பக்கம் எண் :

16இலக்கியத் திறன்

Untitled Document

மரபிற்கு   ஏற்ற   கல்வி  கற்பதுதான் மிக்க பயன் உடையது' என்று
நிறுத்துக் கூறுவது அறிவியல்.
 
     'என்     நெஞ்சமே!  நீ   காதலரை   நாடிச்     செல்கிறாயே
உன்னுடன்    இந்தக்    கண்களையும்   அழைத்துக்கொண்டு  செல்.
அவரைக்     காண   வேண்டும்  என்று  இந்தக் கண்கள்  என்னைத்
தின்கின்றன '    என்பது   கலை*. ' என்      மனம்      காதலரை
விரும்புகின்றது .   என்   கண்களால் அவரை காண விரும்புகின்றேன்'
என்று    உரைப்பது அறிவியல்.

வேறுபாடுகள்

     அறிவியலுக்கும் கலைக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு
எடுத்துரைக்கலாம்:

     உள்ளதை   உள்ளவாறு     அறிவிக்க   முயல்வது அறிவியல்
(Science).    உள்ளதை    உணர்ந்தவாறு உணர்த்துவது கலை (Art).
கருவிகளால்   அளந்து      வரையரைத்துக்    கூறுவது அறிவியல்.
அவைகளைப்    பற்றிக்      கவலைப்படாமல்  உணர்ச்சியால் வாரி
வழங்குவது கலை.

     அறிவும்    ஆராய்ச்சியும்    கொண்டு  வளர்வது   அறிவியல்.
உணர்ச்சியும்.  கற்பனையும்   கொண்டு வளர்வது கலை.ஊன்றி நின்று
நடப்பது   போன்றது    அறிவியல். தாவிப் பறப்பது போன்றது கலை.

     கணக்குப்   போல்     எதையும்   நுண்மையாக்கிக்   கூறுவது
அறிவியல்.சிற்பம்  ஓவியம்  முதலியன போல் எதற்கும் உருவம் தந்து
உணர்த்துவது   கலை.    கருப் பொருளை விளக்குவதற்கும் நுண்மை
நாடுவது   அறிவியல்.     நுண்   பொருள்களாகிய  கருத்துகளுக்கும்
உருவம் தந்து விளக்குவது கலை.

     மனம்   பற்றற்று    நின்று   எந்தப் பொருளையும் ஆராய்ந்து
விளக்குவது    அறிவியல்.    ஒரு    பொருளில்  விருப்பு  அல்லது
வெறுப்புக்    கொண்டு  மனம்  ஈடுபட்டு உணர்த்துவது கலை. மனித
உடம்பே    ஆயினும்,  மனமே  ஆயினும், பற்றற்ற நிலையில் நின்று


     * கண்ணும்கொளச்சேறி நெஞ்சே இவை என்னைத்
        தின்னும் அவர்க்காண லுற்று.
                                    -திருக்குறள்,124.