பக்கம் எண் :

ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!

இயற்கையில் இல்லை மனிதருக்கு ஏன்?

மலர்கள் பற்பல, மணமும் பற்பல மதங்கள் கிடையாது;
விலங்குகள் பற்பல வண்ணம் பற்பல வேற்றுமை கிடையாது.
தண்ணீர் பற்பல, நிலங்கள் பற்பல சாதிகள் கிடையாது;
பண்கள் பற்பல பாடல்கள் பற்பல பகைத்தீ கிடையாது.
மலைகள் பற்பல மடுவுகள் பற்பல மடமைகள் கிடையாது;
அலைகள் பற்பல ஆழ்கடல் பற்பல சமயம் ஆங்கில்லை.
மாந்தர் பற்பலர் மொழிகள் பற்பல
ஏந்தும் சாதி சமயம் மதத்தின் இழிவால் கெட்டனரே!




( 5 )
திணிக்கும் மொழி வேண்டா
இணைக்கும் மொழி வேண்டும்

அருமைப் பிள்ளாய், அழகுக் குள்ளாய்,
   அந்தமிழைக் கற்பாய்!
பெருமையை சேரும் செம்மை கூறும்
   பைந்தமிழைக் கற்பாய்

இமிழ் கடல்சூழ் உலகினிலே
   ஈடிலாத மொழியுள்
தமிழ்மொழிபோல் தாய்மொழி போல்
   தருவதுண்டோ விழிகள்!

பாங்கிருக்கும் பயனிருக்கும்
   உலக மொழி ஒன்று
ஆங்கிலத்தை உலகொருமை
   அறிவுக் கேற்பாய் நன்று

பன்மொழிகள் கற்பதுவும்
   படிப்புக் கழகாகும்;
இன்பத்தமிழை ஏற்றதின் பின்
   எய்துவதே சாலும்!

ஈங்கிரண்டு மொழிகள் போதும்
   எண்ணமெலாம் ஓங்கும்
வீங்குலகில் திணிக்கும் மொழி
   விளைத்திடுமே தீங்கும்!

( 10 )





( 15 )





( 20 )






( 25 )
மகளே! மகளே!

வளரும் என்றன் மகளே,-- என்
   வாழ்வுயர்த்தும் மகனே,
தளரும் தமிழகத்தை -- நீர்
   தாங்க வேண்டும் அறிக.

நல்லவற்றைக் காண்பீர் -- நீர்
   நல்லவற்றைக் கேட்பீர்
நல்லவற்றைக் கற்பீர் -- நீர்
   நல்லவற்றை நினைப்பீர்!

ஒழுக்கம் ஓம்ப வேண்டும் -- நீர்
   உயர்க கல்வியாலே,
வி.ழுப்பந் தானே தூண்டும் -- நம்
   விரிந்த உலகில் யாண்டும்!

நாளை நீங்கள் நாட்டின் -- மக்கள்
   நட்புறவுப் பாலம்
ஆளைச் சுரண்டி உண்ணும் -- கீழ்
   அரசியலே வேண்டா.

பொதுமை உலகம் வேண்டும் -- நீர்
   பொய்புரட்டுத் தீயர்
முதுகொடிக்க வேண்டும் -- நம்
   முன்னேற்ற மிதுவாகும்.

இன்று சிறுவர் நீங்கள் -- புகழ்
   என்றும் அறியாத
நன்று செய்யும் வாழ்க்கை -- நீர்
   நடைமுறையில் கொள்க!

( 30 )





( 35 )





( 40 )






( 45 )





( 50 )
வீறுடன் நில்

விழுவது இயல்பு வெட்கப் படாதே
   வீறுடன் நின்றிடுவாய்!
அழுபவன் கோழை அச்சத் தியல்பு
   தாழ்வை அகற்றிடுவாய்!
தொழுவதும் பாரை சோம்பல் பார்ப்பையா?
   தொழிலாளியைத் தொழுவாய்!
முழுமையாம் உலகை முன்னேறச் செய்
   முரண்களை வென்றிடுவாய்!



( 55 )




( 60 )
புத்துலகம் காண்போம்

தமிழகத்தில் நாம் பிறந்தோம்
     தமிழர்களாய் வாழ்வோம்.
தமிழினத்தில் நாம் பிறந்தோம்
     தமிழ்மொழிக்காய் வாழ்வோம்.

தமிழறத்தில் நாம் வளர்ந்தோம்
     தரையனைத்தும் சேர்ப்போம்;
தமிழுறவில் நாம் செழித்தோம்
     தழுவி உலகு காப்போம்.

தமிழ்ப் பண்பில்நாம் சிறந்தோம்
     சாதி மதம் தவிர்ப்போம்;
 தமிழன்பில் நாம் குளித்தோம்
     தனித்திருத்தல் அவிப்போம்.

 பூங்குன்றன் மொழிப்பொருளாய்ப்
     புத்துலகம் காண்போம்,
பாங்கமைக்கும் பொதுவுடைமை
     பண்பனைத்தும் பூண்போம்!





( 65 )





( 70 )





( 75 )
ஊஞ்சலாடு


ஊஞ்சலாடு, ஊஞ்சலாடு உயிரின் செல்வமே!
ஊஞ்சலாடு ஊஞ்சலாடு உணர்வின் கோலமே!
ஓங்கும் காற்றின் திசையில் ஆடி ஊஞ்சல் ஆடுவாய்!
மாங்குயில்கள் பாடக் கேட்டு மகிழ்வில் ஆடுவாய்!
இளமைக் கால்கள் உந்தி உந்தி ஊஞ்சல் ஆடுவாய்!
வளமை சேரும் வலிவும் பொலிவும் வளரும் ஆடுவாய்!
உணர்வு பொங்க உயிர்களிக்க ஊஞ்சல் ஆடுவாய்!
உணர்ச்சி உந்த ஊக்கம் பெருக ஊஞ்சல் ஆடுவாய்!
குழற்பறக்கக் கொன்றை மணக்க ஊஞ்சல் ஆடுவாய்!
அழகு மயிலின் ஆட்டம் போல ஊஞ்சல் ஆடுவாய்




( 80 )




( 85 )
கேட்பேனா காண்பேனா?

அறிவொளி ஏற்றும் அறிஞன் என்னும்
மொழியைக் கேட்பேனா?

வெறித்தனம் மாய்க்கும் அறிவியல் புலமை
வியப்பைக் கேட்பேனா?

இருள் உலகத்தை மாற்றினாய் என்றே
இயம்பக் கேட்பேனா?

பொருள் உலகத்தைப் பொதுமை செய்த
புரட்சியைக் கேட்பேனா?

மடமை ஒழித்து மக்களை உயர்த்தும்
மாண்பைக் கேட்பேனா?

கடமைக் கென்றே வாழ்க்கைச் செயல்கள்
கனியக் காண்பேனா?

கள்ளம் குள்ளம் கயமையை நாட்டில்
களையக் காண்பேனா?

உள்ளம் உயரும் கொள்கைக் காக
உழைக்கக் காண்பேனா?

பெற்றோர் தம்மை பேருல குவக்கப்
பென்னம் பெருஞ்செயல்கள்

கற்ற வரேஎம் கண்ணின் மணிகாள்
களிக்கச் செய்வீரே!





( 90 )







( 95 )






( 100 )







( 105 )
தாயும் குழந்தையும்

குழந்தை: என்னைப் பெற்றது யாரம்மா?

தாய்:    அன்பிணைப்பு தானம்மா!

குழந்தை: சின்னக் கைகள் கால்களும்
        செழித்து வளர்ந்ததெப்படி?

தாய்:    என்றன் குருதி தன்னையே
        இணைக்கும் கொடியால் பெற்றனை.

குழந்தை: கண்ணில் ஒளியை எப்படி
        காணுமாறு செய்தனை?

தாய்:     உண்மை யான உள்ளொளி
        உன்றுன் தந்தை பெற்றதால்.

குழந்தை: நல்லுடம்பு பெற்றதும்
       நான் அறியச் சொல்லம்மா!

தாய்:    நல்லொழுக்கம் வாழ்விலே
       நாங்கள் பெற்றதாலம்மா!

குழந்தை: அரிய செய்தி யாவையும்
       அறிகிறேன் நான் எப்படி!

தாய்:    பெரியார் பேச்சு பற்பல
       பேறு காலம் கேட்டதால்!

குழந்தை: பெறுதற் கரிய பேரினைப்
        பெற்றேன் என்றார் ஊரினர்?

தாய்:    குறளைக் கற்ற தந்தையார்
        கூட்டுறவினால் அம்மா?

குழந்தை:  வாயிமொழிகள் ஒவ்வொன்றும்
        மணந்தினித்தல் ஏனம்மா?

தாய்:     தாய்மொழி நம் தமிழ்மொழி
        தலை மலைத்தேன் அல்லவா;






( 110 )







( 115 )






( 120 )







( 125 )






( 130 )
தமிழுலகத் தலைமை

பொய்யும் புரட்டும் போகப்
போக்கிலிகள் சாக
மெய்எனும்தீ ஏந்துகநீ தம்பி -- நல்ல
மேன்மையெல்லாம் சாரும் தங்கக் கம்பி!

இருளும் மறுளும் சாக
இழிவனைத்தும் வேக.
கருத்தில் புரட்சி ஏந்துக நீ தம்பி -- நல்ல
காலம் உன்றன் பின்னால்வரும் நம்பி!

அயர்வும் துயரும் நோக
ஆண்மை மேன்மையாக
உயர்ந்தோர் உறவைத் தேடிக்கொள்நீ தம்பி -- நல்ல
உலகப் பொதுமை உடன்வரவே எம்பி!

தமிழரை வைத்துத் தின்பார்
தாயின் உயிரை உண்பார்!
தமிழனாக வாழ்ந்தால் போதும் தம்பி -- நல்ல
தலைமை கொள்ளும் தமிழுலகம் நம்பி!



( 135 )





( 140 )






( 145 )


பார்! பார்!

பொன்னிளங் காலையில் பூத்த சுடர்க் கதிர்பார்!
இன் இள வேனிலில் இன்ப மலர்ச்சியைப் பார்!
மின்னலின் கொத்தாக முல்லை மலர்ந்தது பார்!
கன்னலில் தோகையாய்க் களித்தசைந்து ஆடலைப் பார்!

வண்ணம் மிகுந்தெழில் வடிக்கும் பறவைகள் பார்!
கண்ணில் கருத்திலே கற்பனை கூட்டலைப் பார்!
இன்சுவை காய்கனி எங்கும் செழித்தலைப் பார்!
செந்நெல் அறுவடை செய்யும் உழவரைப்பார்!

இயற்கைத்தாய் பற்பல இன்பம் அளித்தலைப்பார்!
முயற்சி இன்றேல் வாழ்வு முழுமை பெறாததைப்பார்!


( 150 )





( 155 )


அகர முதலி

அகர முதலி ஒன்றை நாளும் பார்த்து வருவாய்
நிகரிலாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்!
பொற் சுரங்கம் போல புதிய சொற்கள்
முற்படும் வான்வில்லாய் முழுதும் வைரக் கற்கள்
சொல் லுலகக் குதிரை தூய அகர முதலி,
வெல்லுவாய் நீ ஏறி வீர நூலுக் குதவி!
சொற்களஞ் சியத்தைச் சொந்ந மாக்கிக் கொண்டால்
கற்ப தெல்லாம் புரியும் கற்ப னைகள் விரியும்.
நிகண்டு செய்யுட் கூண்டில் அடைந்த சொற்குயில்கள்
அகர முதலிக் காவில் அமர்ந்து கூவப் கேட்பாய்!
ஒரு பொருளைக் குறித்த ஒரு நூறு சொற்கள்
அருமையாக ஆடும் அழகு மலர்களைப்போல்.
அணியணியாய் வீரர் ஆர்த்து நிற்பதைப் போல்
மணிமணியாய்ச் சொற்கள் மனத்தில் ஏற்றிக் கொள்வாய்!


( 160 )




( 165 )




( 170 )

குறள் படித்தேன்

குறள் படித்தேன் குறள் படித்தேன்
    குணமடைந்தேன் நான் -- தூய
    குருதி கொண்டேன் நான்!
    உறுதி கொண்டேன் நான்!

குறள் படித்தேன் குறள் படித்தேன்
    குறைக ளைந்தேன் நான் -- மனக்
    கொழுமை கொண்டேன் நான் -- உயிர்ச்
    செழுமை பெற்றேன் நான்!

அறம் படித்தேன் பொருள்படித்தேன்
    இன்பம் படித்தேன் -- அறி
    வின்பம் குடித்தேன் -- உலகத்
    துன்பம் துடைத்தேன்!

திறம் படைத்தேன் உரம் படைத்தேன்
    திருக்குற ளாலே -- முப்பால்
    தருங் குற ளாலே -- உலகு
    ஒழுங்குற ளாலே!



( 175 )





( 180 )






( 185 )
முதலாளி

முதலாளி, முதலாளி, முதலாளி;
முட்டை போலத் தலையுமக்குச் சிறுத்திருப்பதேன்?
மூட்டைபோல வயிறுமட்டும் பெருத்திருப்பதேன்?
குட்டைக் கைகள், குட்டைக் கால்கள்
குறுகி இருப்பதேன்? குறுகியிருப் பதேன்?

முதலாளி, முதலாளி, முதலாளி!

கண்கள் இரண்டும் தீப்பிழம்பாய் சிவந்திருப்பதேன்
களிப்பிலாது கடுகடுப்பு பரந்திருப்பதேன்?
திண்டிரண்டு பக்கத்திலே திரண்டிருப்பதேன்?
திருட்டுக்கணக்குப் புத்தகங்கள் தெய்வத்தின் பின் ஏன்?

முதலாளி, முதலாளி, முதலாளி!

கழுத்துமுதல் கால்வரை கதராடைஏன்?
கட்டிய மனைவி பிள்ளைகட்குப் பட்டாடைகள் ஏன்?
கொழுத்த ஆட்டுக் கிடாவைப் போல் கூத்தியாரும் ஏன்?
குளிர் அறைவிட்டகலாமல் குடியிருப்பதேன்?

முதலாளி, முதலாளி, முதலாளி!

உடலுழைப்பு என்பதையே அறியாததும் ஏன்?
உளகறிவைப் பெறுவதிலே நாட்டமில்லையேன்?
கடலில் செல்லும் கப்பலைப்போல் நெய்வண்டி ஏன்?
கள்ளச் சந்தை கணக்கனைத்தும் அதில் சுமத்தல் ஏன்?

முதலாளி, முதலாளி, முதலாளி!

ஆளும் கட்சி எதுவந்தாலும் அதில்இணைவதேன்?
ஆளும் மன்ற பேரவையில் இடம்பெறுவதேன்?
மாளுகின்ற தொழிலாளியைக் காண மறுப்பதேன்?
வள்ளலாரை வள்ளுவரை வாழ்த்தும் விழா ஏன்?


( 190 )






( 195 )






( 200 )






( 205 )






( 210 )
தொழிலாளி

தொழிலாளி தொழிலாளி தொழிலாளி!

தூங்கிஎழுந்த இரவுரை வேலைசெய்வதேன்?
துன்பமெலாம் தனியுடைமை யாகக் கொண்டதேன்?
மூங்கைபோல நீஉழைத்து முணு முணுப்பதேன்?
முப்போதும்நீ முதலாளிக்கே அடிமை ஆவதேன்?

தொழிலாளி தொழிலாளி தொழிலாளி!

தோள்உழைப்பில் நாடோறும் நீ செல்வம் சேர்ப்பினும்
சுரண்டப்பட்டு சாகின்றாய் சோறில்லையே ஏன்?
மாள்வதற்கா செல்வர்களின் ஆலை சாலையில்
மார் ஒடிய தொல்லையுற்றுப் பாடுபடல் ஏன்?

தொழிலாளி தொழிலாளி தொழிலாளி!

துணியுமில்லை இடமில்லை அதன் காரணங்கள் ஏன்?
தோன்றவில்லை துலங்கவில்லை சோர்வடைவதேன்?
மணிமணியாய் நெல்விளைத்தாய் மகிழ்ச்சி இல்லைஏன்?
மற்றவர்க்கு மாடாய்உழைத்து மாளுவது ஏன்?

தொழிலாளி தொழிலாளி தொழிலாளி!

புத்துணர்வு பெறுவதெந்நாள்? புரட்சிக்குயிர் தருவதெந்நாள்?
புயலாக எழுவதெந்நாள்? புரட்டுலகைத் தீர்ப்பதெந்நாள்?
புத்துலகுப் பொதுவுடைமை புகுக்குவதும் நாள்எந்நாள்?
புரட்டுமுத லாளியத்தைப் போக்கிடும்நாள் எந்நாளோ?



( 215 )






( 220 )






( 225 )






( 230 )


அம்மா! அம்மா!

அம்மாஉன்றன் கைவளையாய் ஆகமாட்டேனா?
அலுங்கிக் குலுங்கி நடக்கையிலே பாட மாட்டேனா?
செம்மாதுளை சிரிப்பதுபோல் சிரித்தெனைப் பார்ப்பாய்,
செல்வமகனே என்றெனைநீ மகிழ்வுடன் சேர்ப்பாய்!
அம்மா உன்றன் காதணியாய் ஆகமாட்டேனா?
அசைந்தசைந்து கதைகளினைச் சொல்லமாட்டேனா?
சும்மாஇரு என்றெனைநீ சொல்லிவிடுவாயா?
அம்மா உன்றன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட்டேனா?
அழகொளியாய் நெற்றிவானில் மினுங்க மாட்டேனா?
இம்மா நிலத்தில் என்மகனே சங்கமம் என்பாய்
எழிற்கண்ணாடி பார்த்துப்பார்த்து இருந்தனை அன்பாய்!


( 235 )




( 240 )