பக்கம் எண் :

40கவிமணியின் கவிதைகள்

Untitled Document
36. கடிகாரம்
240 சேவற் கோழியுண்டு காகமுண்டு - வானம்
     செக்கச் சிவந்து தெரிவதுண்டு;
மேவு பொன்னே! அதி காலை தெரிந்திட
     வேறும் கடிகாரம் வேண்டுமோடி?

241   செங்கதிர் பொங்கு வருவதுண்டு - நல்ல
     செந்தா மரைகள் மலர்வதுண்டு
மங்கையே! காலைப் பொழுதை யுணர்ந்திட
     மற்றும் கடிகாரம் வேண்டுமோடி?

242   தன்னிழல் தன்னடி யாவதுண்டு - சுடர்
     தானும் தலைநேர் எழுவதுண்டு;
இன்னமுதே! பகல் உச்சியி தென்றிட
     ஏதும் கடிகாரம் வேண்டுமோடி?

243   விண்மணி ஆழியில் வீழ்வதுண்டு - வாசம்
     வீசும் மந்தாரை மலர்வதுண்டு;
கண்மணியே! மாலைக் காலம் குறித்திடக்
     கையில் கடிகாரம் வேண்டுமோடி?

244   முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின்
     மொட்டுகள் மெல்ல அவிழ்வதுண்டு;
மெல்லியலே! மாலை வேளையறிந்திட
     வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி?

245   அம்புலி நட்சத் திரங்களுண்டு - கணக்கு
     ஆக்கி யறிய வழிகளுண்டு;
இன்பமே! நேரம் இரவில் அறிந்திட
     இன்னும் கடிகாரம் வேண்டுமோடி?

246   கம்மென வாசம் கமழ்பாரி சாதம் - இக்
     காவில் மலர்ந்து சொரிவதுண்டு
அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட
     ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி?

247 காலை மாலை எந்த வேளையும் - சூரிய
     காந்தி மலர்தானே காட்டிடாதோ?
வேலை யெழுந்த திருவே! உனக்கினி
     மேலும் கடிகாரம் வேண்டுமோடி?