பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி151

கூறிய அந்த வாக்கியம் அவனை முற்றிலும் நெகிழச் செய்துவிட்டது.

     ‘எங்கூட நீங்க வராம வேறே யார் வருவாங்க?’ - இந்த வாக்கியத்தில்
இழைந்து ஒலித்த ஏக்கமும், தாபமும் அவன் உள்ளத்தை உருக்கின. அவள்
தன்னோடு என்றும் துணையாகக் கூடவருவதற்கு அவனைத் தவிர
வேறெவருமே இல்லையென்று நம்பிக்கையோடு நினைப்பதை அந்தக் குரலில்
தெரிந்து கொள்ள முடிந்தது. அவளிடம் அவ்வளவு உரிமையோடு
கோபப்படுவதற்கும் தாபப்படுவதற்கும் தான் யார் என்றும் எவ்வளவு
காலமாகத் தான் அவளோடு பழகுகிறவன் என்றும் நினைத்துப் பார்த்த போது
அது அவனுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவளுடைய உரிமைகளைக்
கட்டுப்படுத்தவும், தளர்த்தவும் செய்கிற அளவிற்குத் தான் அவள்மேல்
அத்தனை பிடிப்பையும், பற்றையும் எப்போது கொண்டோம், எப்படிக்
கொண்டோம் என்றெல்லாம் எண்ணியபோது, அந்த மாறுதல் அவனையே
அயரச்செய்தது. பிரியத்தையும், ஆசையையும் விடமுடியாத அளவுக்கு அவள்
தன் மனத்தில் இணைபிரியாத பொருளாகியிருப்பதை அவனே புதிதாக
அப்போதுதான் புரிந்து கொள்வதுபோல் உணரத் தலைப்பட்டான்.

     மாலையில் அப்துல்லாவை அழைத்துவரச் செல்வதற்கு முன்னால்
முத்துக்குமரனை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்தாள் அவள்.

     ‘‘நான் மலேயாவுக்கு வரலை. இப்ப படம் ஒண்ணும் எடுக்க வேண்டாம்’’
என்றான் முத்துக்குமரன்.

     ‘‘நீங்க வரலையின்னா நானும் போகப் போறதில்லே’’என்றாள் அவள்.

     அவள் சொல்லியதை அவன் சிரித்துக்கொண்டே மறுத்தான்: