பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி261

சந்திக்கும் போதெல்லாம் அவருடைய தலை இப்படித்தான் தொங்கிப்
போயிருக்கிறது.

     அன்று மாலை கோபால் முத்துக்குமரனைக் கூப்பிட்டனுப்பினான்.
முத்துக்குமரன் மவுண்ட்பேட்டன் ரோடுக்குப் போய் அவனைச் சந்தித்தான்.
‘‘உட்கார்’’ என்று தன் அருகே படுக்கையை ஒட்டிப் போடப்பட்டிருந்த
நாற்காலியைச் சுட்டிக்காட்டினான் கோபால். முத்துக்குமரன் உட்கார்ந்தான்.

     ‘‘நீ அப்துல்லா கொடுத்த மோதிரத்தை வேண்டாம்னு திருப்பிக்
கொடுத்தியா?’’

     ‘‘ஆமா, ஒருவாட்டி மட்டுமில்லே, ரெண்டுவாட்டி கொடுத்தாரு.
ரெண்டுவாட்டியும் திருப்பிக் கொடுத்திட்டேன்.’’

     ‘‘ஏன் அப்படிச் செய்தே?’’

     ‘‘அவருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. நான் உன்கூட இங்கே
வந்திருக்கேன். உனக்கு முடியலைங்கிறத்துக்காகத்தான் நாடகத்திலே பதிலுக்கு
நடிக்கிறேன். அவர் யார் என்னைப் பாராட்டவும் பரிசு கொடுக்கவும்!’’

     ‘‘அப்பிடிச் சொல்லப்படாது. அன்னைக்கு அண்ணாமலை மன்றத்தில்
நாடக அரங்கேற்றத்தின்போது அவர் உனக்கு மாலை போட்டார்.
‘ஒருவருடைய மாலையை ஏற்கும்போது அவருடைய கைகளின் கீழே என்
தலை குனிய நேரிடுகிறது, அதனால் மாலைகளை நான் வெறுக்கிறேன்’ -
என்று சொல்லி அவர் மனம் சங்கடப்படும்படி செய்தே. இன்னிக்கி
வைரமோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அவரை அவமானப் படுத்தறே.
இப்பிடி நடந்துக்கிறதிலே உனக்கு என்ன பெருமை? வீணா ஒரு பெரிய
மனுசனை மனசு நோகப் பண்றதிலே என்ன லாபம் இருக்க முடியும்னு
நினைக்கறே?’’

     ‘‘ஓகோ! அப்பிடியா சங்கதி! ஒரு பெரிய மனுஷன் நம்மை
அவமானப்படுத்தினா மௌனமா இருக்கணும்.

     ச - 17