V. சொல்லின் பெருமை 136. மகனுக்கு என்மகனே! உன்வாழ்வு சிறக்க வேண்டின் எப்போதும் தெய்வபக்தி இருக்க வேண்டும். நன்மகன்என் றுனையாரும் புகழச் செய்யும். நானும்உன் நற்றாயும் மகிழச் செய்யும். 1 தெய்வபக்தி தீமைசெய்ய இடந்த ராது தீங்குவர நேர்ந்தாலும் இடிந்திடாது. தெய்வநினைப் பில்லாத நெஞ்சி னோரே தீங்கிழைக்க ஒருசிறிதும் அஞ்சி டாதார். 2 பலநாமம் அத்தெய்வம் அணிந்திட்டாலும் பார்க்கின்ற கோயிலெல்லாம் பணிந்திட்டாலும் குலதெய்வம் நமக்குண்டு குறிப்பாய் ஒன்று கொள்கையுடன் பூசித்தல் சிறப்பாம்என்றும். 3 குடும்பத்தில் நற்பெயரைக் காக்க வேண்டும் கூடுமெனில் சிறப்பின்னும் சேர்க்க வேண்டும் இடும்பைக்கே ஆளாக நேர்ந்திட் டாலும் இழிவான செயல்எதிலும் சேர்ந்தி டாதே. 4 உழைப்புக்கிங் கொருபோதும் அஞ்ச வேண்டாம் ஊனுடைக்கே எவரையும்நீ கெஞ்ச வேண்டாம் பிழைப்புக்கா எத்தொழிலும் இழிந்த தன்றாம் பின்தொடரும் பழிபாவம் ஒழிந்த தென்றால். 5 மூத்தவர்கள் யார்வரினும் பணிவு காட்டி முறையோடு பேசுவதில் தணிவு கூட்டி ஆர்த்தழைத்தே ஆசனம்தந் தமரச் செய்வாய் அதுவாகும் நற்குடியின் குமரன் செய்கை. 6 நகைமுகம் இனிய சொலும் நல்ல செல்வம் நஞ்சமன்ன வஞ்சரையும் நயந்து வெல்லும் பகைஎவரும் ஆகாமல் பார்த்துக் கொள்க பகைநேரில் சமரசமாய்த் தீர்த்துக் கொள்க. 7 |