பக்கம் எண் :

74கவிமணியின் கவிதைகள்

Untitled Document
65. ரக்ஷகர்
458 அன்னியர் ஆட்சிலே - யூதர்
     அடைந்த துன்பமெல்லாம்
பன்ன எளிதோ? அம்மா! - நினைக்கில்
     பதைக்குது உள்ளம்அம்மா!

459 நீசர் சண்டாளர் - சற்றும்
     நெஞ்சினில் அச்சமில்லார்
ஈசனுக்குரிய - பீடத்தில்
     ஏறி யிருந்துகொண்டார்.

460 உண்ண உணவுமின்றி - உழைப்புக்கு
     ஓய்வொரு நாளுமின்றிக்
கண்ணீர் சொரிந்து நின்றார் - யூதர்
     கலங்கித் தட்டழிந்தார்.

461 அல்லும் பகலுமே - துயரில்
     ஆழ்ந்து மூழ்கிடினும்,
நல்ல காலம்வரும் - வருமென
     நம்பி நாள்கழித்தார்.

462 "இருள் ஒதுங்கிடவே - கதிரோன்
     எழுந்து கிள்ாவதுபோல்,
அருள் இறைமகனும் - நம்மை
     ஆள வந்திடுவான்.

463 உண்மை ஒளிவீசும்; - அப்போது
     உலகில் நீதியோங்கும்;
அண்மையி லேநாமும் - நன்மை
     அடைவோம்" என்றிருந்தார்.

464 "அருங்கு ணச்செல்வன் - புவியில்
     அவத ரித்திடுநாள்
நெருங்கி வந்ததிதோ! - மிகவும்
     நெருங்கி வந்ததிதோ!

465 வருவீர் வருவீரே - எவரும்
     வருவீர்" என்றுநலம்
மருவு காலிலிமா - நகரிலோர்
     வார்த்தை கேட்டதம்மா!