நிகழ்வுகளிலும் உள்ள எதிர்வுகள், மறுபொருள்கள், ஆகியவை நகைபட
நயம்பட உரைப்பது அவர் பாணி. இதற்குக் ‘குக்கூ’களில் ஏகப்பட்ட
இடம் வாய்த்திருக்கிறது.
இலக்கியக் கூட்டத்தில் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் ‘காது
கேட்காத மாது’ பற்றி, ‘குவியல் குவியலாய் அழுகல் மாம்பழம் விற்கும்
கிழம்’ பற்றி, ‘தெருக் கல்லை எடுத்தாலே ‘ஐயோ சாமி’ என்று
விண்ணப்பிக்கும் ஆசாமி பற்றி, நகரப் பேருந்தில் கறிவேப்பிலை மணம்
பரப்பும் ‘கறிகாய் கண்ணம்மா’ பற்றி, தாத்தா காந்திதான் சுதந்திரம்
வாங்கித் தந்தார் என்று ‘தள்ளாடும் குடி மகன்’ பற்றி, பிணமாய் நடித்த
படத்தை இல்லத்தில் மாட்டி வைத்த நடிகர் பற்றி, மாலை கட்டி வாழும்
மயில்சாமி ஒரு நாள் மாலை சூட்டும் மயில்சாமியாக வருவது பற்றி
எழுதப் பெற்றுள்ள சித்திரங்கள் எல்லாம் கவிதைகளாகி விட்ட சின்னஞ்
சிறு கதைகள் எனலாம். ஒவ்வொன்றிலும் தெரிகிறது நம் காலத்து
மனிதர்களின் வாழ்க்கை. நாம் வாழ்க்கை வண்ணம் பெற்றுவிட்ட
இக்கவிதைகளை ‘ஹைகூ’ என்பதைவிட ‘குக்கூ’ என்றுதானே கூற
வேண்டும் !
நம் வாழ்க்கைத் தடங்கள் எல்லாமே மீராவின் குயில்கள்
இளைப்பாறும் இடங்களாகி விடுகின்றன. கவிஞரின் நகையும் பகையும்
துலங்கும் பல தடங்கள் இதில் அடக்கம்.