| வேறொரு வகையாக எண்ணுவது குற்றம் என்றும், அறியாமை என்றும் முதல் பாடம் கற்பிக்கப்பட்டு இடையிடையே எச்சரிக்கையாகவும் புகட்டப்படுகின்றது. காரணம், இன்றைய அமைப்பில் கலையைப் பற்றிக் கொண்டு வாழ்வோர் அது மாறினால் தம் வாழ்க்கை மாறுமே என்று அஞ்சி உரிமையைத் தடை செய்கின்றார்கள். ஒரு சமயத்தைப் பற்றிக்கொண்டு அதனால் வாழ்க்கை நடத்துகின்றவர்கள் எந்த மாறுதலும் தம் வாழ்க்கையை அசைக்குமே என்று அஞ்சி உரிமையைத் தடை செய்கின்றார்கள். அரசியலில் ஒரு கட்சியைப் பற்றிக் கொண்டு முன்னேறியவர்கள் மாறுதலுக்கு இடம் கொடுத்தால் வரக்கூடிய வீழ்ச்சியை எண்ணி உரிமையைத் தடை செய்கின்றார்கள். எந்தக் கலை வந்தாலும், எந்தச் சமயம் வாழ்ந்தாலும் எந்த அரசியல் அமைந்தாலும் வாழ்க்கை உண்டு. வீழ்ச்சி இருக்காது என்று பொருளாதார நம்பிக்கை இவர்களுக்கு ஏற்படச் செய்ய வேண்டும். அதே நம்பிக்கை இருந்தால், எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஒழிந்து, எந்தக் கொள்கையையும் கற்று ஆராய இடம் தருவார்கள். வெறி இல்லாமல் அறிவு பெற இடம் தருவார்கள். கலை வெறி, சமயவெறி, கட்சி வெறி இவை ஒழியும். கலை அறிவும் சமய அறிவும் அரசியல் அறிவும் வளரும்; தனி உரிமை ஓங்கும். கருத்தை வளர்ப்பதற்கு உரிய உரிமை கிடைத்ததும் கருத்தை வெளியிடும் உரிமையும் கிடைக்கும். வளர்க்கும் உரிமையைத் தடைப்படுத்தினால் அறிவு குன்றி வெறி வளரும் என்று கண்டோம் அல்லவா? வெளியிடும் உரிமையைத் தடைப்படுத்தினால், அதைவிடப் பொல்லாத தீமை வளரும். குழந்தைக்கு வெளியுலகம் தெரியாமல் |