| ‘‘நான் ஒண்ணும் வரலை, எனக்குத் தலைவலியாயிருக்கு...’’ ‘‘ப்ளீஸ்...ரொம்பப் பேர் பாவம் - மாலையோட காத்துக்கிட்டிருக்காங்க...’’ போவதா, வேண்டாமா என்று கேட்பதுபோல் முத்துக்குமரன் பக்கம் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். ‘‘போயிட்டுத்தான் வாயேன். வந்து மாலை போடக் காத்திருக்கிறவங்களை ஏன் ஏமாத்தணும்?’’ - என்று அவளிடம் காதருகே கூறினான் முத்துக்குமரன். அவள் வேண்டா வெறுப்பாக மீண்டும் எழுந்து சென்றாள். விமானத்தின் கண்ணாடிப் பலகணி வழியே வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். ஐந்தாறு நிமிஷங்களில் அவர்கள் ஒரு கத்தை மாலைகளோடு திரும்பி வந்தார்கள். விமானம் புறப்பட்டது. கண்மூடித் திறப்பதற்குள் ‘பினாங்கு’ வந்துவிட்ட மாதிரி இருந்தது. பினாங்கு - விமான நிலையத்திற்கும் நிறையக் கூட்டம் வந்து காத்திருந்தது. வரவேற்புக்கள் தடபுடலாயிருந்தன. மாதவியும், கோபாலும்தான் முத்துக்குமரனை யாரென்று வந்திருந்தவர்களுக்குச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்களே ஒழிய அப்துல்லா முத்துக்குமரனைப் பொருட்படுத்தவே இல்லை. முத்துக்குமரனும் அப்துல்லாவைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் - தங்களை அந்த நாட்டிற்கு வரவேற்றிருக்கும் ‘ஹோஸ்ட்’ ஆகிய அவர் அப்படித் தன்னிடம் மட்டும் பாராமுகமாக இருந்தது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. விமான நிலையத்திலிருந்து பினாங்கு ஊருக்குள் போகும் போது நன்றாக இருட்டிவிட்டது. அன்றிரவு பினாங்கு ஹில்லில் உள்ள தம்முடைய பங்களாவில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார் |