பக்கம் எண் :

60.மீரா கவிதைகள்

பிள்ளைத் தமிழ்

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஈரைந்து மாதங்கள் என்வயிற்றுக் குள்ளொளிர்ந்த
ஈர நிலவே! எழிலமுதே! வாழ்விக்கும்
பொன்னிக் குளிர்நீரே! பொற்சுடரே! நெஞ்சத்தில்
மின்னித் திரிகின்ற மின்மினியே! கண்மணியே!
சங்க இலக்கியத்தின் சத்தெல்லாம் சேர்ந்திருக்கும்
அங்கம் படைத்திருக்கும் ஆணழகே! நாட்டின்
உடைமை பொதுவாக்க உண்மை வளர்க்க
மடமையைச் சாதி மதவெறியை மாய்த்தொழிக்க
வந்த அடலேறே! வள்ளல் வழிவழியே!
எந்தைக்குப் ‘பாட்டன்’ எனும்பெருமை தந்தவனே!
‘அப்பா’ என நாளும் அண்ணாந்து வாய்திறந்து
தப்பா தளிக்கும் தனிப்பட்டத் தின்முன்
கலைஞர் உயர்கவிஞர் கேட்டார்ப் பிணிக்கும்
வலைஞரெனத் தேடிவரும் பட்டம் வெறும்பட்டம்
என்றுனது தந்தைக்(கு) எடுத்தியம்ப வந்தவனே!
இன்று நீ ஏனழுதாய்? என்னுயிரே ஏனழுதாய்?