சங்கீதத்திற்குரிய இவ்வுன்னதமான நிலையை அறிந்துகொள்ளாத மற்றவர் விவாதி சுரங்களையும் சேர்த்துச்சொல்லும் வழக்கத்துக்குள்ளாய் பூர்வ இராகங்களின் சிறப்பைக் குறைத்துக் கொண்டும் வருகிறார்கள். அப்படிக்கலப்புச்சுரம் பாடிக்கொண்டு வருபவர்களுக்கு இது கடினமாகத் தோன்றும். சங்கீதத்திற்குரிய மார்க்கம் செல்வோருக்கு இது தேசிகமாகிறது தேசிக இராகங்களைப் பழகுகிறவர்களுக்கு அவற்றிற்குரிய மார்க்கம் தெரியாமையால் அவை தேசிகத்திலும் தேசிகமாகிவிடுகின்றன. பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த கானமுறையே மார்க்கமாம். இதுவே எண்ணிறந்த இராகங்கள் உண்டாகுவதற்கும் உண்டாயிருக்கும் இராகங்களைத் திருத்திக் கொள்வதற்குமுரிய விதிவகைகளை யுடையதாயிருக்கிறது என்று இதன் முன் மூன்றாம் பாகத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். பூர்வதமிழ் மக்கள் வழங்கி வந்த யாழ்வகைகளைப்பற்றியும் பாடிவந்த 12,000 ஆதி இசைகளைப்பற்றியும் கிரக சுரம் மாற்றும்போது பிறக்கும் பன்னிருபாலையைப் பற்றியும் அவற்றில் பெரும்பாலை ஏழைப்பற்றியும் அவைகளே தற்காலத்தில் பாடப்பட்டுவரும் இராகங்கள் என்பதைப் பற்றியும் இதன் முன் பார்த்திருக்கிறோம். அதில் வழங்கி வரும் ஏழு சுரங்களுக்கும் பன்னிரு அரைச்சுரங்களுக்கும் 24 சுருதிகளுக்கும் இராக அட்டவணையும் பார்த்திருக்கிறோம். இவைகளில் வழங்கும் கணக்குகளையும் சோதிடம் வைத்தியம் உடற்கூறு இசை முதலிய கலைகளில் வழங்கி வந்திருக்கிறார்களென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். இது போலவே ஆயப்பாலையில் வழங்கி வரும் பன்னிரு சுரங்களுக்கும் வட்டப்பாலையில் வழங்கும் 24 சுருதிகளுக்கும் மற்றும் பண்களில் வழங்கி வரும் நுட்பமான சுருதிகளுக்கும் கணிதமுறை பார்க்க வேண்டியதும் மிக அவசியமென்று தோன்றுகிறது. ச-ப ஒரு தந்தியின் 2/3என்றும் ச-ம3/4என்றும் சித்தாந்தப் படுத்திக்கொண்டு 2/3, 2/3X2/3 என்றும், 3/4, 3/4X3/4என்றும் ஒன்றோடொன்று பெருக்கிக் கொண்டு போகையில் ஒழுங்கற்ற சுரஸ்தானங்கள் வருவதினால் ஒன்றில் கொஞ்சம் கூட்டியும் ஒன்றில் கொஞ்சம் குறைத்தும் சொல்லு பலகணக்குகளும் தவறுதலானவையென்று சொன்னது போலவே அவைகளுக்குச் சரியான கணக்கும் காட்ட வேண்டியதாயிருக்கிறது. இதில் முதல் முதல் இசைத்தமிழில் வழங்கி வரும் ஏழு சுரங்களைப் பற்றியும் அதன் பின் ஆயப்பாலையில் வழங்கிவரும் பன்னிரு சுரங்களைப் பற்றியும் வட்டப்பாலையில் வழங்கி வரும் இருபத்துநான்கு சுருதிகளைப் பற்றியும் அதன் பின் நுட்பமான சுருதிகளைப்பற்றியும் அதன் பின் அவைகள் தற்காலம் பாடப்பட்டு வரும் அந்நியபெயரோடு இராகங்களில் ஏதெதில் வழங்கி வருகின்றனவென்பதைப்பற்றியும் சிலபார்க்கவேண்டும். அதில், இரண்டாவதுபாகம் 512-ம் பக்கத்தில் சுருதிகள் இத்தனை யென்று நிச்சயிக்கும்போது கவனிக்கவேண்டிய இரண்டு முக்கிய குறிப்புகளின்படி இங்கே செய்யப்படவேண்டும் அதாவது :- (1) சுரங்கள் சுருதிகள் காண்பதற்குச் சொல்லு சாரங்கர் சுருதி முறைப்படியும் (2) மேற்றிசை விற்பன்னர்களும் இந்தியாவின் சங்கீதத்தைப்பற்றிச் சொல்பவர்களும் சொல்லும் ச-ப 2/3 ச-ப 3/4என்ற அளவு முறைப்படியும் வரவேண்டும்.
|