பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு155

Untitled Document
128. ஆறுமுக நாவலர்

(யாழ்ப்பாணம்)

1003 புண்ணியநாள் நாளெல்லாம் போற்றுநாள், செந் தமிழ்த்தாய்
எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள், - மண்ணுலகில்
மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள், ஆறுமுக
நாவலர்கோன் தோன்றியநல் நாள்.

வேறு

1004 ஆடும் தில்லை யம்பலவன்
     அடிகள் மறவா அன்புடையோன்,
பீடு பெறவே செந்தமிழைப்
     பேணி வளர்த்த பெரும்புலவன்,
நீடு சைவம் இவ்வுலகில்
     நிலவச் செய்த குருநாதன்,
நாடு புகழும் ஆறுமுக
     நாவ லன்பேர் மறவோமே.

1005 இல்லா ஏழை எளியவருக்கு
     இரங்கும் இனிய குணசீலன்,
கல்லா தவரின் கல்நெஞ்சும்
     கனியப் பேசும் கனிவுடையோன்,
வல்லா ரறிஞர் செல்வரறம்
     வளர்க்கும் ஈழ வளநாட்டன்,
நல்லார் போற்றும் ஆறுமுக
     நாவ லன்பேர் மறவோமே.

129. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்

1006 அந்தரத் தம்புலியும் ஆடரவும் சூடாமல்
கந்தரத்து வெவ்விடமும் காட்டாமல் - வந்தருளும்
அம்பல வாணன் அடிமலரைப் போற்றிநிதம்
கும்பிடுநீ நெஞ்சே குழைந்து.