பக்கம் எண் :

14
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

நகரத்தைப் பார்க்கிலும் பாபிலோன் மூன்றுபங்கு பெரிது. லண்டன்மாநகரத்தைத் தற்காலத்துப் பாபிலோன் என்றழைக்கக்கூடியதாக அது அவ்வளவு சிறப்புடையதாயிருந்தது. லண்டன், தெம்ஸ் (Thames) ஆற்றின் இருபக்கங்களிலும் அமைந்திருப்பது போலவே, பாபிலோன், ஐபிராத்து ஆற்றின் இருபக்கங்களிலும் செங்கல்களால் கட்டப்பட்ட கைபிடிசுவர்களுடனும் படித்துறைகளுடனும் இருபக்கங்களிலும் விசாலமான பாதைகளுடனும் பாதைகளின் பக்கங்களில் உன்னதமான மூன்று நான்கு அடுக்கு மாளிகைகளுடனும் வெகு ஒழுங்காகக் கட்டப்பட்டு, மிக அழகான தோற்றமுடையதாயிருந்தது. இதின் நடுமத்தியில் இருபாகத்தையும் இணைக்கக்கூடிய ஒரு பெரிய பாலம் வெகுபலமாகவும் உன்னதமாகவும் கட்டப்பட்டிருந்தது. சமமான இடத்தில் சரிசதுரமாகப் பக்கத்துக்குப் பக்கம் 15 மைல் அளவுடன் 225 சதுர மைல் பரப்புள்ளதாகக் கட்டப்பட்டது. இப்பட்டணம் மொத்தத்தில் 625 சரிசதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, அவைகள் ஒவ்வொன்றும் 25, 25 தெருக்களாக வகுக்கப்பட்டிருந்தது. பெரும் தெருக்கள் ஒவ்வொன்றும் நதியின் இருபக்கங்களிலும் வந்துசேரும்படி நேர்நேராக அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றும் பிரமாண்டமான பித்தளைக் கதவுகளுடையதாயிருந்தது. நிலைகளும் கதவுகளும், முற்றிலும் பித்தளை. அதுபோலவே கோட்டையின் 120 கதவுகளும் முழுதும் பித்தளையினால் ஆகியவை. இப்பட்டணத்தைச்சுற்றிலும் 75-அடி உயரமும் மேல்பாகத்தில் 32-அடி அகலமுமுடையதாக பிரமாண்டமான கோட்டை கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓடிய ஆற்றின்ஜலம் அதிகமாகுங் காலத்தில் வடிந்துபோகிறதற்காகக் கோட்டைக்கு வெளியே 40 மைல்சரிசதுரமும் 1600 சதுரமைல் விஸ்தீரணமும் 35-அடி ஆழமுமுள்ள ஒரு பெரிய குளமும், பட்டணத்தைச் சுற்றிலும் 200 முழ ஆழமும் 50 முழ அகலமுமான அகழும் வெட்டப்பட்டிருந்தன. சாமக்காரர்களிருக்கும்படி கட்டிய கோபுரத்தின் நடுமத்தி வழியாகக் கோட்டையின்மேல் 4 குதிரை பூட்டிய பெரிய ரதங்கள் தாராளமாய்ச் சுற்றி வரும்படி பாதையுமிருந்தது. கோட்டையின் நடுமத்தியில் வட்டமான இரண்டு உள்கோட்டைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில், ராஜனுடைய அரண்மனையும் அதைச்சேர்ந்த உத்தியானவனங்களும், மற்றொன்றில், பீலஸ் என்னும் சுக்கிரபகவானுக்குக் கட்டிய ஆலயமும் மிகப்பிரமாண்டமாயிருந்தன. அவ்வாலயத்தில் மிகவும் உயரமான பித்திளைக்கதவுகள் அநேகமிருந்தன. அதன் நிலைகளும் படிகளும் எல்லாம் பித்தளை. உள்பாகத்தில் அனேக பிராகாரங்கள் மிகவும் நேர்த்தியாய் அமைக்கப்பட்டிருந்ததோடு அதிலுள்ள விக்கிரகங்களும் அவ்வாலயத்தின் தட்டுமுட்டுகளும் சமையல் பாத்திரங்களும் முற்றிலும் பசும்பொன்னாகவிருந்தன. இரவு பகல் இன்னதென்று அறியமுடியாமல் மயங்கும்படி அதிக ஜனப்பழக்கமுள்ளதாகவும் வியாபாரம் பெருத்ததாகவும் அந்நகரம் விளங்கிற்று. அங்குள்ளோர் உயர்ந்த ரத்தினக் கம்பளங்கள் மெல்லிய சால்வைகள் அரசர்களுக்குரிய பீதாம்பர முதலிய உயர்ந்த வஸ்திரங்கள் செய்வதில் மிகவும் கை தேர்ந்தவர்களாயிருந்தார்கள். இற்றைக்கு 3365 வருஷங்களுக்கு முன் இஸ்ரவேல் ஜனங்களால் அழிக்கப்பட்ட எரிகோ பட்டணத்தில் (யோசுவா 7-21ல்.)

"கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 சேக்கல் வெள்ளியையும் 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் நான் கண்டு அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்."

என்று ஆகான் சொல்லியிருக்கிறதைப் பார்க்கும்பொழுது, மிகுந்த பூர்வகாலத்திலேயே மிக அலங்காரமான சாயங்களுடன் நாணயமான வேலைப்படுடையதாய் மற்ற தேசத்தவர் விரும்பும் படியான விலையுயர்ந்த வஸ்திரங்கள் நெய்யப்பட்டு வந்தனவென்பது வெளியாகிறது.

மேலும், பட்டணத்தின் நடுமத்தியில் வானமளாவிய உயரத்துடனும் மிகுந்த விஸ்தாரத்துடனும் ஆகாயத்தில் தொங்குவதுபோல் காணப்படும் ஒருதோட்டமிருந்தது.