பக்கம் எண் :

136சமுதாய வீதி

பாக்கியசாலிகள்’’ - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே
முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால்
கீழே முன் வரிசையில் நேர்எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு
அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை
முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும்
மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த
கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால்
வம்பில்லாமல் முடிந்திருக்கும். ‘‘நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே’’
- என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால்.
முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான்.
அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. ‘‘இப்போது இந்த
மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை
வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை
அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத்
தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான்
விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு
மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரண மானவர்கள் கூட ஒரு
விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே
என்பதை நினைக்கும்போது வருத்தம்.’’-

     பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப்
போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும்
கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப்
போய்க் கொண்டிருந்தான்.