பக்கம் எண் :

336நாமக்கல் கவிஞர் பாடல்கள்

IX. தேசியப் பாடல்கள்

210. கத்தியின்றி ரத்தமின்றி

கத்தி யின்றி ரத்த மின்றி
       யுத்தம் ஒன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
       நம்பும் யாரும் சேருவீர்!       (கத்தி)1

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்(கு)
       உயிர்ப்ப றித்தல் இன்றியே
மண்ட லத்தில் கண்டி லாத
       சண்டை யொன்று புதுமையே!       (கத்தி)2

குதிரை இல்லை யானை இல்லை
       கொல்லும் ஆசை இல்லையே
எதிரியென்று யாரும் இல்லை
       எற்றும் ஆசை இல்லதாய்.       (கத்தி)3

கோபம் இல்லை தாபம் இல்லை
       சாபங் கூறல் இல்லையே
பாப மான செய்கை யொன்றும்
       பண்ணும் ஆசை இன்றியே       (கத்தி)4

கண்டது இல்லை கேட்டது இல்லை
       சண்டை இந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
       பலித்த தேநாம் பார்த்திட!       (கத்தி)5

காந்தி என்ற சாந்த மூர்த்தி
       தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற
       வாய்ந்த தெய்வ மார்க்கமே.       (கத்தி)6

குறிப்புரை;- இந்தப் பாடல்தான் நாமக்கல்கவிஞரைத் தமிழ்
மக்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தது.இதனுடன் இணைந்து
இருக்கும் வரலாறு எல்லோருக்கும் நன்கு தெரிந்த செய்தியாகும்.
எதிரி - பகைவர்; மார்க்கம் - வழி.