| தடவை கோபால் சாரோட கல்கத்தாவுக்குப் போயிருக்கிறப்ப ‘பசி’ன்னு ஒரு வங்காளி நாடகம் பார்த்தோம். ரொம்ப நல்லா இருந்தது! ‘டயலாக்’ ரொம்பக் கொஞ்சம், ‘‘ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ்’தான் அதிகம். நாடகம் கச்சிதமா பட்டுக் கத்தரிச்ச மாதிரி இருந்திச்சு...’’ ‘‘கோபால் சாரோட எதற்காகக் கல்கத்தா போயிருந்தாய் நீ’’ - என்று கேட்க நினைத்து வாய் நுனி வரை வந்துவிட்ட அந்தக் கேள்வியை அப்போது நாசூக்காக அடக்கிக் கொண்டு விட்டான் முத்துக்குமரன். சிறிது நேரம் இருவருக்குமிடையே உரையாடல் தொடராமல் மௌனம் நிலவியது. தான் கோபாலுடன் கல்கத்தா போயிருந்ததை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்து அடங்கினாற்போல் தலைகுனிந்து சில விநாடிகள் மௌனமாயிருந்தாள் அவள். கை தவறி வாசித்துவிட்ட அபஸ்வரத்திற்காக உள்ளூற வருந்தும் நல்ல வாத்தியத்தின் சொந்தக்காரனைப் போன்ற நிலையில் அப்போது இருந்தாள் அவள். அபஸ்வரத்தைக் கேட்டுவிட்டு உட்கார்ந்திருந்தவனுக்கோ இன்னும் சிரமமாக இருந்தது. மௌனத்தை நீடிக்க விரும்பாமல் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள். ‘‘நாளைக்கு எங்க ரெண்டு பேரோட ரிஹர்ஸலும் காலையிலே வழக்கம் போலத்தானே? நாள் ரொம்பக் குறைச்சலா இருக்கே?’’- ‘‘எதுக்கு நாள் குறைச்சலா இருக்கு?’’- ‘‘நாடக அரங்கேற்றத்துக்குத்தான், மந்திரி ‘‘டேட்’’ கொடுத்திருக்காரே?’’ ‘‘நாடகம் அரங்கேறப் போகுதுங்கறதைவிட மந்திரி தேதி கொடுத்திருக்காருங்கறது தானே எல்லாருக்கும் ஞாபகமிருக்கு...’’ |