பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு343

Untitled Document
8. புத்தரும் சுஜாதையும்


1622 பார்புகழ் கங்கை பாயும்நன் னாட்டில்
ஆட்டின் மந்தையோடு ஆனிரை பலவும்
ஆளும் அடிமையும் அளவிடற்கு அரிய
நிதியும் பண்ணை நிலங்களு முடையோன்,
பக்தியில் சிறந்தோன் பரம தாயாளன்,
தன்னிக ரில்லாத் தலைவன் ஒருன்
வாழ்ந்து வந்தனன். வாழ்ந்தவன் இருந்த
திருப்பதி யதனைச் ‘சேனானி’ என்னும்
அவன்குடிப் பெயரால் அழைத்தனர் எவரும்
வள்ளல் இவற்கு வாய்த்த மனைவி -
உண்மையும் அறிவும் உறையும் உளத்தினள்;
எளிமையும் பொறுமையும் இரக்கமும் உடையவள்;
எவர்க்கும் இன்னுரை இயம்பும் இயல்பினள்;
பூத்த தாமரை பொலிவுறு முகத்தினள்;
அங்கையற் கண்ணி, அழகின் செல்வி;
மங்கையர் மாமணி, மாசறு மடந்தை -
சுஜாதை என்னும் சுகணசுந் தரியாம்.
செப்புதற்கு அரிய செல்வம் படைத்திவர்
இவரும் இல்லறம் இனிது நடாத்தி
வாழும் நாளில், மைந்தன் இல்லாக்
குறையொன்று அவருளும் குடிகொண் டிருந்தது.
அதனால்,
தேவி சுஜாதை தினந்தினந் தவறாது
அரசு சுற்றினாள், ஆலயம் தொழுதனள்.
நோன்புகள் பற்பல நோற்று வந்தனள்.
அன்ன சத்திரம் ஆதுலர் சாலை,
தண்ணீர் பந்தல், சாவடி யாதிய
அறநிலை யங்கள் ஆங்காங்கு அமைந்தனன்;
‘உம்பரும் விரும்பி உண்பதற் குரிய
பண்டம் பலவும் பக்குவம் செய்து
பொற்றா லங்கள் பொலிவுற எடுத்து
வனத்தின் தெய்வம் வாழ்மரத் தடியில்