பக்கம் எண் :

60சமுதாய வீதி

     ‘‘எனக்கும் கூடத்தான்...ஆனால்’’ இப்படி மெல்லிய குரலில் அவன்
காதருகே கிளுகிளுத்த போது அவள் குரலில் சங்கீத நயத்துக்கும்
அப்பாற்பட்டதோர் இனிமை நிலவியதை அவன் உணர்ந்தான்.

     அவனிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து விடைபெற்றுச் சென்றாள்
அவள். இரவு அவனும் தனியாக விடப்பட்டான். அவள் நின்ற இடத்து
மல்லிகைப்பூ வாசனையும் சிறிது நிலவியது. அவளை அவன் அணைத்த போது
உதிர்ந்த இரண்டொரு பூக்கள் தரையில் இருந்தன. அதைத் திரட்டி எடுத்து
மறுபடியும் அந்த வாசனையை நினைவிற் பதிக்க முயன்றான் முத்துக்குமரன்.
திறந்திருந்த ஜன்னல் வழியாக வாடைக் காற்று சில்லென்று வீசியது. அவன்
ஜன்னலை அடைத்துத் திரையை இழுத்து விட்டான்.

     டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சென்று எடுத்தான்.

     ‘‘நான்தான் மாதவி, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்...’’

     ‘‘அதைச் சொல்றதுக்கு ஒரு ஃபோனா?’’

     ‘‘ஏன்? நான் அடிக்கடி ஃபோன் பேசறது பிடிக்கலையா உங்களுக்கு?’’

     ‘‘அப்படி யார் சொன்னா? நீயா ஏன் சண்டைக்கு இழுக்கறே?’’

     ‘‘வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேனோ இல்லையோன்னு
கவலைப்பட்டுக்கிட்டிருக்கப் போறீங்களேன்னு ஃபோன் பண்ணினாச்
சண்டைக்கு இழுக்கறேங்கிறீங்க...?’’

     ‘‘எனக்கே உன்கிட்டச் சண்டை போணும்னு ஆசையாயிருக்குன்னு
வச்சுக்கயேன். ஆனா இப்படி ஃபோனிலே...இல்லை.’’

     ‘‘பின்னே எப்படி?’’