எந்தச் சுருதியாவது சங்கீத ரத்னாகரத்தில் சொல்லியிருக்கும் துவாவிம்சதி சுருதி கணக்குக்கு ஒத்திருக்கவில்லையென்று காண்கிறேன். வெகுகாலமாய் வழங்கி வந்த முறையில் சில சந்தேகங்களை நீக்க நினைத்து அதையே முற்றிலும் மாற்றும்படியாக நினைப்பது நியாயமல்ல. மேலும் சுருதிகளைப் பற்றி வெவ்வேறு விதமாய் அபிப்பிராயம் சொல்லுவதற்குரிய நியாயங்கள் திட்டமாய்ச் சொல்லப்படாமையையும் சொல்லப்பட்டவைகளும் ஒரு ஒழுங்கை அனுசரிக்கப்படவில்லை என்பதையும் காண்கிறேன். சங்கீத ரத்னாகரருடைய சூத்திரங்களுக்குச் சரியாக அர்த்தம் பண்ணப்படவில்லை என்று நன்றாய்ப் புலப்படுகிறது. வடதேசத்தில் வழங்கி வரும் கானத்தின் மத்தியிலிருக்கும் கனவான்கள் சுருதியைப் பற்றி எழுதியிருக்கும் வெவ்வேறு அபிப்பிராயங்களைப் பார்த்தால், தற்காலத்தில் வழங்கிவரும் கானம் அல்லது சங்கீத ரத்னாகரருடைய அபிப்பிராயம் என்ற இரண்டில் ஒன்று தவறுதலுடையதாயிருக்க வேண்டும். மிக நுட்பமான ஒரு முறையை மிகவும் சுலபமான வார்த்தைகளால் சொன்னாரேயொழிய கடினமான வார்த்தைகளில் அவர் சொல்லவில்லை. எல்லாரையுங் காணக்கூடியதும், எல்லாருங் காணக்கூடியதுமான தனது கண்ணை, ஒருவன் தானே காணாதிருக்கிறது எப்படியோ அப்படியே எல்லாருக்கும் இலகுவாய் விளங்கக்கூடிய இவ்விஷயமுமிருக்கிறது. இவ்விஷயத்தில் சாரங்கர் முறைப்படி செய்கிறோமென்று சில அம்சங்களில் ஒத்து அர்த்தம் பண்ணும் சகஸ்திரபுத்தி, ராஜா சுரேந்திர மோகனதாகூர் போன்ற முதல் வகுப்பாரையும், இந்துஸ்தான் கீதமுறைப்படியென்று அர்த்தம் பண்ணும் தேவால், கிளமெண்ட்ஸ் போன்ற இடைவகுப்பாரையும், மேற்றிசைச் சங்கீதத்தில் வழங்கும் சுரங்களையும், மற்றும் அவாந்தர சுரங்களையும் கலந்து இதுதான் கர்நாடக சங்கீதம் என்று சொல்லும் கடைவகுப்பாரையும், அவர்கள் முறைகளையும் இன்னவையென்று சுருக்கமாய் விசாரித்து அதன்பின் சங்கீத ரத்னாகரருடைய சரியான அபிப்பிராயம் இன்னதென்று தெரிந்துகொண்டு, கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பார்ப்பது நல்லதென்று தோன்றுகிறது.
|