பக்கம் எண் :

160கவிமணியின் கவிதைகள்

Untitled Document
134. சுத்தானந்த பாரதி

1025 கண்டும் கனியும் கரும்பும் களியமுதும்
தண்டமிழில் கொண்டுதரும் தண்ணளியான் - மண்டுபுகழ்ப்
பண்டிதசுத் தானந்த பாரதிசெய் பாவிருந்தை
உண்டறியார் உண்டோ? உரை.

1026 முற்றத் துறந்த முனிவனை முத்தமிழும்
கற்றுத் தெளிந்த கலைஞனை - உற்றநல்
அன்புருவ மானசுத் தானந்த பாரதியை
மன்புவியில் வாழ்த்துகவென் வாய்.

வேறு

1027 கொண்டல் வண்ணா! கோபாலா!
     கும்பிட் டுன்னை வேண்டுகிறேன்
அண்டு மன்பால் தமிழன்னைக்கு
     அல்லும் பகலும் அலுப்பின்றித்
தொண்டும் செய்யும் தவயோகி
     சுத்தா னந்த பாரதியிம்
மண்டலத்தில் என்றென்றும்
     வாழ வரம் நீ வழங்குவையே!

1028 சிந்தை கனிந்திந்தச் சிறுகுடிலில் காட்சிதர
வந்தருள்சுத் தானந்த மாமுனியே - வந்தனங்கள்
ஆயிரம் செய்தேன், அரிய தமிழ்த்தெய்வக்
கோயில்நீ என்றுளம் கொண்டு.

1029 தண்டமிழ்த்தாய் தந்த தவயோக மெய்ஞ்ஞான
பண்டிதசுத் தானந்த பாரதியே! - மண்டுபுகழ்
இந்திய நாட்டில் இமய மலையேபோல்
சந்ததம் வாழ்க தழைத்து.

1030 எத்திசையும் கண்டுதொழ எங்கள் புதுவைவளர்
சித்தன்யோ கீசன் திருவருளால் - நித்தமுமே
அன்புருவ மானசுத் தானந்தப் பைங்கிளிநீ
மன்புவியில் வாழ்க மகிழ்ந்து.