பக்கம் எண் :

274நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நல்லவர் கெட்டவ ரென்பதன்றி மற்றும்
       நாலு வருணமு மொன்றடியே
தொல்லைச் சுருதியின் சொல்லடி யேஇதைத்
       தோகையே நீயும் மறக்காதே.       73

பறையரு மெங்கள் குலத்தர டிசுத்தப்
       பார்ப்பன ருமெங்கள் பந்துவடி!
அரையனு மெங்களுக் கானவ னேயன்றி
       அல்லவ னும்வெகு நல்லவனே.       74

அன்னிய ரானாலும் இந்திய நாட்டை
       அடைந்தவர் எங்களுக் கண்ணாடி!
மன்னவ ரானாலும் இந்திய நாட்டை
       மறந்தவர் தங்களை நாமறப்போம்.       75

எந்தக் குலத்தில் பிறந்தா லும்அவர்
       எந்த நிலையி லிருந்தாலும்
இந்து நிலத்தில் பிறந்தவ ரெல்லோரும்
       இந்தியத் தேவியின் மக்களடி!       76

முப்பத்து முக்கோடி மக்களடி நாங்கள்
       முப்பத்து முக்கோடி சோதரர்கள்.
முப்பத்து முக்கோடி பேரு மொருமிக்க
       முப்பொழு தும்அவள் பூஜை செய்வோம்.       77

பூஜையென் றால்வெறும் பூஜையல்ல செல்வப்
       புண்ணிய பூமியின் பிள்ளைகளே
ஆசையு டனவள் கைத்தொழில் வித்தையை
       ஆதரஞ் செய்யுங் கடமையடி.       78

எண்ணிக்கை யற்ற தொழிலடி யேஇந்தப்
       புண்ணிய பூமியும் கண்டதடி!
எண்ணிக்கை யற்றவர் இந்தியர் தொழிலை
       அந்நிய தேசங்கள் ஆளுதடி.       79