்லை, ஏனெனில் பார்ப்பனர் தமிழின்
பகைவர்; பைந்தமிழ் கெட்டொழிவதையே
எண்ணி ஆவன செய்யும் இழிசினர்.

குன்றின் மீதில் அமைந்தது குன்றூர்!
அது, நம் பொறியியல் அறிஞர்க் கறிஞரும்
பொருட்பெற்றி யாய்ந்த முதுபெரும் புலவரும்
ஆகிய சீ. டி. நாயுடு அவர்கள்
வாழ்வதால் பெரும்புகழ் வாய்ந்த தென்று
செப்பும் கோவைக்கு -- ஐம்பது கல்லுக்கு
அப்பால் அமைந்தது! வருவார்க்கெல்லாம்

இயற்கை ஈந்த அழகின் படைப்பு!
தேவைக்குப் பொன்மலி கோவை நகரின்
திராவிடர் கழகச் செயலாளர் திரு.
அரங்க நாதன் அருமைத் தம்பியின்
திருமணத் திற்குநான் சென்ற காலை
என்னைக் குன்றூர்த் தமிழரும் "ஆங்குச்
சொற்பெருக்கு ஆற்ற வருகெனச் சொன்னதால்
ஒப்பினேன்; ஊரையும் பார்க்கலாமன்றோ!
கோவையி னின்று குன்றூர் போக
ஆவலோடு நான் இயங்கியில் அமர்ந்தேன்;

நடுப்பகல் நோக்கிக் காலை நகர்கையில்
பொன்வெயிற் பொன்வண்டாக வண்டி
பறந்து சென்று வாணிகம் பரந்த
மேட்டுப் பாளைய நகரின் மேன்மையைக்
காட்டு, வெப்பமும் காட்டி நின்றது!

வருவோர் போவோர் ஆகிய வாணிகர்
பல்லாயிரவர் விரைவதும் பார்த்தேன்.
அவர்களின் கால்களில் முயற்சி மின்னுவது
காட்சி அளித்தது, காலும் தாளும்
முயற்சியும் ஆன மூன்றும் ஒன்றே
என்று தமிழர் இயம்புவது நினைத்தேன்!

மேட்டுப் பாளையக் கடைத்தெரு விட்டு
மேலும் விரைந்து செல்லும்என் வண்டி
இருபுறம் பாக்கு மரங்கள் அடர்ந்த
ஒருவழி ஓடிற்று மரங்களும் உடன்வர!
அத்தனை நீளப் பெருவழி அதுதான்!
இரண்டுகல் தொலைவு; இரண்டடிக் கொன்றெனக்
கால்கீழ் ஊன்றிக் கண்கொளா உயரத்து
உச்சியில் பச்சை மட்டைகள் சுமந்து
கக்கத்தில் மணிக்குலை கவினுறத் தொங்க
அடைத்துள அழகிய கமுகினம்! வானைத்
துடைத்துத் தூசு போக்குவன போலும்!
வெப்பம் விலக்கின! நிழல்முடி கவிந்தன
கப்பம் கட்டின குளிர்காற்று வைத்தே!
என்னரும் வண்டி எழிலமைந்திருப்பினும்,
விரைந்து செல்லினும்; விரிந்து யர்ந்து
குளிர்தரு கமுகின் கூட்டம் இல்லையேல்,
என்பயன்? இயற்கையின் ஆதரவு செயற்கைக்குத்
தேவை என்பது சாவாத உண்மை!
குன்றின் அடிநிலை சென்று வண்டியி
னின்று முடிநிலை நிமிர்ந்து பார்த்தேன்
தோன்றியதென்ன? -- தமிழகத் தொன்மைதான்!

நெடிய குன்றத்தின் நேர்ஒரே பக்கம்
வளைந்து வளைந்து செல்லும் வழியே
எனது வண்டி மேல்நோக்கி ஏறியது --
என்று சொல்லும் சொல், மெய் இல்லை!
சுடரும் நிலவும் தோன்றிய நாளில்
தோன்றித் துலங்கும் குன்றூர் உச்சிக்கு --
இங்கிருந்து சென்று மீண்டும்
அங்கிருந்து சுவடுகாண மீளும்
என்றன் அருமைத் தமிழக முதியோன்
இன்று தன்னலம் நீக்கி என்றன்
வண்டியை வளைந்ததன் முதுகிற் சுமந்து
சாயாது சறுக்காது தாளிட்ட சுவடு
மாறாது மறவாது மலையுச்சி நோக்கி
ஏறுவான் ஆனான். ஏகுவேன் ஆனேன்!
நின்றி ருக்கும் அந்தக் குன்றின்
அடிநிலை தாண்டி நடுநிலை சென்றேன்;
குனிந்து கீழ்ப்புறம் நோக்கினேன்; குரல் எடுத்துக்
கீழுறு தமிழரே மேல்வா ரீரோ
என்று கூற எண்ணினேன்! "கேட்குமா?"
என்று வாளா இருக்கலானேன்!

குன்று வழியின் இருபுறத்து நின்ற
காடுகள் பாடின! அழகு காட்டின!
ஆடின கிளைத்தழை தோகை யாகவே!
பக்க வாட்டிற் பள்ளத்தி னின்று
மிக்கு நீண்ட கொடிப்பூ மின்னின!

நெட்டை மரமொன்று நிலத்தி னின்று
எட்டியா னிருந்த அளவாய் எழுந்து
தன்தலை தாவி என்நிலை நோக்கி
மகிழ்ந்தது மகனுக்கு மகிழ்தந் தைபோல்!
இதுதான் குன்றூர் என்றனர்! நடுப்பகல்
பதினொரு மணிவெயில் பாய்ந்த தாயினும்
குளிர்ந்த காற்று வெப்பினைக் குறைத்தது!

புதுமனை, பொதுமனை, கடைகள், தொழில்மனை
அழகுற அமைந்தி ருந்தன ஆங்கே:
நன்செய் புன்செய் நறுமலரத்தோட்டம்
சுற்றிலும் அழகு தோற்று வித்தன
பயிர்த்தொழில் மக்கள், பலர்; சிலர்
சிறுதொழில் மக்கள் செறிந்தி ருந்தனர்.
திரண்ட செல்வம் இன்மையால் பார்ப்பனர்
சுரண்டலால் ஏற்படும் தொல்லைஅங் கில்லை!
நாய்கடி நலம்செயும் மருத்துவ விடுதி
குன்றூர் தன்னில் குறிப்பிடத் தக்கது.
வருவார் தங்கும் வளைவில் தங்கினேன்
நன்று விரிந்த இந்தக் குன்றூர்

குன்றின் உச்சியில் இருந்த கொள்கையை
எண்ணுந் தோறும் வியப்பை ஈந்தது.

வெயிலின் வெப்பம் எந்த நாளிலும்
துயரம் விளைப்பதில்லை அங்கே?
சித்திரைத் திங்கள் வந்தால், ஊரில்
செத்தே போகும் செங்கதிர்க் கொதிப்பு!
வாழ்வன குளிர்ச்சியும் மகிழ்ச்சியுமாகும்.

வெப்பம் மிக்க தென்னாட் டார்கள்
குளிர்ச்சிக்குச் செல்வது குன்றூ ராகும்!
ஊட்டி என்றே ஆங்கிலன் உரைப்பதும், உதகை என்றே ஆரியன் உரைப்பதும்.
ஆகிய "தண்ணீர்ச் சுழலது" -- வேதான்
அழகிய குன்றூர்க்கு அகப்புறம் அமைந்தது,
நீல மலைஎன நிகழ்த்தலும் அதையே!

அடியினின்று நெடுமுடி நோக்கினால்
சிறிதாய்த் தோன்றும் இடத்தில் பெரிய
நகரினைக் கண்டு நான்வியப்புறுகையில்
என்னைஎன் தோழர்கள் 'இதுவியப் பன்று
பொன்னும் பன்னிற மணிகளும் பூவென்று
மின்னும் பெரும்பரப்பு வியப்பாம்?' என்றனர்.

ஊருக்கு-அரைக்கல் தூரம் நடந்தேன்.
நேரில்நான் கண்டது மலர்வனம்? மணிக்காடு!
உச்சிக் குன்றின் பக்க வாட்டில்
ஐந்நூறு காணிப் பரப்பை "அழகு"
மொய்த்து விளையாடக் குத்தகை பிடித்தது!

நிமிர்ந்தால் இலைஇலா நீலப் பூமரம்!
கமழும் முத்துப் பந்தர்க் கவின்மரம்!
மஞ்சட் பொடியை வாரி இறைக்கும்
செம்மலர் மரங்கள் சிறுபட் டாளம்
கண்ணோடு சென்று மனத்தைக் கவர்ந்தன!

கொன்றை பூத்த தங்கக் கோவை
தென்றலால் ஆடும், வண்டெலாம் பாடும்.
வண்ண மரங்களின் அழகில் வளைந்தஎன்
கண்ணைக் கீழ்ப்பாய்ந்த வரியணில் கவிழ்த்ததால்
பன்மலர் நிலத் தோவியம் பலித்தது.

பச்சை மணிச்சிற் றிலைச்செடி வரிசை
வட்டங் குறிக்க அதனுள் மஞ்சள்
சிவப்பு, நீலம் ஒளிபடு மலர்வகை
அப்பட்டம் பன்மணி இழைப்போன் அழுத்திய

மாதர் தலையணி வட்டமே ஆகும்.
பெருமுக் கோணத் துள்ளே உரோசு
விரிமலர் நறுமணம் வீசி மிளிர்ந்தன,
நீல உரோசும் ஒருபுறம் நிறைந்தன
சிவப்பு, ரோசும் ஒருபுறம் திகழ்ந்தன
வெள்ளை உரோசும் வியப்பைச் செய்தன
பன்நிறச் சாமந்திப் பரப்பையும்
இன்னும் இருந்த அழகின் சிரிப்பையும்
எழுதி முடிக்க இருப தாண்டு
கழியும் ஆதலால் அடுத்தது கழறுவேன்;

மேல்வந்து மின்னி உட்சென்று குமிழ்விடும்
சேல்விளை யாடும் பொய்கையும் திண்ணையும்
கலைஞன் படமும் காண்பார்க்கு இடமுமாம்.
திண்ணையி னின்று பொய்கையிற் செலுத்திய
கண்களைத் தாமரை கண்டு மலர்ந்தன
அண்டையில் அல்லிகள் தன்முகம் கூம்பின!

பொய்கையைச் சுற்றும் புதரெலாம் பூக்கள்
பூக்களில் வடியும் தேனெலாம் ஈக்கள்
ஈக்களில் எழுவன இனிய பார்களாம்
திண்ணைக்கி பந்தல் ஒன்று செய்த
வண்ண மலர்குலுங்கு கொடிகளின் பின்னலில்
வீழ்ந்த வெயிலால் கீழிடம் இன்ப
ஓவியக் கம்பள விரிப்பைப் பெற்றது
விழிகள் அழகை உண்ணச் செவிகள்
எழுமின் இசையினை உண்ண மூக்கு
நறுமணம் உண்ண நல்லுடல் குளிரை
உண்ணக் கிடந்த என்னை உடனே
உண்ண வருக என்றான் ஒருமகன்
இன்னும் என்ன உண்பது என்றேன்

கொத்துக் கறியின் குழம்பும் வறுத்த
மத்தி மீனும் வாய்க்கமுதன்றோ!
அங்குப் போகலாம் வருகஎன்றழைத்தான்
அவைகளும் இங்கே இருந்தால் அடடா
குறைவிலா இன்பக் கொள்ளை அன்றோ!
மெய்விழி, மூக்குச் செவிகள், விழுங்கும்
ஊரொளி நாற்றம் ஒலிஅமுது துறந்து
வாய்க்குச் சுவையமுது நோக்கிச் சென்றேன்;
கொன்றை விழிமலர் தேன்புனல் கொட்டிச்
சொல்விரோ என்று செப்பும் போதும்
சென்றேன், வருந்தி வழிநடந்து சென்று
கறுப்புடை ஏழைத் தோழர் காட்டிய
அன்பினில் கறியும் சோறும் அளாவ
உண்டு மகிழ்ந்தேன், நடுப்பகல் ஒருமணி

என்றது மணிப்பொறி! எழுந்து சென்றேன்
கூட்டம் நடக்கும் குறிப்பிடம் நோக்கி!

முப்புறம் கடையும், வீடும் இப்புறம்
தெருவும் சேர்ந்த சின்னதோர் திடலினுள்
தொட்டி இராட்டினம் சுழன்றுகொண்டிருந்தது:
வட்ட இராட்டினம் வண்ணம் பாடிற்று:
நாயிரண்டு போர்ப்பணி நடத்தின.
தாயும் தந்தையும் ஐந்தாறு -- சேயரும்
ஏறிய இயங்கி ஒன்று புகுந்து
பம்பம் பம்பம் எனவம்பு புரிந்தது
திடலின் நடுவில் வெறுமை திகழ்ந்தது
தெருவினில் சிற்சிலர் நின்றுகொண்டு இருந்தனர்
நானெனக்குச் சொற்பொழிவு நடத்தினேன்
என்னுரை எனக்குத் தெரிந்ததே ஆதலின்
உடனே நிறுத்தினேன்; உடனே
இடம்படு கோவைக்கு ஏகினேன் இனிதே!




( 5 )




( 10 )





( 15 )




( 20 )





( 25 )




( 30 )




( 35 )





( 40 )





( 45 )




( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )




( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )




( 100 )




( 105 )






( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )





( 140 )





( 145 )





( 150 )




( 155 )




( 160 )





( 165 )




( 170 )




( 175 )





( 180 )





( 185 )





( 190 )





( 195 )




( 200 )




( 205 )
தமிழர் திருநாள்

விடிந்தது தைம்முதல்! தொடங்கிற்றுத் திருநாள்!
விண்ணெலாம் மண்ணெலாம் தங்கக் கதிர்த்திரள்!
வடிந்தது வடிந்தது காரிருள் வெள்ளம்!
மாயமாய் மறைந்தது கொடுபனிக் காற்றே.
படிந்தது தமிழர்கள் முகமெலாம் உணர்வும்
பத்தரை மாற்றுத் தங்கத்தின் பூச்சும்!
ஒடிந்தது பகைவர் ஆட்சியின் அச்சும
உலகம் மகிழ்ந்தது தமிழக மகிழ்ச்சியால்

புதுநெல் அறுத்த உழவர்கள் பாட்டும்.
பூவைமார் குற்றும் உலக்கைப் பாட்டும்,
இதுஎங்கள் தமிழகம் வெல்க வெல்கவே
என்று பாடும் இளைஞர்கள் பாட்டும்,
முதியவர் மீசையில் இடதுகை யிட்டு
முறுக்கேற்றி வடவரை நொறுக்கடா என்னும்
எதிர்ப்புப் பாட்டும் கடற்பின் அணியுடன்
எழுந்தன உலகெலாம் இசைத்தமிழாக்கியே

இல்ல முகப்பெலாம் வாழையும், பாக்கும்
இளங்குருத் தோலையும், தெங்கின குலைகளும்,
சொல்லும் மாவிலைத் தொங்தலும் கூடியே
சோலை யாக்கின தமிழரின் தெருக்களை!
முல்லைச் சிரிப்பினர் செங்காந்தள் விரல்களால்
முன்றிலை வீட்டினை மாக்கோலம் ஆக்கினார்
செல்வ இளைஞர்கள் அள்ளூறப் போயினார்
செங்க ரும்பு வண்டிகள் சேர்வதால்!

மலையுடைத் தால்என பலாப்பழம் உடைத்தே
மாற்றுயர் பொற்கட்டி போல்களை பெற்றனர்.
தலைச்சுமை வாழைத் தேன்குவ ளைப்பழத்
தாறு வாங்கிச் சீப்பாடி வைத்தனர்.
வலக்கை தாங்காச் சேலத்துக் குண்டு
மாம்ப ழங்கள் வீடெலாம் கமழ்ந்தன.
விலக்கொ ணாக்கொடி முந்திரி கிச்சிலி
விளஅன் னாசி விருப்பம் விளைத்தன.

நாழி அரிசிக்கு நானாழிப் பாலாக
நல்ல விழுக்காட்டுப் புத்துருக்கு நெய்பெறத்
தாழா நெருப்பின் அடுப்புத் தலைசுமக்கத்
தங்கப் புதுப்பானை செங்கரும்பின் சாற்றோடும்
ஏழு நரம்பு சரிபார்க்கும் வல்லவனின்
யாழ்த்தெறிப்புப் போலும் பொங்கி எழுந்தொலிக்க
வாழியோ வாழி என மங்கைமார் வாழ்த்த
மங்காத் தமிழர் பொங்கலோ பொங்கலென்றார்.

இறக்கிய பானையில் ஏலம் கமழ்ந்ததே!
எதிர்காண முந்திரி்ப் பருப்புச் சிரித்தன!
குறைப்பின்றி இடைக்கிடை கொம்புத்தேன் முக்கனி
கூட்டக் கண்டதும் இதுதமிழ் என்றனர்!
சிறுத்த இடைச்சியர் வலிய அணைந்தஎம்
திருவாளர் தருமின்பம் இதுவாகும் என்றனர்.
சிறார்எலாம் வரப்படுத் தியபாடம் என்றனர்
சேயிழை தேனிதழ் இறுஎன்றார் காளையர்

முகந்தெரிந் திடும்இள வாழைக் குருத்து
முழுவீடு நிறைய வரிசையின் விரித்துத்
தகுந்தார் தமிழர் வருகென அழைத்துத்தள்ளு கடைஆ ரியனையும். ஆரியன்
மகனெனும் கலப்பட மகனை ஒழித்து
வானப் பருதிக்கு வாழ்த்துக் கொடுத்து
வகைசேர் தமிழக அன்னைசீர் நினைத்து
வயிறு புடைக்க உண்டனர் பொங்கலே!

பொன்னாடை கட்டி நல்ல இழையணிந்த
பூவைமார் சோலையெலாம் தாவிய ஊஞ்சல்கள்
முன்னோடப் பின்னோடக் குலுங்கு நகைப்பான
முகத்தொடு முத்தமிழ் செவிக்கமு தாமாறும்
தென்னாடு மற்றுள்ள எந்நாடும் காணாத
செங்கைத் தறியாடை தையற் கலைசிறக்க
மின்னும் பலசட்டை மேலாடை வேட்டியுடன்
வேலோடு வாளெடுத்துப் போரிட்டார் ஆமாறும்

பட்டுச் சிறாய்நல்ல பாவாடை பூவாடைப்
பசங்கள் தெருவழகு படைக்கின்றார் ஆமாறும்
கொட்டும் முழக்கம் கூத்தாட்டும் வாய்ப்பாட்டும்
கூடத்தும் மாடத்தும் கும்மாளம் ஆமாறும்
கட்டுமுளைக் காம்பவிழ்த்துக் கையிற் குடப்பாலைக்
காண உதவுகின்ற கறவை மலைஎருது
சொட்டுந்தேன் பூமாலை சூடித் தெருவெல்லாம்
சுவடு பொடிதுள்ளத் துள்ளுவன ஆமாறும்

பொங்கற் பெருநாள் பொன்னாம் தமிழ்த்திருநாள்
பொலிவும் மகிழ்ச்சி மலிவும் புகல்வதுண்டோ?
எங்கும் மகிழ்ச்சியாம் எப்பாங்கும் ஆர்ப்பாரும்
இலங்கைத் தமிழர்களும் நலங்கொல் மலையர்களும்
அங்கங்குப் பொங்கல் அழகு விழாக்கண்டார்
அங்கிருந்தார் ஆனாலும் இங்கிருந் தாரானார்கள்
எங்கள் தமிழ்வெல்க எங்கள் தமிழகம்தான்
எம்மாட்சி கொள்க! இன்பம் மலிகவே!




( 210 )





( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )





( 240 )



( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )




( 285 )
காகிதப்பூ வேண்டாம்

               எடுப்பு

இயற்கை உனக்களித்த மணமலர் இருக்கையில்
ஏனிந்தக் காகிதப்பூ? மகளே             (இய)

               உடனெடுப்பு

செயற்கை மலர்காட்டித் தேன்மல ரினம்கொல்லத்
தெரியார் முயல்கின்றார் தெரிவையே எதிரில் (இய)

               அடிகள்

பொன்போலும் முதற்பொருள் விளைதல் அரிதாயின்
போலிப் பொருள்நாடல் உண்டு -- கேள்,
என்னருந் தமிழகம் இந்தாமுல்லை, இந்தா
சாமந்தி என்பதும் கண்டு -- நல்
அன்பிலார் போல்நீ அழகிலாக் காகிதம்
அழகிய கூந்தலில் அணிதல் எதைக்கொண்டு (இய)

காகிதப் பூவினில் இயற்கை மணமுண்டோ
கட்டழ கினில்உள்ள நுட்பம் -- இளந்
தோகையே தாளிலே காண்பதும் உண்டோ?
தூய்மைஉண் டாகுளிர் உண்டோ? -- நீ
ஏகுவாய் மகளே வண்டுபா டும்மலர்
எடுப்பாய் தொடுப்பாய் கூந்தலில் முடிப்பாய்












( 290 )




( 295 )





( 300 )
கூதிர் விழா

                     
கூதிர் விழா -- நல்ல
குளிர் காலப் பொன்விழா
கொட்டடா கொட்டடா முரசம்!

வீதிக்கு வீதி -- பல
வீட்டுப் புலித்தமிழர்
வில்லேந்தி வந்தனர் வாழ்க!

சூதற்ற தமிழ்மாதர்
சோலைப் பசுங்கிளிகள்
சுடர்விளக் கேந்தினார் வாழ்க!

போழ்தும் புறம்போகப்
பொன்னாடு வலம்வந்து
பொதுமன்று சூழ்ந்தனர் வாழ்க!

தமிழர் விழா -- நல்ல
தண்கூதிர்ப் பொன்விழா
தடதடென் றோச்சடா முழவம்

அமுதென்று பாடுவோம்
அதுநன்று போற்றுவோம்
அறிவென்று சொல்லடா தமிழை!

நமதென்று நாட்டடா
நந்தமிழ்ப் பொன்னாடு!
நரிகளுக் கிங்கில்லை வேலை!

சமைகின்ற கலைஎலாம்
தமிழ்தந்த பணிஎலாம்
தலைஎன்று சாற்றடா உலகில்

ஊதடா நற்றமிழர்
ஒன்றென்று நாடெலாம்
ஊதடா ஊதடா தாரை!

மீதெலாம் கார்வானம்
விளைவெலாம்! செந்நெல்
விருப்பெலாம் போர் ஆமென்றூது!

போழ்தெலாம் அறமென்று
புகைஎலாம் அகிலென்று
பொற்றாரை ஊதடா ஊது!

கூதிராம் ஐப்பசிக்
கார்த்திகைக் குளிர்விழா
கொட்டடா கொட்டடா முரசம்!





( 305 )




( 310 )






( 315 )






( 320 )





( 325 )






( 330 )






( 335 )
இயற்கை தரும் உண்மை

பாலைக் காய்ச்சும் பக்குவம் அறியா
மனைவியின் மடமை மாற்றவேண்டி
அவளிடம் இதனை அறைவாய்; அதனால்
அவள்தன் மடமையை அகற்ற முயல்வாள்
என்றேன். என்றன் இதயம் முதலில்
இந்நாட்டு மக்கட் கிளம்புவேன் என்றது.
சனப்ரதி நிதிகளாய்ச் சார்ந்த மனிதரே,

   சனங்களே, இங்குச் சகலமும் மாறும்,
   உமது தீய ஒழுக்கம் மாற்றி
   நல்லொழுக்கத்தை நாட வேண்டும்நீர்!
   அண்டை வீட்டான் அழிய வேண்டும்
   அன்னிய மதத்தான் அழிய வேண்டும்
   மற்றச் சாதியான் மடிய வேண்டும்
   என்று தினம்தினம் எண்ணி எண்ணி
   இந்த எண்ணத்தை இதயம் பூசி
   நாவையும் இப்படி நடத்தி நடத்திக்
   கண்களை இந்தக் காட்சியில் பயிற்றி
   அந்த மலத்தை அதிகம் பெருக்கி
   எளிய புழுப்போல் அதனில் நெளிகிறீர்.
   அனைவரும் நாட்டார் அனைவரும் சோதரர்
   என்ற பெருநோக் கெப்போ திருந்தது?
   நீங்கள் பூண்ட நீட்டுத் தளையைச்
   சிறிது நீக்கச் செயல்செயும் போதும்
   பிறனுடன் ஒற்றுமை மறுப்பதால் வெற்றி
   பெறலாம் என்பதை அறிந்துள போதும்
   ஒத்துப் போக உள்ளம் பிறந்ததே!
   "அண்டை வீட்டான் அயல்மதம் சாதி
   அழிய வேண்டும்?" -- அந்தோ ஒழுக்கமா!
   பலநூற் றாண்டுகள் பாழ்போ யினவே!
   மலப்புழு நிலையில் மாய்கின்றீரே!
   குணங்கள் மாறும்; மாற்றலாம்
   இணங்குக! உயர்க! இன்பம் வருமே!

   ஒன்று மற்றொன்றாய் உலகிடை எவையும்
   குணங்களில் மாறக் கூடியவைகள்!
   தீயைச் சொரிந்த தெழுமைச் சூரியன்
   மேற்றிசை யேகி வீழு முன்பு
   கண்ணுக் கழகிய காட்சி தந்து
   தீமை சிறிதும் இன்றித் திகழ்ந்தது.

   அரைத்துளி நீரும் அற்ற ஏரியின்
   அகன்ற நடுத்தலம்! அமைதியில் இருந்தேன்
   தீப்பிடித் தெரிந்த ஆகாயத்தில்
   தேகம் சிலிர்க்கக் காற்று மிதந்தது!

   என்னைச் சுற்றிப் பெரியதோர் வட்டமாய்
   எழிலுறு மரங்கள் பச்சென் றிருந்தன!
   இலைகள் பட்சி யினங்கள் அனைத்தும்
   அனல்தவிர்ந் தனவாய் ஆடின பாடின!
   உயர்ந்த வானிடை உற்ற மேற்கில்
   ஒளிப்பிர வாகம் ஒருநூறு நிறங்கள்!
   தகத்தகாயம் சார்ந்தஅந் நிறங்களில்
   ஒன்றில் ஒன்று சங்கமம்! ஆங்கே
   ஊதாவர்ணத் தடாகம், பொன்னின்
   உருக்கு வெள்ளத்தில் ஓடிக்கலந்தது!  

( 340 )





( 345 )




( 350 )




( 355 )




( 360 )




( 365 )





( 370 )




( 375 )






( 380 )




( 385 )



அச்சந்தவிர்!

   அஞ்சாமை வேண்டும் தமிழர்க்கே -- பகையின்
   அழிவுக் கடலின் ஆழத்தில் மகிழ       (அஞ்சாமை)

கொஞ்சாமை பகைவரைக் கிட்டாமை பகைவர்சொல்
கேளாமை காட்டிக் கொடாமைபின் னிடாமைஎனும் (அஞ்சாமை)

   தஞ்சமாய் வந்தவர் தலையினில் ஏறினார்
   தமிழர் மேன்மையைத் தாழ்த்திக் கூறினார்
   நெஞ்சீர மற்றவர்; இட்டாரைச் சீறினார்
   நேரினில் மக்கள் இயல்பையே மீறினார்        (அஞ்சாமை)

   பிச்சைக்கு வந்தவர் அதிகாரம் பெற்றார்
   பிறர்நலம் அழிப்பதோர் பேடிமை உற்றார்
   பொய்ச்சி ரிப்புச் சிரித்திடக் கற்றார்
   பொதுவறம் கொல்வதில் நாணமே அற்றார் (அஞ்சாமை)

   தமிழர் உணர்ச்சியைக் குறைத்தெடை போட்டார்
   தமிழர் எதிர்ப்புக்குத் தப்பிட மாட்டார்!
   தமிழ்நாட்டுக் குடையவர் யார்? தமிழ் நாட்டார்.
   தமிழரை எதிர்ப்பவ ரோஅயல் நாட்டார்

   வசைக்கும் சிறைக்கும் குண்டுக்கும் எதிர்ப்புக்கும்
   வாட்டிடும் படுகொலைக் கும்வரும் சாவுக்கும்
   அசைக்க முடியாத மலையை நிகர்க்கும்
   அஞ்சாமை ஒன்றே வேண்டும் தமிழர்க்கு.
( 390 )






( 395 )





( 400 )





( 405 )




புறப்படட்டும் புலிகள்!

தமிழ் நாட்டுவிடுதலை, தமிழ்ப்புலவர் விடுதலை!
நமக்கென்ன என்றிருப் பாரோ! -- புலவர்
நமக்கென்ன என்றிருப் பாரோ!           (தமிழ்)

தமிழைப் பேச உரிமையும் இல்லை
தாயை வாழ்த்தினும் வந்திடும் தொல்லை    (தமிழ்)

தமிழ்மொழி எல்லாம் வடமொழி என்று
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று
தமிழ்மொழி எல்லாம் தமிழ்மொழி என்று
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று
தமிழ்ப்பகைப் பார்ப்பனர் அடைவது நன்மை
தமிழ்ப்புல வோர்கள் அடைவது தீமை     (தமிழ்)

நற்றமிழ் என்பது தில்லிக் காகாது
நம்அமைச் சர்க்கும் காதுகே ளாது
புற்றிலே மோதினால் பாம்புசா காது
புறப்ப டட்டும் புலிகள்இப் போது         (தமிழ்)

தமிழ்விடு தலைப்போரைத் தட்டிக்க ழிப்பதா?
தட்டியே மனைவியின் முகத்தில்வி ழிப்பதா?
தமக்குள பெருமையைத் தாமே அழிப்பதா?
தமைஈன்ற தாயின் குடரைக்கி ழிப்பதா?     (தமிழ்)

ஆட்டிப் படைப்பவர்க் கஞ்சுதல் வேண்டாம்
அமைச்சர் என்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம்
காட்டிக் கொடுப்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம்
கருத்திலாக் கட்சிகட்கு அஞ்சுதல் வேண்டாம்!   (தமிழ்)
( 410 )






( 415 )




( 420 )






( 425 )





( 430 )