VIII. சமுதாயப் பாடல்கள் 184. புதியசமுதாயம் பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்; பணம்என்ற மோகத்தின் விசைதீர வேண்டும்; கூட்டாளி வர்க்கங்கள் குணமாற வேண்டும்; குற்றேவல் தொழில்என்ற மனம்மாற வேண்டும்; வீட்டோடு தான்மட்டும் சுகமாக உண்டும் வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும் நாட்டோடு சேராத தனிபோக உரிமை நடவாதுஇங்(கு) இனியென்று நாம்அறிதல் பெருமை. 1 உடலத்தின்வடிவத்தில் பேதங்கள் உண்டு; உள்ளத்தின் எண்ணத்தில் வித்தியாசம்உண்டு; சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம் சகலர்க்கும் உலகத்தில் சமமானது அன்றோ! கடல்ஒத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும் கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும் மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால் மனிதர்க்குஇங்(கு) அறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ? 2 பசைமிக்கதொழில்செய்து பலன்முற்றும் யாரோ பரிவற்ற முதலாளி பறிகொண்டு போக பசிமிக்கு மிகநொந்த தொழிலாளர் எல்லாம் பகையென்று நமையெண்ணிப் பழிகொள்ளு முன்னால் வசைமிக்க நிலைமாற வழியொன்று சூழ்வோம் வறுமைக்கே இடமற்ற சமுதாய வாழ்வை இசைமிக்க முறைகண்டு ஏற்பாடு செய்வோம் எல்லாரும் குறைவற்ற நலமெய்தி உய்வோம். 3 குறிப்புரை:-சகலர்க்கும் - எல்லார்க்கும்; வசை - குற்றம், பழிப்பு, இகழ்ச்சிச் சொல். |