வெஞ்சின வசைகள் கோத்து விட்டன பாணம் எல்லாம் பஞ்சினிற் பட்ட வேல்போல் பயனற, ராஜா ஜீயோ கொஞ்சமும் கோப தாபக் குறியிலாக் குணக்குன் றானான். 2 பொதுநலம் ஒன்றே யன்றிப் புகழ்ச்சியில் மயங்க மாட்டான்; எதுநலம் என்ற பேச்சில் எதிர்ப்புகள் எதற்கும் அஞ்சான்; மதிநலத் தெளிவு கொண்ட மாபெரும் கர்ம யோகி துதிபெறத் தமிழர் மேன்மை துலக்கினோன் ராஜா ஜீயே. 3 வேங்கைகள் சூழ்ந்த மான்போல் விடுபட வழியில் லாமல் தீங்குகள் சுற்றி நின்று திடுக்கிடச் செய்த போதும் ஆங்குமான் கல்லோ! என்ன அசைவிலா உறுதி காட்டும் பாங்குளான் ராஜா ஜீயே; பகைவரே பணியும் பண்பன். 4 தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்று ஜாதியால் குறித்தல் பாபம் மாந்தருள் தீண்டல் என்றல் மடைமையுள் மடமை என்று காந்தியை நாமெல் லாரும் காண்பதன் வெகுநாள் முன்பே சாந்தமாய் வாழ்க்கை தன்னில் சாதித்தோன் ராஜா ஜீயே. 5 |