| | 7. கடல்நகர் புக்க காதை | |
| | கோமகன் துயிலாமை | |
| | மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும் பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மறாஅது தன்னை மணங்கொள வழிவகை | |
| | உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ? | 5 |
| | | |
| | கதிரவன் எழுச்சி | |
| | | |
| | இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம் | |
| | புதுநிறை வெய்தப் பூரித் தெழுந்தனர்; கோமகன் ஒருவனோ கொடுந்துயர்ப் படுத்தும் காமங் கதுவக் காலையின் எழுச்சி அறியா னாகி அயர்ந்து கிடந்துழித் | 10 |
| | | |
| | கோமகனுக்கு அறிவுரை | |
| | | |
| | தாமரைக் கண்ணி தனிமையில் அணுகி | |
| | `நின்போற் செல்வர் நெறிதடு மாறி வன்பாய்ப் புகுதல் வரன்முறை யாமோ? மொழிவளம் பெறவும் மூடச் செயலால் இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும் தொண்டுகள் ஆற்றும் தூயவள், இல்லறம் | 15 |
| | பெண்டுகட் குரித்தெனப் பேசினும் பூங்கொடி | 20 |
| --------------------------------------------------------------- |
| | அந்தீம்கிளவி - அழகிய இனியசொல், பெறாஅது - பெறாமல், பெயர்ந்தோன் - சென்றவன், மறாஅது - மறுக்காமல், உன்னி - நினைத்து, கண்படை - உறக்கம், கால்சீய்த்து - அழித்து, தெருள் - தெளிவு, கதுவ - பற்ற, வன்பாய் - வன்முறையாகி. | |
| | | |