| ‘‘உங்களுக்கு என்மேல் ரொம்பக் கோபம் போலிருக்கிறது. சாப்பிடும் போதே கவனித்தேன்.’’ ‘‘கோபம் வராமல் பின் என்ன செய்யும்? நீ ரொம்பதான் கோபாலுக்குப் பயந்து சாகிறாய்!’’ ‘‘என் நிலைமையில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத் தயவு செய்து சிந்தித்து விட்டு அப்புறம் பேசுங்கள்.’’ ‘‘அவன்தான் கம்பீர ஜன்னியில் திமிர் பிடித்துப்போய் அலைகிறான். உனக்கும் ஏன் அதுக்கெல்லாம் தலையாட்டணும்னு தோணுது? சாப்பாட்டைத்தான் பரிமாறினே? எச்சிக் கிண்ணத்தைக் கூடவா ஏந்திக்கிட்டு நிக்கணும்?’’ ‘‘என் நிலைமையிலே நான் வேற என்ன செய்ய முடியும்?’’ ‘‘ஒண்ணும் செய்ய முடியாதுன்னா - எக்கேடும் கெட்டுத் தொலை - அடிமைகள்தான் பூமியிலேயே நரகத்தைப் படைக்கிறார்கள். ‘‘உண்மையைச் சொல்லப் போனால் என் மனத்தை நான் ஒரே ஒருத்தருக்குத்தான் அடிமைப்பட விட்டிருக்கேன். அந்த ஒரே ஒருத்தரும் இப்படிக் கோபிச்சுக்கிட்டா என்ன செய்யறது?’’ ‘‘நீ யாரிட்ட மனசைப் பறிகொடுத்திட்டதாகச் சொல்றியோ அந்த ஒருத்தன் உன் செயல்களாலே பெருமைப்படறாப்பலவும் கர்வப்படறாப்பலவும் இருக்கணும். அந்த ஒருத்தன் நீ செய்யற காரியங்களாலே தலைகுனியறாப்பல இருக்கப்படாது.’’ அவளிடமிருந்து இதற்குப் பதில் இல்லை. முத்துக்குமரன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளுடைய வசீகரமான விழிகளில் ஈரம் பளபளத்தது. நீர் கலங்கிக் கொண்டிருந்தது. |