பக்கம் எண் :

216நாமக்கல் கவிஞர் பாடல்கள்

VI. திருநாட் சிறப்பு
157.புத்தாண்டு தமிழ்த் தெய்வம்

சித்திரைமாதத்தில் புத்தாண்டு தமிழ்த்
       தெய்வம் திகழும் திருநாட்டில்,
இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின்
       ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.       1

கொல்லாநோன்புடன் பொய்யா விரதம்
       கொண்ட தமிழ்க்குணம் குன்றாமல்
எல்லா மக்களும் இன்புறக் கோரிடும்
       எண்ணம் வளர்த்திடப் பண்ணிடுவோம்.       2

வீரப்படைகளின் தோள்வலியும் முன்னே
       வெற்றிகள் கண்டிட்ட வாள்வலியும்
போரில் பயன்பட மாட்டா என்கிற
       புத்தியை எங்கும் புகட்டிடுவோம்.       3

கோபத்தைமூட்டிடும் பேச்சுகளும் வெறும்
       குற்றங்கள் சாட்டிடும் ஏச்சுகளும்
தாபத்தை நீடிக்கச் செய்யுமல் லால்வேறு
       தந்திடும் நன்மைகள் ஒன்றுமில்லை.       4

வள்ளல்மகாத்மா காந்தியின் வாழ்வே
       வள்ளுவன் தந்த திருக்குறளாம்.
தெள்ளிய உண்மையைத் தேர்ந்து நடத்திடத்
       தெய்வத் திருவருள் நாடிடுவோம்.       5

உலகத்தில்போர்ப்பயம் நீங்கிடவும் மக்கள்
       உள்ளத்தில் அன்பறம் ஓங்கிடவும்
சுலபத்தில் கண்டு சுகம்பெறக் காந்தியைச்
       சுபதினத்தில் வாழ்த்தித் தொழுதிடுவோம்.       6