பக்கம் எண் :

17
ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள ஏனோக், நோவா என்னும் உத்தமர்களின் தபசு.

இற்றைக்கு 2435 வருஷங்களுக்குமுன் நடந்த ஒரு தோட்டக் கச்சேரியின் (Garden Party சிறப்பும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்புப்பொருந்திய அகாஸ் வேருவின் ராஜ்யமும் சூசான்பட்டணத்துடன் பின்னொரு காலத்தில் அழிந்துபோயிற்று.

இவை யாவற்றையும் நாம் கவனிக்கையில், ஜலப்பிரளயத்தின்பின் நிமிரோத் மிகவும் பிரபலமான பட்டணங்களைக் கட்டினான் என்பதும், பிரபலமான சில பட்டணங்கள் அவன் ராஜ்யங்களில் தலைநகர்களா யிருந்தனவென்பதும், நம்முடைய கவனத்திற்கு வராமல்போகா. அப்பூர்வ காலத்திலே, தற்கால நாகரீகமுடையோரும் மிகவும் வியந்து பாராட்டக்கூடிய காரியங்கள் அநேகம் இருந்ததாகக் காணலாம். பாபிலோனது விஸ்தீரணமும், அதன் அமைப்பின் ஒழுங்கும், தொங்குதோட்டமும், பெரிய யந்திரமும் Engine), எண்ணிறந்த பித்தளைக் கதவுகளும், பிரமாண்டமான ஏரியும், 60 முழ உயரமும் 6 முழ அகலமுமுள்ள பொற்சிலையும், அக்காலத்திலிருந்த வாத்தியக்கருவிகளும், அவைகளை உபயோகித்தமுறையும், 70 முழ உயரமுள்ள கோட்டையும், அதைச்சுற்றியுள்ள அகழியும், மிகுந்த வியப்பைத் தராமல்போகா. அக் காலத்தில் மிகவும் ஏராளமான ஜனங்களுக்கு 6 மாதம் அல்லது 180 நாள்வரைக்கும் தொடர்ந்து செய்யப்பட்ட ராஜவிருந்தும் அரமனைத் தோட்டவிருந்தும் அம்மண்டபத்தின் சிறப்பும் ஸ்திரீகளுக்கென்று ராஜஸ்திரீயால் செய்யப்பட்ட விருந்தும்போலத் தற்காலத்தில் நாம் காண்பது இலேசான காரியமோ? ஜலப்பிரளயத்திற்குமுன் 900, 930, 960 என்னும் நீண்ட ஆயுளோடு இருந்த ஜனங்களும் ராக்ஷதர்களும் பலவான்களும் பிரளயத்தினால் அழிந்தபின், மனிதர் 120, 100, 80, 70 என்னும் குறுகிய ஆயுளுடையவர்களானார்கள். பிரளயத்திற்குப் பின்னுள்ளவர்களே இவ்வளவு பிரபலமாக இருந்திருப்பார்களென்றால், சுமார் ஆயிரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட வருஷம் ஆயுள்பெற்ற வீரர்களும் ராக்ஷதர்களும் கட்டிய பட்டணங்கள் எவ்வளவு பெரியவைகளும் சிறப்புடையவைகளுமாக இருந்திருக்க வேண்டும்? உலகத்தில் முதல்முதல் பிறந்த ஒரு மனிதன் ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத் தன் மகன்பெயரை யிட்டானென்று சொல்வது, சற்று யோசனைக்கிடமாயிருக்கிறது. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள காலத்தை ஒரு யுகத்தின் கடைசியாக வைத்துக்கொள்வோமானால், அவர்களுக்குப் பட்டணங்களும், நீண்ட ஆயுளும், கின்னரம் நாகசுரம் முதலான வாத்தியங்களின் விருத்தியும், இரும்பு பித்தளை முதலிய கைத்தொழில்களின் மிகுதியும் இருந்தனவென்று சொல்லத் தகுதியாயிருக்கும்.

13. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள ஏனோக், நோவா என்னும்
 உத்தமர்களின் தபசு.

மேலும், மனிதர்கள், ஜலப்பிரளயத்திற்குமுன் எப்படி அதிக ஆயுளும் திறமையுமுடையவர்களாயிருந்தார்களோ, அப்படியே தெய்வ பக்தியிலும் மேம்பாடடைந்திருந்தார்களென்று தெளிவாய் அறிகிறோம். உலகை வெறுத்துத் தெய்வத்தோடேயே சஞ்சரித்துக்கொண்டிருந்து உயிரோடே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கின் தபசும், அக்காலத்திலி ருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய்த் தெய்வத்தோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, 300 முழ நீளமும் (தற்கால முழமல்ல) 50 முழ அகலமும் 30 முழ உயரமுமான மூன்று அடுக்குள்ள பேழையென்னும் கப்பலைச்செய்து கொண்டு, மற்றவர்கள் பாவவழியை விட்டு மனந்திரும்பப் பிரசங்கம்செய்து, ஜலப்பிரளயத்திற்குப் பின்னுள்ள ஜனத்திரளுக்கு முதல்வனான நோவாவின் பக்தியும், விளங்கியது அந்தப் பூர்வகாலத்திலேயே.