பக்கம் எண் :

104சமுதாய வீதி

டிருப்பதைத் தவிர வேறே எதையும் செய்ய முடியாதென்றோ,
குளித்துக்கொண்டிருப்பதே ஒரு ‘யுனிவர்ஸல் பெண்மை இலட்சியம்’ என்றோ
காலண்டர்காரர்கள் கருதியது மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது
முத்துக்குமரனுக்கு, சுவரையும், படங்களையும் பார்ப்பதில் அலுத்தவனாக
அங்கே கிடந்த பளபளப்பான அட்டையுள்ள தமிழ் வாரப் பத்திரகை ஒன்றை
எடுத்துப் புரட்டலானான் அவன். அதிலும் அட்டையிலிருந்து உள்ளே தொடர்
கதைகள், சிறுகதைகள் வரை எல்லாவற்றிலும் பெண்கள் இன்னும் குளித்துக்
கொண்டுதான் இருந்தார்கள். நல்ல வேளையாக மேலும் அவனுடைய
பொறுமையைச் சோதிக்காமல் உள்ளே முடிவெட்டிக்கொள்ள வருமுாறு
ஸலூனின் வரவேற்பு ஆள் வந்து கூப்பிட்டு விடவே அவன் உள்ளே போய்
உட்கார்ந்தான். முன்னாலும், பின்னாலும் பக்க வாட்டிலுமாக அவனுடைய
முகங்கள் பத்திருபது கண்ணாடிகளில் தெரியலாயின. திடீரென்று கர்வப்படலாம்
போல அத்தனை சுகமாயிருந்தது அவனுக்கு. இரண்டு கண்ணாடிகளுக்கு
இடையே ஓர் இடைவெளியில் பெரிதாக பிரேம் செய்யப்பட்டுக் கோபாலின்
படமும் அந்த ஸலூனில் மாட்டப்பட்டிருந்தது. ஆள் தலையில்
கத்தரிக்கோலால் முடிவெட்டிக் கொண்டிருக்கும் சுகத்தில் தூக்கம் சொக்கும்
கண்களால் கோபாலின் அந்தப் படத்தை பார்த்தான் முத்துக்குமரன். படத்தைப்
பார்த்ததை ஒட்டிக் கோபாலைப் பற்றிய ஒரு சிந்தனையும் அவன் மனத்தில்
ஓடியது.

     ‘கோபால் சாரை எனக்கு ரொம்ப நாளாய்ப் பழக்கம், பேருக்குத்தான்
அவரு என்னை இண்டர்வ்யூவுக்கு வரச் சொல்லிப் புதிதாக அப்போதுதான்
சந்திப்பவர் போல் கேள்விகளைக் கேட்டார்! சும்மா அது ஒரு கண் துடைப்பு’
- என்று மாதவி தன்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டதும், கோபால்
இதுவரை அப்படி ஒப்புக்கொள்ளாமல் மறைப்பதையும் இணைத்து
நினைக்கலானான்