பக்கம் எண் :

214கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  கண்ணிற் காணா விண்ணுலகம்
     கடந்து சென்றதேன்? அம்மா !
வண்ணக்கிளியே! மடமயிலே !
     மாதர் மணியே! சகுந்தலையே!

1283 காதல் முற்றி விளைந்துகனி
     கனியும் பருவத்து அம்மா! நின்
சாதல் கண்ட துயரெமக்குத்
     தாங்கொ ணாத துயரேயாம்;
ஈதல் ஓம்பும் இல்லறத்தின்
     இயல்பை எவர்க்கும் உணர்த்த வந்த
கோதி லாத அரியகுலக்
     கொழுந்தே! தேவி சகுந்தலையே!

240. கஸ்தூரிபா

1284 வையம் புகழும் காந்திமகான்
     வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்துநிதம்
செய்யும் தொழில்கள் ஒவ்வொன்றும்
     திருத்தச் செய்து கண்கண்ட
தெய்வம் கணவன் என்றுள்ளம்
     தெளிந்த தாயே நீயெம்மை
வெய்ய துயரில் வீழ்த்தியின்று
     விண்ணா டாளச் சென்றனையே!

241. மகாத்மா காந்தியடிகள்

1285 திடம்படைத்த கல்நெஞ்சம் திடுக்கிட்டு
     நடுநடுங்கிச் சிதறிப் போக
மடம்படைத்த மாபாவி வஞ்சனையால்
     காந்திமகான் மடியச் சுட்டான்;
உடம்பனைத்தும் வாயாக அழுதாலும்
     உறுதுயரம் ஒழிந்தி டாதால்;
இடம்படைத்த உலகாளும் இறையே நீ
     எங்கொழிந்தாய் இந்நாள் ஐயா!