ஸ்ரீராமன் சீதைகதை கேட்போ ரெல்லாம் ஸ்ரீதேவி வாசமுறத் திகழ்ந்து வாழ்வார் ஆராமன் பெயரைஅவ மதிப்போர் தம்மை ‘அக்காளே‘ எக்காலும் ஆட்சி கொள்வன். 1 இமயமுதல் தென்கோடி இலங்கை ஈறாய் இருந்தவர்கள் எல்லாரும் என்றும் கேட்டுச் சமயமொழி வேற்றுமையின் நடைகள் தாண்டிச் சமரசமாய் ஒருகுலமாய்ச் சல்லா பித்த அமுதமெனும் ராமகாதை அறிவைப் போற்றி அந்நியரும் தலைவணங்கி ஆதரித்தார் நமதுமனம் அதைமறந்த நடத்தை யாலோ நாம் இன்று நலங்குன்றி நலிந்து போனோம். 2 வீடுதொறும் சீதைஒளி விளங்க வேண்டும் விதிதொறும் ராமகதை முழங்க வேண்டும் நாடுமுற்றும் அனுமன்வழி நாட வேண்டும் நற்றவசி பரதனையே பாட வேண்டும் கேடுதரும் காமமெனும் உண்மை கேட்டுக் கேண்மைமிகும் ஆண்மையெனும் கிளர்ச்சி கொண்டால் பாடுபெறும் காந்திமகான் பரிந்து சொன்ன பதவிவரும் பார்அதுதான் ராம ராஜ்யம். 3 151. மக்களின் அணிகலம் அறிவே மக்களின் அணிகலமாம் அன்பே அதில் ஒளிர் மணியெனலாம் குறிவே றெதையும் கொள்ளாதே குணமிகும் இவ்வுரை தள்ளாதே. 1 உண்மையை நாடுதல் அறிவாகும் உயிர்களுக் கன்பே நெறியாகும். புண்ணியம் என்கிற பணிகளையே பூண்பது வேநல் அணிகலமாம். 2 |