பக்கம் எண் :

மீரா கவிதைகள்.51

அந்தியில் கிடைக்கும் ஆனந்த விருந்தே!
இருட்டுப் பிணியை விரட்டும் மருந்தே!
எப்படி எப்படி யெல்லாம் உன்னைப்
புகழ்கின் றார்கள் பூமியில் தெரியுமா?

இந்தியா வென்றோ இங்கிலாந் தென்றோ
வேற்றுமை பாரா தெங்கும் வெளிச்சம்
இறைத்து வையகம் இணைப்பதால், நீஓர்
பொதுமை விரும்பியாம்! புதுமை விரும்பியாம்!
தொடமுடி யாத தும்பைப்பூத் திரளாம்!
பணவெறி படைத்தோன் பைக்குள் வராத
வெள்ளிக் காசாம்! விண்மீன் மாணவர்
பள்ளிக் கூடப் பாடம் படிக்க
ஏற்றிவைத் திருக்கும் இரவுத் தீபமாம்!
மண்மங் கைதன் மருத முகத்தின்
அழகைப் பார்க்கும்கண் ணாடியாம்! குழந்தை
அன்னை யிடத்தில் அடம்பிடித் தழுதே
வீசி யெறிந்த வெள்ளை அப்பமாம் -
விதவிதப் புனைந்துரை! விதவிதப் புகழுரை!
காலம் தோறும் கவிஞர் பரம்பரை
பாடி வழங்கும் பாராட்டுப் பத்திரம்
கொஞ்சமா உனக்குக் கூறு, நிலவே?

தடைகூ றாமல் தருவாய் என்றுதான்
எதிர்பார்த் துன்னிடம் இதனைக் கேட்கிறேன்
ஆகாயக் குளத்தில்நீ ராடும் அன்னமே!
மாலைசூ டாத மங்கையே! எனக்கொரு
முத்தம் கொடு... ஒரு முத்தம்... ஏ!ஏ!