என்பது இசைக்குப் பிறப்பிடமாயுள்ள ஆதாரமுணர்த்து கின்றது. சரீரத்தளவு தன்கையால் தொண்ணூற்றாறங்குலம். இதனுள் மேலே நாற்பத் தேழரை யங்குலமும் கீழே நாற்பத் தேழரை யங்குலமும் விட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம். இதன் மேலே நால் விரல் விட்டுப் பின்னாதார நின்றியங்கு மெனக் கொள்க. “ஆதாரம் பற்றி யசைவ முதலெழுத்து மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால் வந்துமே லோசையாம் வைப்பு” “ஐவகைப் பூதமு மாய சரீரத்து மெய்பெற நின்றியங்கு மெய்யெழுத்தாற்-றுய்ய வொருநாடி நின்றியங்கி யுந்தமே லோங்கி வருமா லெழுத்துடம்பின் வந்து” மேற்கண்ட “பூத முதற் சாதனத்தால்.......................தோற்ற மிசைக்கு” முதலிய செய்யுட்களில் ஐந்து பூதங்களையும், ஐந்து பொறிகளையும், ஐந்து புலன்களையும் அதில் ஐந்தைந்தாய்ப் பிரிந்த ஐந்து பூதங்களின் செயல்களையும் தச வாயுக்களையும் அவற்றின் செயல்களையும் சொல்லுகிறார். மானுட சரீரம் அவரவர் கயினால் எட்டுச்சாண் என்றும் ஒவ்வொரு சாண் பன்னிரண்டு விரற்கடையாக 96 விரற்கடை உயரமென்றும் இதில் நாற்பத்தேழரை விரற்கடை மேலும் கீழுமாகவிட்டு நடுமத்தியில் நின்ற ஒரு விரற்கடை மூலாதாரமாகவும் கணக்குச் சொல்லி இதிலிருந்தே இசை பிறக்கிறதென்று சொல்லுகிறார். வராகோபநிஷத் பக்கம் 405. சகல ஐந்துக்களுடைய தேகமானது தொண்ணூற்றாறு அங்குல முள்ளதாக விருக்கிறது. அதின் மத்தியில் அபான ஸ்தானத்திற்கு இரண்டங்குலத் திற்குமேலும் மேட்டிரத்திற்கு இரண்டங்குலத் திற்குக் கீழும் மத்தியப்பிரதேசமென்று சொல்லப்படுகிறது. இவ்விடத்தை நாம் கவனிக்கையில் அவரவர் சரீரத்தின் அளவின்படியே யாழ் செய்யப்படவேண்டும் என்றும் மேருமுதல் மெட்டுவரை நாதம் பிறக்கும் தந்தியின் நீளமிருக்க வேண்டுமென்றும் தெரிகிறது. யாழின் அமைப்பையும் அதில் பிராணனாய் விளங்கும் ஓசையின் அமைப்பையும் நாம்கவனிப்போமானால் தூலத்தில் வடிவாகவும் சூக்குமத்தில் ஓசை வடிவாகவும் யாழ் மானுட சரீரத்திற்கும் பிராணனுக்கும் ஒத்திருக்கிறதென்று காண்போம். மேலும் சரீரமானது தெய்வத்தை இனிய பண்களுடன் துதிப்பதற்கு ஏற்றவிதமாய் அமைக்கப்பட்டிருக்கிறதென்றும் எக்காலத்திலும் தெய்வத்தை துதிப்பதே என்றும் நினைத்து இச்சரீரத்தை ஒத்திருக்கும் யாழைத் துணை கொண்டு கடவுளைவழிபடும் உத்தமர்கள் முத்திபதத்தையே பெறுகிறார்களென்ற கருத்தடங்கிய சுலோகங்களைச் சாமவேதத்தின் துவக்கத்திலேயே காண்கிறோம்.
|