| ‘முத்துக்குமரன்’- என்ற பெயர் நாகரிகமாகவே தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் ‘அகடவிகட சக்ர சண்டப் பிரசண்ட ஆதிகேசவப்பாவலர்’ - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டுக் கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டுப் பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடிப் பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன். மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியபோது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன. அசௌகரியங்களாவன: பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதமோ சிபாரிசுக் கடிதமோ இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கலையுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினனோ, அநுதாபியோ இல்லை. சௌகரியங்களாவன : அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்தையோ பெண்ணையோ வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கவோ, மதிக்கவோ அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பது தான் காரணம். பின்புறமாக அலையலையாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வீரர்களில் |