| 
			
			| | 
 |  |               |                   |  | கதைச் சுருக்கம் |  |            |  | தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவர் உள்ளத்தையும்           மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப்புற்றோங்கின.           ஆனால், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார்           பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன் மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி           வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளின் குறளகத்திற் சேர்ந்த அவள்,           இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன்தோழி தேன்மொழியிடம்           தன் கணவன் வடிவேல் படுகொலையுண்டதைக் கூறக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கொடி தேம்பியழுதனள்.           அருண்மொழி, அவ்வழுகையை மாற்ற அவளைப் பூங்காவிற்கு அனுப்பினள். தோழி அல்லியும்           உடன் சென்றாள். |  |            |  | பூங்காக் காட்சிகளை இருவரும் கண்டுகளிக்கும் பொழுது பூங்கொடிமேற் காதல்கொண்ட           கோமகன் அங்கு வருவதறிந்து, அஞ்சிய பூங்கொடி, ஆங்கிருந்த படிப்பகத்தினுட் புகுந்தாள்.           வெளியில் நின்ற அல்லியிடம், தன் உளக்குறிப்பை அவன் புலப்படுத்த, அவள் மறுத்துரைத்துப்           பூங்கொடியின் துறவுள்ளத்தை எடுத்துரைத்தாள். கோமகன் ஆசைதணியானாகி யகல, தாமரைக்கண்ணி           அங்கே வந்தனள். அவள் இவ்விருவரின் நிலையறிந்து, முன்வந்த வழியே செல்லாது முத்தக்கூத்தன்           கல்லறைவழியே செல்லுமாறு பணித்து அவன் வரலாறும் கூறிப் பூங்கொடியைக் கடல் நகர்க்கு           வருமாறு மொழிந் தகன்றனள். |  |            |  | பூங்கொடியின் நினைவொடு போகிய கோமகனிடத்துத் தாமரைக்கண்ணி சென்று, இடித்துரை           கூறி மீண்டனள். தாமரைக்கண்ணி கூறியவாறு, பூங்கொடி கடல் நகர்க்குச் சென்று,           சொன் மழை பொழிந்து, கயவர்வீசிய கல்லடிபட்டும் அஞ்சாதிருந்தனள். இடைவிடாப்           பணியாள் திருந்திய மாந்தர்தம் வேண்டுகோட் கிணங்கிப் பூங்கொடி அங்கே தங்க, தாமரைக்கண்ணி           மட்டும் மீண்டனள். |  |  |  | 
 |  |