பக்கம் எண் :

இசைத்திறம் உணர எழுந்த காதைபக்கம் : 111

 

 

சிந்தித் துணர்வார் சிலரினும் சிலரார் 75
  வந்தித் தவ்வுரை வாயென ஏற்பார்;
நேரிய நம்சொலைச் சீரிய தன்றெனக்
கூறிப் பல்வகைக் குறைகளும் புணர்த்துவர்;
 
     
 

தமிழிசை தழைக்கும்

 
     
  ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும்  
  ஏதிலர் தமக்கே இரையா காமல், 80
  தாய்மொழி மானம் தமதென நினையும்
ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும்
உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும்
செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்
 
  புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்; 85
  தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;  
     
 

கூத்தும் பரவுக

 
     
  கூத்தும் அவ்வணம் கூர்மதி யாளர்
காத்துப் போற்றின் கைம்மேற் பலனாம்
உயர்தமிழ் மூன்றனுள் ஒன்றென நினையார்
 
  மயலறி வுடையார் மறந்தனர் வெறுத்தனர்; 90
  கல்லா மாந்தர் கையகப் பட்டது;
நில்லா தொழிந்தது நீள்புகழ் பட்டது;
கற்றோர் பலரும் முற்றுகை யிடின்அது
நற்றமிழ் மரபாய் நாட்டினிற் பரவும்;
 
     
 

அடிகளார் விழைவு

 
     
  ஆதலின் அருண்மொழி! அரும்பெறற் பூங்கொடி 95
  ஓதல் வேண்டும் உயர்தமிழ் இசையை;
தெருவெலாம் ஊரெலாம் சென்று நாடெலாம்
உருகும் இசைத்தமிழ் ஒலித்து முழக்கி
வெல்லுதல் ஒன்றே விழைந்தனென்; அதன்றலை
 

---------------------------------------------------------------

  வந்தித்து - வணங்கி, வாயென - உண்மையென, புணர்த்துவர் - சேர்ப்பர், ஏதிலர் - பகைவர், செயிர் - குற்றம்.