பக்கம் எண் :

128கவிமணியின் கவிதைகள்

Untitled Document
828 ஆயும் மேலதி காரிகள் வாழும்அக்
கோயில் தோறுங்கை கூப்பித் தொழுதனன்;
ஓயும் நெஞ்சுக் குறுதுசொல் வார்இலை;
ஏயும் என்விதிக் கென்செய்கு வேன்? ஐயா!

829 நெஞ்சில் நூலை நினைப்பது விட்டு, இனிப்
பஞ்சின் நூலிற் பழகத் துணிகுவன்;
கெஞ்சு வாழ்க்கையும் கேடும் ஒழியுமே;
விஞ்சு செல்வமும் மேன்மையும் தங்குமே.

105. தீபாவளி
தொழிலாளி பாட்டு
830 பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் - இந்தப்
     பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;
தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்
     சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம்.

831 ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! - அதை
     ஆண்டியும் கொண்டாட வேண்டாம், அடா!
தீண்டு துயர்போகும் நாள் இதடா! - உள்ளம்
     தேடித் தவித்திடும் நாள் இதடா!

832 உற்றார் உறவினர் யாவருமே - கூடி
     ஒன்றாக உண்டிடும் நாள் இதடா!
வற்றாத செல்வம் படைத்தவர்போல - நாம்
     வாழ்வின் நலம்பெறும் நாள் இதடா!

833 வாழத் தயங்கும் இக் காலத்திலே - துளி
     வாழ்வை அளித்திடும் நாள் இதடா!
ஏழைக்கிரங்கி நரகாசுரன் - முன்னம்
     ஈசனை வேண்டிய நாள் இதடா!

834 சென்றதை எண்ணி வருந்தாதேடா! - இனிச்
     சேர்வதும் எண்ணி நடுங்காதேடா!
இன்றைக் கிருப்பதே உண்மை, அடா! - நாளை
     எப்படியோ? தெரி யாதோ, அடா!