என்பதைப் புலவர் உணர்ந்திருக்க முடியாது. ஆகவே வாளைமீன் அஞ்சியதாகக் கூறியது புலவரின் கற்பனை ஆகும். இறால்மீன் உப்பங் கழியில் திரிந்தபோது ஒருநாரை அதைப்பற்றித் தின்ன முயன்றது. இறால்மீன் அதற்கு அகப்படாமல் எவ்வாறோ தப்பி ஓடியது; அதன்பிறகு வழி ஓரமாக வளர்ந்திருந்த தாழை மரத்தின் வெண்ணிறமான பூவைக் கண்டது. அந்த வெண்ணிறப் பூ நாரை போலவே தோன்றியதால், நாரையின் பிடியிலிருந்து தப்பிய மீன் அதைக் கண்டதும் அஞ்சியது. கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை... துறுகடல் தலைய தோடுபொதி தாழை வண்டு வான்போது வெரூஉம்...1 இதுவும் புலவர் உள்ளத்தைக் கொண்டு உணர்ந்ததைப் படைத்து அமைந்த கற்பனை ஆகும். அதனால்தான் இறால் மீனின உள்ளம் உணர்ந்தவர் போல, அது தாழம் பூவைக் கண்டு அஞ்சியதாகக் கூறியுள்ளார். அவ்வாறு உயர்வு நவிற்சியாக அமைவனவற்றையும் உண்மை பிறழ்ந்தனவாக அமைவனவற்றையும் ஆராய்ந்து, எது உண்மை யோடு இயைந்த கற்பனை, எது வெறுங் கற்பனை எனப் பகுத்தறிவது அரிய முயற்சியே ஆகும். உண்மைக் கற்பனை என்று சிலர் கருதுவதனையே வேறு சிலர் வெறுங் கற்பனை என்று கருதுதல் கூடும். வெறுங் கற்பனை என்று சிலர் ஒதுக்குவதனையே வேறு சிலர் உண்மைக் கற்பனை என்று போற்றுதலும் கூடும். ஆராய்ச்சி யாளரின் நடுநிலைமையும் பயிற்சியும் உண்மை நாட்டமுமே தெளிவு நல்க வல்லன. மாற்றலும் திரித்தலும் மலையில் வாழ்ந்த குன்றவர் பெண் ஒருத்தி பிறைச் சந்திரனைக் கையால் எட்டிப் பிடித்தாளாம். கண்ணாடி போல் ஒளி வீசிய அந்தப் பிறைக்குக் களங்கம் இருப்பதைப் பார்த்து, அதற்கு அது பொருந்தாது என்று அந்தக் களங்கத்தைத் துடைக்க முயன்றாளாம், 1. நற்றிணை, 211 |