கண்ணகிபோல் துனணபிரிந்த பாவை நெஞ்சம் கனக்கிறது; கசக்கிறது வாடி! கெண்டைக் கண்ணழகி மாதவியைப் போன்றாள் நெஞ்சம் கணவன்பால் உறவாடித் தழுவிக் காதற் பண்ணிசைத்துக் களிக்கிறது; தாய்மைப் பாடம் படிக்கிறது! குன்றிமணிக் குரிய தான வண்ணத்தைப் போலிரண்டு சக்தி அந்தி வரவினிலே பிறக்கிறது! வாழ்க அந்தி! வெயில் நின்ற காரணத்தால் வீடு தோறும் விளக்கேற்றப் படுகிறது! பொதிகை யின்கண் துயில்கின்ற பசுந்தென்றல் தோட்டந் தோறும் தூதுரைக்க விரைகிறது! பள்ளி யின்கண் பயில்கின்ற இளம்பருவச் சமுதா யம்கால் பந்தாட்டம் முடிக்கிறது! கர்வ மிக்க மயிலொன்று தோகைவிரித் தாடி யாடி மதுவின்பம் கொடுக்கிறது மலையோ ரத்தே! விழுதுவிட்டுக் குடைபோன்று விளங்கும் ஆலின் விதைசிறிது; நிழல்பெரிதே; அதுபோல் அந்தி பொழுதுகளில் சிறிதெனினும் அதுவ ளர்க்கும் புகழ்பெரிதே! எழிலாக்கம் பெரிதே! நீதி வழுதிகுலச் செங்கோலின் குளிர்ச்சி போன்ற வளமான அந்தியர சாட்சி பற்றி எழுதுதற்கும் இயலவில்லை; ஏதோ கொஞ்சம் எழுதாமல் இருப்பதற்கும் இயல வில்லை! மா.கி.தசரதனின் ‘அறுவடை’ இதழில் வெளிவந்தது
|