காலத்தால் உணர்ச்சிகள் பண்பட்டுத் திருந்தும் என்பதற்கு எடுத்துக் காட்டுக் காணலாம்.ஒரு நாட்டின்மீது மற்றொரு நாடு படையெடுத்துச் செல்வதற்குக் காரணமான நாட்டுத் தலைவனுடைய உணர்ச்சியும ்படைவீரரின் உணர்ச்சியும் பழங்காலத்தில் போற்றப்பட்டன; திணை, துறைகள் வகுத்துப் பாராட்டப்பட்டன; ஆயின் அந்த உணர்ச்சிகள் இன்று மதிப்பிழந்துவிட்டன. ஆகவே, அவற்றை இன்று பாடுவார் எவரும் இல்லை. பகைவர் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்தல், நாட்டைக் காவல் புரிவோரைக் கொல்லல் முதலியன 'எரிபரந் தெடுத்தல்' 'அடுத்தூர்ந்தட்ட கொற்றம்' முதலிய துறைகளாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம்.* 'பகைவரின் நாட்டைச் சுடும் புகையால் உன் மாலை வாடுவதாக' என்று பாண்டின் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திக் காரிகிழார் பாடியுள்ளதும், 'பகைவருடைய ஊர்களைச் சுடும் தீயின் ஒளியில்' அவர் தம் சுற்றத்தைக் கூவி அழும் அழுகை ஆரவாரத்தைக் கேட்க விரும்புவாய்' என்று சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியுள்ளதும், பகைவருடைய தேர் ஓடிய தெருக்களில் கழுதை ஏர் பூட்டி அவர் களின் நல்லஅரண்களைப் பாழ்படுத்தினாய்; அவர்களின் வளமான வயல்களில் உன் குதிரைகளின் குளம்புகள் தாவுமாறு தேர் செலுத்திப் பாழ்படுத்தினாய்' என்று முன் குறித்த பாண்டியனை நெட்டிமையார் பாடியுள்ளதும் இக்காலத்தினர் போற்றிப் பாராட்ட இயலாத உணர்ச்சிகளாக உள்ளன. அவை விரும்பும் உணர்ச்சிகளாகப் பழங்காலத்தில் போற்றப்பட்டன. இக் காலத்திலோ அவை நாகரிகக் குறைவான விலங்குணர்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.** இது காலத்தால் நேர்ந்த மாறுதலாகும், * தொல்காப்பியம், புறத்திணையியல், '63. ** வாடுக இறைவநின் கண்ணி ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே. -புறநானூறு,6. |