பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி23

     ‘‘யாரு! முத்துக்குமாரு வாத்தியாரா? என்ன இப்படிச் சொல்லாமக்
கொள்ளாமத் திடீர்னு வந்து...ஆச்சரியத்திலே மூழ்க அடிக்கிறீங்களே?’’

     - முத்துக்குமரன் முகம் மலர்ந்தான். கோபால் அந்நியமாக நடந்து
கொள்ளவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

     ‘‘சௌக்கியமா இருக்கியா கோபாலு? ஆளே மாறிப் பருத்துப்
போயிட்டே...? இப்ப உனக்கு...ஸ்திரீ பார்ட் போட்டா அது உலகத்துல
இருக்கிற ஸ்திரீ வர்க்கத்தையே அவமானப்படுத்தறாப்பிலே இருக்கும்...’’

     ‘‘வந்ததும் வராததுமாகக் கிண்டலை ஆரம்பிச்சுட்டியா வாத்தியாரே?‘‘

     ‘‘ஓகோ! கிண்டல் கூடாதோ? ‘நடிக மன்னர் கோபால் அவர்களே’ -
என்று மரியாதையாகக் கூப்பிடட்டுமா?’’

     ‘‘மரியாதையும் வாண்டாம் மண்ணாங்கட்டியும் வாண்டாம். இப்ப என்ன
சொல்றே? இவங்களை எல்லாம் இண்டர்வியூக்கு வரச் சொன்னேன். பார்த்துப்
பேசி அனுப்பிடட்டுமா? இல்லை...நாளைக்கு வரச்சொல்லட்டுமா? நீ சொல்றபடி
செய்யறேன் வாத்தியாரே...’’

     ‘‘சே! சே! ரொம்ப நேரமாகக் காத்திருக்காங்க... பார்த்து அனுப்பிட்டு வா
போதும்...எனக்கொண்ணும் இப்ப அவசரமில்லே...’’ என்றான் முத்துக்குமரன்.

     ‘‘அது சரி! நீ எப்ப வந்தே? எங்கே தங்கியிருக்கே?’’

     ‘‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்லே அவங்களை எல்லாம்
பார்த்துப் பேசி அனுப்பு...’’

     முத்துக்குமரனின் கருணைக்கு நன்றி செலுத்துவது போல் பல ஜோடிக்
கயல் விழிகள் அவன் பக்கமாகத் திரும்பி அவனை விழுங்கிடாத குறையாகப்
பார்த்தன. அத்தனை யுவதிகளை ஒரே சமயத்தில் கவர்ந்ததற்காகவும் சேர்த்து
அவன் நெஞ்சு கர்வப்படத் தொடங்கியது.